Skip to main content

வெறும் பூரி... கை பம்ப்பில் குளியல்... ஓவியங்களை வரைந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட சிவக்குமார்

Published on 13/12/2018 | Edited on 13/12/2018

இலக்கியத்தில் உயரிய விருதான சாகித்ய அகாதமி விருது, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு அவரின் சஞ்சாரம் நாவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு பல் வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு அங்கமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் ரஷ்ய கலாச்சார் மையம் சார்பாக கடந்த 11-ம் தேதி ‘படைப்பாளர்களின் பாராட்டு விழா’ எனும் விழா நடந்தது. இதில், எழுத்தாளர் ச.கந்தசாமி, திரைக்கலைஞர் சிவக்குமார், கலை விமர்சகர் இந்திரன் மற்றும் சிலர் பங்குப் பெற்றனர். அதில் நடிகர் சிவக்குமார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பரிசு வழங்கினார். மேலும் அவரின் ஓவியங்களைப் பற்றியும் அதனை வரையும்போது அவருக்கு ஏற்பட்ட நிகழ்வுகளையும் பகிர்ந்துக்கொண்டார். அவர் பேசியதிலிருந்து. 

 

 

ss

 

 

எஸ்.ராமகிருஷ்ணன் மாணவர் நிருபராக இருந்தபோதே அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பணம் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை, அவர் ஒரு நாடோடிபோல்தான் வாழ்வார். இருக்கின்ற காசை வைத்துக்கொண்டு காடுகளிலும், மலைகளிலும், இரயில்களிலும் படுத்துக்கொண்டு வாழ்க்கையை அனுபவித்து எழுதக்கூடிய ஒரு அற்புதமான மனிதர். நான்கு வருடங்களாக நான் மகாபாரதத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது இவரின் ’உப பாண்டவம்’ புத்தகம் வீட்டுக்கு வந்துவிட்டது. ஆனால், அதை நான் இன்னும் படிக்கவில்லை. காரணம் எனக்கு வியாசரின் பார்வையில் மகாபாரதம் வேண்டும். இவரின் புத்தகத்தைப் படித்தால் ராமகிருஷ்ணனின் பார்வையில் மகாபாரதம் சென்றுவிடும் என்று அதை படிக்கவில்லை. உலக சினிமா என ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் நூறு சிறந்த படங்களின் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் பேட்டிகண்டு எழுதியிருக்கிறார். இவர் எதினுள் சென்றாலும் அதில் ஆழ்ந்து அறிந்து எழுதக்கூடியவர்.

 

இலக்கியத்தைப் படிப்பதற்கென ஒரு வயசு இருக்கிறது, அந்த வயசில் நான் முழுசா ஓவியத்திற்கு போய்விட்டேன். பொதுவாக இலக்கியத்தின் மீது ஈடுபாடு என்பது கல்லூரி காலங்களில்தான் வரும். ஆனால், நான் இருபத்தி ஐந்து வயசு வரை ஓவியக் கலைக்குள்ளே இருந்துவிட்டேன். இந்திரன், ”எட்டு மணிநேரம் தஞ்சாவூர் கோவிலை வரைவேன்னு சொன்னிங்க, அது எப்படி சன் லைட் மாறிக்கிட்டே இருக்குமே” என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு முதலில் பதில் சொல்லிவிடுகிறேன். எடுத்தவுடன் முதலில் ஸ்கெச் போட்டுவிட்டு, லைட் அண்ட் ஷேடு வரைந்துவிடுவேன். முதலில் 7.30 மணிக்கு சன் லைட் எங்கெல்லாம் படுகிறதோ அதையெல்லாம் முதலில் வரைந்துவிடுவேன். அப்போது அதை விட்டுவிட்டால் ஓவியம் தவறாகவந்துவிடும். ஏனென்றால் மதியம் இரண்டு மணிக்குமேல் சன் லைட் கோவிலுக்கு பின்பக்கம் சென்றுவிடும், மொத்த தஞ்சாவூர் கோவிலே கருப்பாக தெரியும். அதனால் முதலில் 7.30 முதல் 8.30 மணி வரை உட்காந்து லைட் அண்ட் ஷேடோவை முடித்துவிட்டு அதற்கு அப்புறம் எட்டு மணிநேரம் உட்காந்து மற்றவற்றை வரைவேன்.

 


அதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை எட்டு மணிக்கு உட்காந்து மாலை ஆறு மணிவரை சிங்கிள் சிட்டிங்கில் உட்காந்து, மதிய சாப்பட்டை கட் பண்ணிட்டு ஒரே சிட்டிங்கில் வரைந்தேன். அப்போ அக்னி வீரபத்தரர் சிலைக்கு பின்னால் ஒரே ஒரு 25 வாட்ஸ் பல்ப் போட்டிருப்பாங்க. அதனால் அந்த பல்ப் வெளிச்சத்தில் முதலில் என்ன தெரிகிறதோ அதை வரைந்துவிடுவேன். அதன் பிறகு பன்னிரண்டு மணிக்கு மொத்தமா லைட் எல்லாம் ஆஃப் செய்துவிடுவாங்க, ஜனங்களையும் வெளிய அனுப்பிடுவாங்க. அதுக்கு அப்புறம், கிட்ட கண்ணுக்கு என்ன தெரிதோ அதை வரைவேன்.

