ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2006-ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் கிடைத்த வட்டச் செயலாளர் பதவியை வேண்டாம் என சொல்லிவிட்டு, திருச்சி தி.மு.க.வின் வி.ஐ.பி.யான கே.என். நேருவின் தம்பி ராமஜெயத்துடன் கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர். திருச்சி காங்கிரசின் சுப.சோமு, பக்ருதீன் ஆகியோருடனும் தொழில் கூட்டணி போட்டவர். மறைந்த முன்னாள் அமைச் சர் மரியம் பிச்சையின் தொடர்பினால் சினிமா தொழிலிலும் கால் பதித்தவர். அப்போது அமைச்சர்களாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வைத்திலிங்கம் ஆகியோருடன் சினிமா தொழில் மூலம் நெருக்கமானவர். அந்த நெருக்கத்தின் மூலம் பல காரியங்களை சாதித்தவர். அ.தி.மு.க. மா.செ.வின் தயவில்லாமலேயே மாநகர் மாணவரணி பொறுப்பு வாங்கியவர். இத்தனை "ர்'களுக்கும் சொந்தக்காரர் இப்போது திருச்சி ஆவினுக்கு சேர்மனாக இருக்கும் சி.கார்த்திகேயன்.
முதல்வர் எடப்பாடிக்கு சகலமும் இவராக இருப்பதால், "முதல்வரின் நிழல்' போன்ற கார்த்திகேயனின் ராஜ்ஜியம் திருச்சியில் கொடிகட்டிப் பறக்கிறது. கலெக்டர் அலுவலகத்திற்கோ போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கோ கார்த்தி கேயன் செல்வதற்கு முன்னால், முதல்வர் எடப்பாடியின் பி.ஏ.க்களான அருண், காந்தி ஆகியோரிடமிருந்து, "வருகிறவர் சொல்வதை செய்யவும், இது முதல்வர் உத்தரவு' என்ற கட்டளை சென்றுவிடும். அதன்பின் கார்த்திகேயனுக்கு கிடைக்கும் உயர்தர மரியாதை பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன?
கார்த்திகேயனின் கிடுகிடு வளர்ச்சியையும் செல்வாக்கையும் பார்த்து, ஒரு கட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனே, ""எனக்கு உடல்நிலை சரியில்ல. அதனால கார்த்திகேயனை மா.செ.வாக்கிருங்க, நானும் கூடவே இருந்து பார்த்துக்குறேன்''’என எடப்பாடியிடமே சொல்லும் அளவுக்குப் போனது. ஆனால் எடப்பாடி என்ன நினைத்தாரோ, அமைச்சர் தங்கமணி ரெக்க மெண்டேஷனில் எம்.பி. குமாரை மா.செ.வாக்கி விட்டார். மா.செ.வான குமாருக்கும் கடும் சவாலாக மாறினார் கார்த்திகேயன். எம்.பி. தேர்தல் சமயத்தில் திருச்சியின் கட்சி நிர்வாகிகள் இருபது பேரை அழைத்துக் கொண்டு, எடப்பாடியைச் சந்தித்து, "மா.செ. பதவியிலிருந்து குமாரை நீக்கவேண்டும்' என புகார்களை அடுக்கினார். அப்போதும் கார்த்திகேயனின் ஆசைக்கு பிரேக் போட்டவர் அமைச்சர் தங்கமணிதான்.
இப்படி பல வழிகளிலும் மா.செ. பதவிக்கும் திருச்சி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. சீட்டுக்கும் அடிபோட்ட கார்த்திகேயன் சமீபத்தில் முதல்வர் எடப்பாடியைச் சந்தித்தார். அப்போது, ‘""திருச்சியில் கட்சி காணாமல் போய்விட்டது. அதனால்தான் எம்.பி. தேர்தலில் தோற்றோம். கடந்த ஒரு மாசமா கட்சித் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசி, அலசி ஆராய்ந்து ஒரு பட்டியலை ரெடி பண்ணிருக்கேன். இந்தப் பட்டியல்படி கட்சி ரீதியாக மாவட்டத்தை மூன்றாகப் பிரிங்க.
