Skip to main content

"மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தினேனா?"- இயக்குநர் கல்யாண் விளக்கம்!

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

Director Kalyan interview in repeat shoe movie

 

காமெடி நடிகரான யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ரிப்பீட் ஷூ’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கல்யாண் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லீ, குக் வித் கோமாளி பாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் கல்யாணை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது ‘ரிப்பீட் ஷூ’ படம் குறித்து அவர் கூறியதாவது, "குழந்தைகளை மையமாக வைத்து ஒரு விழிப்புணர்வு படம் பண்ண வேண்டும் என்று ஆசை இருந்தது. பெண் குழந்தைகள் தவறான தொடுதலால் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், அவர்களைக் கடத்தி வைத்து எவ்வளவு ஈவு இரக்கமின்றி மனிதர்கள் நடந்து கொள்கின்றனர் உள்ளிட்டவை இந்த படத்தில் காண்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மக்களுக்கு சுவாரசியமான திரைக்கதையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். 

 

இந்தக் கதைக்கு யோகிபாபு பொருத்தமானவராக இருப்பார் என்று தேர்ந்தெடுத்தேன். அவர் மிக சிறப்பாகவும், அருமையாகவும் பண்ணிக் கொடுத்துவிட்டார். யோகிபாவுக்கான படம் என்று அனைவரும் இன்றைக்கு பாராட்டினர். வழக்கமாக யோகிபாபு நகைச்சுவையாகப் பண்ணிக் கொண்டிருப்பார்; அது நகைச்சுவையுடன் முடிந்து விடும். இந்த படத்தில் நகைச்சுவையும் பண்ணிருப்பார். சென்டிமென்ட் காட்சிகளும் பண்ணிருப்பார். மற்றவர்களுக்கு உதாரணமான மனிதர் யோகிபாபு.  

 

நான் சிறுவயதில் 'ஜுராசிக் பார்க்' படம் பார்த்தேன். பின்னர், எனக்கு இந்த மாதிரியான பிரம்மாண்டமான படம் பண்ண வேண்டும் என்று ரொம்ப ஆசை இருந்தது. அதற்கான பட்ஜெட் அமைந்தால், என்னுடைய கனவுப் படத்தை எடுப்பேன். பிரபுதேவா பணிவான மனிதர். மேடையில் சூர்யா என்னையும், என்னுடைய குழுவினரையும் பாராட்டினார். “கல்யாண் ரொம்ப ஸ்பீடான இயக்குநர், மிக அருமையான குழுவை அவர் வைத்திருக்கிறார்.” என்று சூர்யா பாராட்டினார். இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. 

 

என்னுடைய சிறிய வயதில் என் அம்மா, நடிகர் மன்சூர் அலிகானின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவைக் காண்பித்து, அவரிடம் உன்னை பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று உணவு ஊட்டிவிடுவார். ஆனால், அவருடன் பழகும் போது தான் தெரிந்தது, இந்த குழந்தையையா நாம் சந்தேகப்பட்டுட்டோம் என்று. மன்சூர்அலிகான் ரொம்ப நல்ல மனிதர். குழந்தை உள்ளம் கொண்டவர். யாருக்கும் தீங்கு நினைக்காத மனிதர்" எனத் தெரிவித்தார். 

 

மதுபோதையில் கல்யாண் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பித்து ஓடினார் என்று செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு கல்யாண் அளித்த விளக்கம் பின்வருமாறு, "அந்த காரைக் கூட பறிமுதல் செய்ததாக கேள்விப் பட்டேன். என் கார் இங்கு தான் இருக்கிறது. அவர்கள் விபத்து நிகழ்ந்ததாக கூறிய நேரத்தில் நான் எடிட்டிங்கில் அமர்ந்திருந்தேன். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. பின்னர், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். என்னுடைய பிஆர்ஓ, மேனேஜர் உள்ளிட்டோரும் பேசினர். 

 

அப்போது, சாரி சார்... தவறுதலாக செய்துவிட்டார்கள். நாங்கள் போட்டது தவறுதான், என்று மன்னிப்பு கேட்டுவிட்டார்கள். இருந்தாலும், மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப் போகிறோம். நான் மது அருந்த மாட்டேன் என்று என்னுடைய நண்பர்கள் உள்பட சினிமாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். மன்னிப்பு கேட்ட பின்பு நாம் என்ன செய்ய முடியும்?" என்றார்.