Skip to main content

கொல்லப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை மீட்ட காவல்துறை; கொலையாளியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Delhi woman passed away case police found body parts

 

இப்படியெல்லாம் கூட கொடூரமாகக் கொலை செய்ய மனசு வருமா என்ற அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது தலைநகர் டெல்லி. இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நம்பர் ஒன் நகரமென்ற மோசமான பெருமையை கடந்த மூன்றாண்டுகளாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தலைநகர் டெல்லி, ஒரு கொடூரக் கொலைச்சம்பவத்தால் கடந்த சில நாட்களாக திகிலில் இருக்கிறது.

 

மும்பையிலுள்ள ஒரு கால்சென்டரில் பணியாற்றி வந்தவர் 26 வயதான ஷ்ரத்தா வாக்கர். அப்போது, பம்பில் 'Bumble' என்றொரு டேட்டிங் ஆப் மூலமாக அஃப்தாப் அமீன் பூனவாலா என்பவனோடு பழக்கமான ஷ்ரத்தா, அந்த நட்பே பின்னாளில் காதலாக மாற, தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினார். இவர்களின் காதலுக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்காத நிலையில், காதலர்கள் இருவரும் மும்பையிலிருந்து டெல்லிக்கு சென்று விட்டார்கள். அங்கே மெஹ்ரவ்லி என்ற இடத்தில் வீடெடுத்துத் தங்கி லிவிங் டுகெதர் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். 

 

Delhi woman passed away case police found body parts

 

இதற்கிடையே, தனது மகளைக் காணவில்லையென ஷ்ரத்தாவைத் தேடத் தொடங்கிய அவரது தந்தை விகாஸ் மதான், மும்பையிலிருந்து டெல்லிக்கு மகள் சென்றிருக்கும் விவரம் தெரியவந்து, டெல்லிக்கு வந்து தேடத் தொடங்கியிருக்கிறார். ஷ்ரத்தாவைத் தேடித் திரிந்த அவரது தந்தை நவம்பர் 8 ஆம் தேதி ஷ்ரத்தா தங்கியிருந்த வீட்டை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார். ஆனால், அந்த வீடு அங்கே பூட்டப்பட்டிருந்திருக்கிறது. எனவே, ஷ்ரத்தாவையும் அவளோடு தங்கியிருந்த அஃப்தாபையும் பலரிடமும் விசாரித்துத் தேடியதில் சரியான தகவல் எதுவும் கிடைக்காததால், தனது மகளை அஃப்தாப் கடத்தியதாகக் கூறி டெல்லி போலீசில் ஷ்ரத்தாவின் தந்தை புகாரளித்தார். அதையடுத்து, நவம்பர் 12 ஆம் தேதி அஃப்தாப் அமீன் பூனாவாலாவை கைது செய்த டெல்லி போலீசார் அவர்களின் பாணியில் விசாரித்ததில் மிகக்கொடூரமான உண்மைகளைக் கக்கினார் அஃப்தாப்.

 

கடந்த மே மாதத்தில் ஷ்ரத்தாவுடன் டெல்லிக்கு வந்திருக்கிறார் அஃப்தாப் அமீன். அங்கே லிவிங் டுகெதர் வாழ்க்கையை தொடர்ந்த நிலையில், டேட்டிங் ஆப் மூலமாக அஃப்தாப் மேலும் பல பெண்களோடு தொடர்பிலிருப்பது தெரிந்ததால் ஷ்ரத்தாவுக்கும் அவருக்குமிடையே சண்டை எழுந்திருக்கிறது. லிவிங் டுகெதராக வாழ்வதால்தான் இப்படி இருக்கிறாய்... உடனே என்னைத் திருமணம் செய்துகொள் என்று அவரோடு வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அஃப்தாப் மே மாதம் 18 ஆம் தேதியன்று ஷ்ரத்தாவை அடித்துக் கீழே தள்ளி அவரது மார்பின் மீது ஏறியமர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான். இதன்பின்னர் தான் அவனுக்குள் இருந்த சைக்கோ கண்விழித்திருக்கிறது.

 

Delhi woman passed away case police found body parts

 

கொலையை மறைக்க என்ன செய்யலாமென்று யோசித்த அஃப்தாப், கூகுளில் இதுதொடர்பாக பலவற்றையும் சர்ச் செய்ததில், முதலில் 300 லிட்டர் ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்கி வருகிறார். பின்னர், கூர்மையான கத்தியின் மூலம் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டியவன், ரத்தச் சிதறல்களை சல்பர் ஹைபோகுளோரைட் என்ற ஆசிட் மூலமாகத் துடைத்திருக்கிறார். வெட்டிய 35 துண்டுகளைத் தனித்தனியாக பேக்கிங் செய்து அனைத்தையும் அவனது புது ஃப்ரிட்ஜினுள் வைத்து மூடிவிட்டார். 

 

Delhi woman passed away case police found body parts

 

அதன் பின்னர் தினமும் நள்ளிரவு 2 மணியளவில் விழித்துக்கொள்ளும் அஃப்தாப், ஃப்ரிட்ஜிலிருந்து ஷ்ரத்தாவின் உடல் பாகங்களில் இரண்டை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று வீசியெறிந்திருக்கிறார். இப்படியாகத் தொடர்ந்து 18 நாட்களுக்கு ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை வீசியெறிந்திருக்கிறார். அதுவரை அவரை யாரும் சந்தேகப்படவில்லை. அதுமட்டுமல்ல, கடந்த மே மாதத்துக்குப் பின் தற்போது நவம்பர் வரை 5 மாதங்களுக்கு மேலாக அந்த வீட்டில் தான் அஃப்தாப் வசித்துள்ளார். வழக்கம்போல் டேட்டிங் ஆப் மூலம் பழக்கமான பெண்களை அவ்வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களோடு தனிமையில் இருந்துள்ளார். ஷ்ரத்தாவின் உடல் ஃப்ரிட்ஜில் இருக்கும் போதே இப்படி தனிமையில் இருந்ததாக அவர் கூறியதைக் கேட்டு போலீசார் அதிர்ந்தனர். பிண வாடை அடிக்கக் கூடாதென்பதற்காக சாம்பிராணி புகையெல்லாம் போட்டிருக்கிறார்.

 

Delhi woman passed away case police found body parts

 

கொடூரமான கொலைகாரனான அஃப்தாப்பை உடல் பாகங்களை வீசியெறிந்த காட்டுக்கு நேரில் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், இதுவரை 10 உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது. இந்த சைக்கோ கொலைகாரன் ஷ்ரத்தாவை மட்டும் தான் கொன்றுள்ளானா, வேறு பெண்களையும் கொலை செய்திருப்பானா என்ற கோணத்திலும் விசாரணை சென்றுள்ள நிலையில், தலைநகர் டெல்லியே பீதியில் உறைந்துள்ளது.

 

- தெ.சு.கவுதமன்