திருச்சி கிழக்கு, மேற்கு, மணப்பாறை ஆகிய இந்த மூணு எம்.எல்.ஏ. தொகுதிகள் அடங்கிய மாவட்டத்திற்கு என்னை மா.செ.வாக்குங்க. மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகளின் மாவட்டத்திற்கு பிரின்ஸ் தங்கவேல், சிவபதி, எம்.எல்.ஏ. செல்வராஜ் ஆகிய மூவரில் ஒருவரை மா.செ.வாக்குங்க. திருவெறும்பூர், லால்குடி, ஸ்ரீரங்கம் தொகுதிகளின் மாவட்டத்திற்கு ஜெயபால், ராவணன், சூப்பர் நடேசன் ஆகியோரில் ஒருவரை மா.செ.வாக்குங்க. உளவுத்துறை மூலமாகவும் விசாரிச்சுக்கங்க''’என பெரிய பிட்டைப் போட்டுவிட்டுத் திரும்பியுள்ளார் கார்த்திகேயன்.
திருச்சி திரும்பிய கையோடு உளவுத்துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, இப்போது ஓய்வில் இருக்கும் ஒரு டி.எஸ்.பி. மூலமாகவும் பணியில் இருக்கும் டி.எஸ்.பி. மூலமாகவும் "மாவட்டத்தை மூணாகப் பிரிச்சாத்தான் கட்சிக்கு நல்லது' என்ற ரிப்போர்ட் முதல்வர் எடப் பாடிக்குப் போகுமாறு "ஒர்க்' பண்ணியுள்ளாராம் கார்த்திகேயன். இதெல்லாம் இப்போது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் மா.செ. குமாரும். கார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சிக்கு பணம்தான் பிரதானம். அந்தப் பணம் வரும் வழியைக் கேளுங் கள்''’என்றவாறு நம்மிடம் சில தகவல்களைச் சொன் னார் ஆவினில் பணியாற்றும் அதிகாரி ஒருவர்.
இளவரசன் ஆவின் சேர்மனா இருந்தப்ப தினமும் லிட்டருக்கு இத்தனை காசுன்னு கப்பம் போய்ச் சேர்ந்திரும். அதே மாதிரி தான் இப்பவும். ஆவினில் 80 பேருக்கு போஸ்டிங் போட்ட வகையில் பல லட்சங்கள், குளிரூட்டும் துறையிலிருந்து தினமும் 10 ஆயிரம் என கன ஜோராக கல்லா கட்டுகிறார் கார்த்திகேயன். அதைவிடக் கொடுமை என்னன்னா துறையூர், திண்ணனூர் பால் சொசைட்டியில் உறுப் பினராக இருப்பதுபோல் போலி டாக்குமெண்டைக் காட்டித்தான் ஆவின் சேர்மனாகியிருக்கிறார். இப்போது அவருக்கு எதிரான குரூப், இதைக் கையில் எடுக்கப் போகுது''’என்றார்.
கார்த்திகேயனின் விளக்கம் பெற 12-08-19 இரவு நான்கு முறை செல்போனில் தொடர்பு கொண்டோம். பதில் இல்லை. 13-08-19 அன்று நேரடியாக அவர் அலுவலகம் சென்றோம். அங்கு அவர் உதவியாளர், கார்த்திகேயன் வெளியூர் சென்றிருப்பதாகவும், வந்தவுடன் தகவல் தெரிவிக்கிறோம் எனவும் கூறினார். கார்த்திகேயன் விளக்கம் தந்தால் வெளியிடத் தயாராக உள்ளோம். இவையெல்லாவற்றையும் விட சூப்பர்ஜெட் மேட்டர் என்னன்னா... சர்ச்சை புகழ் மந்திரி ஒரு வருக்காக, திருச்சி பஸ் நிலையம் அருகே 25 கோடி மதிப்புள்ள காலி இடத்தை 5 கோடிக்கு பிளாக் பண்ணியுள்ளார் கார்த்திகேயன். இதுபோக வி.வி.ஐ.பி.க்களே இடம் வாங்கத் தயங்கும் தில்லை நகரில் 25 கோடி பெறுமானமுள்ள வீடு + காம்ப்ளக்ஸுக்கு அட்வான்ஸ் கொடுத்து கன்ஃபார்ம் பண்ணியுள்ளாராம் கார்த்திகேயன்.