 

ss

 

 

திருவண்ணாமலை கோவில் வரையும்போது முதலில் மூன்று மணி நேரம் மேகங்கள் புறப்பட்டு வரும்போது வேகமாக மேகத்தை வரைந்துவிட்டு அதன் பிறகு மற்றதை வரைந்தேன். திருவண்ணாமலை ஜோதி ஏற்றும் மலை மீது உட்காந்து, செஞ்சிக்கோட்டை 22 மைலுக்கு அந்தப்பக்கம் இருக்கும், அதற்கு முன் லேசா புகை போவதுபோல் மலை, அதுக்கு அப்புறம் காஞ்சிபோன நிலம், காடு என மொத்தமாக வரைவதற்கு கிட்டத்தட்ட ஒன்னேமுக்கா மணிநேரம் ஆகும். கோபுரங்களை வரைவது மிகவும் சுலபம். இதுபோல் என் வாழ்வில் முதல் இருபத்தி ஐந்து ஆண்டு காலத்தில் ஏழு ஆண்டுகள் ஓவியக் கலைக்கு ஒதுக்கிவிட்டேன். அது எனது 75-வது ஆண்டிற்கு புத்தகமாய் போட்டாங்க, யாருக்காவது கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்றால் எனது 25 வாழ்க்கையை பதிவு பண்ணக்கூடிய அந்தப் புத்தகத்தை தருவேன். அதையே உங்கள் சார்பில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு கொடுக்கிறேன்.

 


1964-ல் கடைசி வருஷம், கன்னியாகுமரியில் ஒரு அரை மணிநேரம் உட்காந்திருந்திங்கனா கிட்டத்தட்ட நூறு, இரநூறு அலைகள் வரும். உங்களுக்காக எந்த அலையும் காத்திருக்காது. அப்போ வரும் எல்லா அலைகளையும் மைண்டில் உள்ளவாங்கிக்கிட்டு, வரையும்போது எந்த அலை உங்க மைண்டில் வருதோ அந்த அலையைத் தொடர்ந்து அடுத்த அலை எப்படிவரும் என்று வரைய வேண்டும். அதுபோல்தான் நான் இரண்டரை மணிநேரத்தில்  கன்னியாகுமரி கடலை வரைந்தேன். இதை அவ்வளவு எளிதில் யாராலும் வரைய முடியாது இதை நான் சேலஞ் செய்கிறேன். காரணம், ஒருவர் புதிதாக வரைய ஆரம்பித்து ஒன்று, இரண்டு வருடங்களில் இதை வரைய முடியாது. இதை நான், என் ஆறாவது வருடம் வரைந்தேன்.

 

அனைத்து ஓவியங்களுமே வரையும்போதே கலரில்தான் வரைவேன். தஞ்சாவூர் கோவிலை, இப்போது ’வாழும் கலை ரவிசங்கர்’ நிகழ்ச்சிக்காக பந்தல் எல்லாம் போட்டு பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் இடத்தில் உட்காந்து வரைந்தது. அதை வரையும்போது, காலையில் பசங்க கிரிக்கெட் விளையாடிட்டிருப்பாங்க மதியம் ஆகும்போது வீட்டுக்குபோய் அவங்க அப்பா, அம்மாவை எல்லாம் கூடிட்டுவந்து காட்டுவாங்க. இது வரைவதற்கு எனக்கு நான்கு ரூபாய் செலவானது. தஞ்சாவூரில் மங்களா அம்பிகை லாட்ஜில் வாடகை கேட்டதற்கு எட்டு ரூபாய் என்றார்கள். அதற்கு குறைவாக இல்லையா என்றேன். நான்கு ரூபாயில் இருக்கிறது என்றார்கள். பின் அதில் தங்கியிருந்துதான் தஞ்சாவூர் கோவிலை வரைந்தேன்.

 


1965-ல் 35 ரூபாய் செலவு செய்து திருப்பதி சென்று, திருப்பதி கோவிலை வரைந்தேன். அதற்காக வெறும் பூரியை சாப்பிட்டுவிட்டு, காலை 4.30 மணிக்கு கை பம்பு மூலமாக தண்ணீர் அடிச்சி குளிச்சிவிட்டு வரைந்த அனுபவம் உள்ளது. இந்தப் புத்தகத்தை உங்கள் சார்பாக, என் நினைவாக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்குகிறேன். என்று அவரின் ஓவியங்களின் தொகுப்பு புத்தகத்தை வழங்கினார்.