Skip to main content

புரட்சியாளர்கள் மரிப்பதில்லை!

Published on 09/10/2017 | Edited on 09/10/2017
புரட்சியாளர்கள் மரிப்பதில்லை!



இன்றைக்கும் அவருடைய பெயர் இளைஞர்களை ஈர்க்கிறது. வனங்களில் ஒளிந்து போராடும் புரட்சிக் குழுக்களின் முகாம்களிலும், கல்லூரி விடுதி அறை சுவர்களிலும் அவருடைய படம் இடம்பிடித்திருக்கிறது.

1967 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அமெரிக்காவின் சிஐஏ ஏஜெண்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சியாளர் சேகுவேராவுக்கு இன்று 50ஆவது நினைவு தினம்.

தென்னமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டில் மலை கிராமத்தில் அவருடைய உயிரை பறித்த இந்த நாளில் அந்த கிராமம் அவருடைய நினைவை போற்றுகிறது.

கியூபா புரட்சி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சேகுவேரா, ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புரட்சிக்கு உதவப்போய் அவருடைய முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, தான் பிறந்த தென்னமெரிக்காவில் உள்ள நாடுகளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுவிக்கும் முயற்சியை தொடங்கினார்.



கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் முயற்சியில் பொலிவியாவில் களம் அமைத்துத் தரப்பட்டது. அங்கிருந்து புரட்சியை தொடங்கியபோது சேகுவேரா பொலிவியாவில் இருப்பதை உளவறிந்தது சிஐஏ.

அதைத் தொடர்ந்து, பொலிவியாவின் வனப்பகுதியை ராணுவம் சல்லடையாய் துளைத்தது. சுற்றி வளைக்கப்பட்ட சேகுவேராவும் அவருடைய தோழர்களும் ராணுவத்தினருடன் சண்டையிட்டனர். இதில் சேகுவேராவின் காலில் குண்டடிபட்டது. அப்போது,

"நான் சேகுவேரா. என்னை உயிரோடு பிடித்துச் சென்றால் உங்களுக்கு கூடுதல் வெகுமதி கிடைக்கும்" என்று ராணுவத்தினரிடம் கூறினார். அவர் சொன்ன பிறகுதான் தாங்கள் சுட்டது யார் என்பதே ராணுவத்தினருக்கு தெரியவந்தது.



சுடப்பட்டது சேகுவேரா என்று அறிந்ததும் சிஐஏ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அருகிலிருந்த லா ஹிகுவேரா என்ற கிராமத்திற்கு அவரை தூக்கி வந்தனர். கைகளும் கால்களும் பிணைக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பள்ளிக் கூடத்தில் கொண்டுவந்து போட்டனர்.

பின்னர் நடந்தது அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமான முகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. ஆம் சேகுவேராவை சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்ட சேகுவேராவை ஒரு ஹெலிகாப்டரின் கீழ்பகுதியில் கட்டி தூக்கிவந்தனர். பிறகு ஒரு இடத்தில் இருந்த சலவைக்கூடத்தின் தண்ணீர் தொட்டியில் அவருடைய உடல் கிடத்தப்பட்டது. அதன்பிறகுதான் சேகுவேரா பிடிபட்டது உலகுக்கு தெரியவந்தது.

உடலை ஒப்படைக்கும்படி கோரிய கியூபாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் புதைத்தனர். ஆனால், அவர் புதைக்கப்பட்ட இடத்தை தொடர்ந்து தேடி, கடைசியில் கை, கால் இழந்த சேகுவேராவின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அது, கியூபா தலைநகர் ஹவானாவில் அரசு மரியாதையுடன் புதைக்கப்பட்டது.


இர்மா ரோஸல்ஸ்

சேகுவேரா கொல்லப்பட்ட பொலிவியா நாடு இப்போது கம்யூனிஸ்ட்டுகளின் பிடியில் இருக்கிறது. அவர் கொல்லப்பட்ட கிராமமும், சலவைக்கூடம், மற்றும் பள்ளிக்கூடம் ஆகியவை உலக புரட்சியாளர்களின் சுற்றுலா மையமாக மாறியிருக்கிறது.

சேகுவேராவின் உடலை கழுவிச் சுத்தப்படுத்திய பெண்ணும், அவருக்கு ஒரு கிளாஸ் சூப் கொடுத்த பெண்ணும் இன்றும் உயிரோடு இருக்கிறார்கள்.

சேகுவேராவை தூக்கிவந்து  பள்ளிக்கூடத்தில் கிடத்தியபிறகு, அவருக்கு ஒரு கிளாஸ் சூப் கொடுக்கும்படி கூறினார்கள். நான் கொடுத்தேன் என்கிறார் இர்மா ரோஸல்ஸ்.


சுசன்னா ஓஸிநாகா

சலவைக்கூடத் தண்ணீர் தொட்டியில் போடப்பட்ட சேகுவேரா மிகவும் அழுக்காக இருந்தார்.  மோட்டார் மெக்கானிக்கின் உடைகளைப் போல சேகுவேராவின் உடைகள் எண்ணெய் பிசுக்கோடு இருந்ததாக 85 வயது சுசன்னா ஓஸிநாகா ராப்ள் கூறுகிறார்.

தென்னமெரிக்கா, மத்திய அமெரிக்காவில் உள்ள நாடுகளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்றும், தென்னமெரிக்க கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சேகுவேரா கனவு கண்டார்.

இன்று அவருடைய கனவு படிப்படியாய் நிறைவேறுகிறது. பல நாடுகள் முன்னாள் கம்யூனிஸ்ட்டுகளின் பிடியில் சென்றுகொண்டிருக்கின்றன.

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்