நடிகர் விஷாலின் அறிமுக படமான 'செல்லமே' படத்தின் இயக்குநர் காந்தி கிருஷ்ணா. சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நடிகர் விஷால் தொடர்பாக சில கருத்துக்களை தெரவித்திருந்தார். அதில், 'விஷால் அவர்களின் முதல் படமான செல்லமே படத்தின் இயக்குநர் நான். மூன்று ஆண்டுகளாக முயன்றும் என்னிடம் கதை கேட்க அவருக்கு நேரமில்லை. வாழ்க வளமுடன்' என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் என்ன கூற வருகிறார், விஷாலுக்கும் அவருக்குமான பிரச்சனை தான் என்ன என்பதை அவரிடமே கேட்டு தெரிந்துகொள்வோம்.
விஷால் தொடர்பாக நீங்கள் பேஸ்புக்கில் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தீர்கள். என்ன நடந்தது, உங்களுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை?
இரண்டு வருடத்திற்கு முன்பு நான் உருவாக்கியிருந்த கதை ஒன்றை என் நண்பரிடம் தெரிவித்தேன். கதையை கேட்ட அவர், இந்த கதையில் நடிகர் விஷால் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். நானும் நண்பரின் ஆலோசனையை ஏற்று விஷாலின் அப்பாவிடம் இதுதொடர்பாக பேசினேன். படத்தின் கதையை அவரிடம் கூறினேன். அவருக்கு கதை ரொம்ப பிடித்திருந்தது. நான் விஷாலிடம் பேசுவதாக கூறினார். இப்படியே ஒரு மூன்று வருடம் போனது. பிறகு என் நண்பர் ஒருவரிடம் இதுதொடர்பாக பேசும் போது, சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான், நீ நேரா போய் விஷாலிடம் பேசு என்று என்னிடம் கூறினார். நானும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். விஷால் எங்க இருக்கிறார்னு பார்த்தபோது அவர் பாண்டிச்சேரியில் சூட்டிங்கில் இருப்பதாக கூறினார்கள். அவரை நேரில் சந்திப்பதற்காக நானும் அங்கு சென்றேன். அவரு பிரேக் டைம்-ல் இருந்தாரு. அரை மணி நேரம் வெயிட் பண்ணினேன். விஷால் வந்தாரு, என்னை நன்றாக வரவேற்றார். சூட்டிங் போயிட்டு இருப்பதால் 5 நிமிடத்தில் நான் பேசி முடித்துவிடுவதாக அவரிடம் கூறி, நான் பேசத் தொடங்கினேன். அந்த குறிப்பிட்ட நேரத்திலேயே அவரிடம் கதையை சொல்லி முடித்தேன், இந்த படம் அதிரடியை மையமாகக் கொண்ட திரைப்படம், காதல் கதை அல்ல, படத்தின் பட்ஜெட் இவ்வளவு, இதான் படத்தோட டைட்டில் என்று அனைத்தையும் அவரிடம் தெரிவித்தேன்.
டைட்டிலை கேட்ட உடனே அவர் சூப்பரா இருக்குன்னு சொன்னார். மேனேஜருக்கு போன் பண்ணி பேசினார். ஜனவரி முதல் வாரத்தில் நான் சென்னை வந்து விடுவேன், அங்கு வந்து முழுகதையும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். நானும் அவர் கூறிய வார்த்தைகளை நம்பி, சென்னை வந்ததும் என்னுடைய நண்பர்களை எல்லாம் கூப்பிட்டு அந்த முழு கதையும் மெருகேற்றினேன். பத்து, பதினைந்து நாட்கள் முழுநேர வேலையாக அதை நான் செய்தேன். முழு ஸ்கிரிப்டையும் குறுகிய காலத்தில் உருவாக்கினேன். இந்நிலையில், மீண்டும் அவரை தொடர்பு கொண்டால் அவருடைய மேனேஜர் பேசினார். அடுத்த வாரம் பேசலாம், அடுத்தவாரம் பேசலாம் என்று பல மாதங்களை அவர் ஓட்டினார். பிறகு என்னுடைய நம்பரை விஷால் பிளாக் செய்தார். வேறு தொலைபேசி எண்ணில் இருந்து அழைத்தாலும் என்னுடைய குரலை கேட்டால் போனை கட் செய்து விடுகிறார். மெசேஜ் அனுப்பி பார்த்தேன், அதற்கும் பதில் இல்லை. நான் அவரிடம் கேட்பதெல்லாம் ஒன்று மட்டும்தான். கதை பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க, இப்ப வேலை இருக்கு பிறகு பண்ணலாம் என்னிடம் சொன்னா கூட நான் அதுவரை காத்திருப்பேன். எப்படியும் ஒரு படம் நம்ம பண்ணப்போறோம் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்துவேன். ஆனா எந்த பதிலும் இல்லாம நான் திரிசங்கு சொர்க்கத்தில் இருப்பதை போல இருந்தேன். நல்லதோ கெட்டதோ ஒரு 5 நிமிடம் என்னிடம் பேசலாம். கதையை ஏதாவது மாற்றம் வேண்டுமா, என்ன குறை என்று என்னிடம் கூறினால் தானே, அதற்கு தீர்வு கிடைக்கும். அப்துல் கலாம் கூட ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுப்பது தொடர்பாக எனக்கு மெயில் அனுப்பியிருந்தார். அவருக்கே நேரம் இருக்கின்ற போது உங்களுக்கு இல்லையா.
உங்களை பார்க்க கூட முடியாத தர்மசங்கடமான நிலை அவருக்கு என்ன இருக்கிறது?
நான் எந்த தவறும் செய்யவில்லை. உண்மையாக தான் அனைத்து படங்களையும் இயக்கினேன். அவர் என்னை ஏன் தவிர்க்கிறார் என்று இதுவரை எனக்கு தெரியவில்லை.
சண்டைக்கோழி -2 பார்ட் வெளிவந்தது, இயக்குநர் திரு அவர்களுடன் விஷால் மீண்டும் இணைந்தார், சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் படம் நடிக்கிறார், உங்களுக்கும் அவருடன் இணைந்து மீண்டும் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இல்லையா?
அவருக்கு ஏன் இல்லை என்று அவரிடம் கேளுங்கள். என்னை விட இந்த இயக்குநர்கள் எல்லாம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டார்களா என்று அவரிடம் கேளுங்கள். அவர்கள் எல்லோருக்கும் நீ இரண்டாவது பட வாய்ப்பு தந்து இருக்கிறாய். எனக்கு மட்டும் எதுக்கு படம் தரவில்லை. நான் உன்கிட்ட கதை சொன்னேன், நடிப்பேன் அல்லது நடிக்க மாட்டேன் என்று இதையாவது உடனே சொல்லி இருக்கனும். இப்படி எதுவுமே நீ சொல்லவில்லை. இதுவரை பத்த வைக்காமல் இருந்த விஷயங்களை இனி நான் பத்த வைக்க போகிறேன்.