இளம் பத்திரிகையாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த ஷாலினி எதிர்பாராத விதமாக சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கவிதை எழுதுவதில் அதீத விருப்பம் கொண்டிருந்த அவரின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக அவரின் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து 'பாரதி யாழ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட அவரின் ஊடக நண்பர்கள் முடிவு செய்தனர். இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய இயக்குநர் லெனின் பாரதி அதிகார வர்க்கத்தின் அலட்சியமே விபத்துக்களுக்கு காரணம் என்று கூறினார். அவரின் முழுமையான உரை வருமாறு,
தங்கை ஷாலினிக்கு சமூக அவலத்தின் மீதான தீராத கோபம் இருந்துள்ளது. அதனை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஒருவருடைய மரணம் என்பது அவருடைய உடற்பிரிவு மட்டும் தான். அவருடைய சிந்தனையும், எண்ணமும் எப்போதும் உயிர்ப்போடு இருக்கும். தங்கை ஷாலினி நூறு வருடம் உயிரோடு இருந்திருந்தாலும் இப்படிதான் சமூகத்துக்கு ஆதரவாக எழுதிக் கொண்டிருப்பார். இங்கு நிறைய பத்திரிக்கையாளர்கள் இருக்கிறீர்கள். அவர்கள் அனைவரும் இணைந்து ஷாலினியின் கனவை நிறைவேற்றி உள்ளீர்கள். ஆனால், இந்த சாலை விபத்துக்கு பின்னால் உள்ள இந்த அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தை யாரும் எடுத்து சொல்வதில்லை. ஒரு எப்.ஐ.ஆர்-ல் கூட விபத்து நடந்த சாலை போட்ட ஒப்பந்ததாரரை குற்றவாளியாக சேர்ப்பதில்லை. சாலையை சரியாக செப்பனிடாத, மேடு பள்ளமாக இருப்பதற்கு காரணமான அதிகாரிகளை பற்றி யாரும் எதுவும் எழுதுவதில்லை, பேசுவதில்லை.
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறந்தார். கிண்டி கத்திபாராவில் அப்போது பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. ஒரு குழியை மட்டும் சரியாக மூடாமல் அதிகாரிகள் சென்றுள்ளனர். அன்று மழை பெய்ததால், அந்த குழி முழுவதும் நீரால் மூடப்பட்டது. சிறுவயதில் இருந்து அந்த சாலையை பயன்படுத்தும் அவன், அந்த வழியாக செல்லும் போது நிலைத் தடுமாறி விழுந்துள்ளார். அந்த நேரத்தில் பின்னால் வந்த லாரி மோதி அவன் இறந்தான். இதற்கு யார் பொறுப்பேற்பார்கள், யார் இந்த குற்றத்துக்கு காரணம். அவர்களையும் நாம் இந்த சமூகத்துக்கு அடையாளம் காட்டி, தண்டிக்க வேண்டும். இங்கு இருக்கும் ஊடக நண்பர்கள் ஷாலினியின் பெயரால் சாலை பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்து, அதனை ஊடகங்கள் வாயிலாக அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள். அதிகாரிகளை சட்டையை பிடித்து கேள்வி கேளுங்கள். இந்த குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர்களை எல்லாம் வழக்கில் சம்பந்தப்படுத்துங்கள். சாலை விபத்துக்களும் ஒரு திட்டமிட்ட கொலைதான். அதனால் ஊடகவியலாளர்கள் இந்த விபத்துக்கு பின்னால் இருக்கும் அதிகார வர்க்க அரசியலுக்கு எதிராக குரல் கொடுங்கள்.