தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை தி.மு.க. ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் பா.ஜ.க.வின் தேசிய தலைவர்கள். இதற்காக அவர்கள் போட்டு வைத்துள்ள அஜெண்டாக்கள் நீளமானது. அதில் தி.மு.க. கூட்டணியைப் பலவீனப்படுத்துவது; அவர்களின் வாக்கு வங்கிகளைச் சிதைப்பது; தி.மு.க.வவிற்கு எதிராக உருவாகும் திடீர் பிரச்சனைகளைப் பெரிதுப்படுத்துவது என்பவை மிக முக்கியமானவைகளில் சில!
அந்த வகையில், தலித் சமூகத்தைக் கொச்சைப்படுத்தியதாக தயாநிதிமாறனுக்கு எதிராக உருவான சர்ச்சைகளை தி.மு.க.வை தாக்கும் ஆயுதமாகப் பயன்படுத்த தீர்மானித்துள்ளனர். அதற்கேற்பதான், தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனுக்கு டெல்லியிலிருந்து அழுத்தம் தரப்பட்டதாம். ஏற்கனவே, முரசொலி இடம் பிரச்சனை தொடர்பாக பா.ம.க எழுப்பிய சர்ச்சைகளை ஊதி பெரிதாக்கி, அதனைத் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் வரை கொண்டு செல்லப்பட்டதிலும் டெல்லியின் கைங்கர்யம் உண்டு. அந்தப் பிரச்சனையை அப்போது கையாண்டவர் தற்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தான்.
இப்படிப்பட்ட சூழலில், தற்போது, தயாநிதியால் உருவான தலித் சமூகப் பிரச்சனையில், டெல்லியின் தூண்டுதலின் பேரிலேயே தமிழக பா.ஜ.க.வினர் சீரியஸ் காட்டுகின்றனர். தயாநிதி வருத்தம் தெரிவித்த பிறகும் பா.ஜ.க.வின் வேகத்திற்குக் காரணம் பா.ஜ.க.வின் தேசிய தலைமைதான் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்!