Skip to main content

அதிகார திமிரை காட்டுகிறார்கள் -தமிமுன் அன்சாரி கண்டனம்

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

 

ஜம்மு காஷ்மீர் மாநில விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மஜக சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அறிவித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பல்வேறு கட்சிகள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

 

mjk


 

அதன்படி இன்று காலை சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மே 17 இயக்கம், முக்குலத்தோர் புலிப் படை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, SDPI,  தமுமுக, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் பேரரசு கட்சி ( இயக்குனர் கெளதமன்) விடுதலை தமிழ் புலிகள் (குடந்தை அரசன்), தமிழ் தேசிய பேரியக்கம் ( பெ.மணியரசன்), தமிழர் தேசிய முன்னணி (பழ. நெடுமாறன்),  திராவிட இயக்க தமிழர் பேரவை (சுப.வீரபாண்டியன்),  தமிழ் புலிகள் கட்சி (நாகை திருவள்ளுவன்),  தமிழர் விடியல் கட்சி (இளமாறன்), சமூக நீதி இயக்கம் ( பேராயர் எஸ்ரா.சற்குணம்), தமிழக மக்கள் கட்சி, சமூக நீதி மக்கள் கட்சி, மற்றும் அகில இந்திய ஜாமியத்துல் உலமா, இந்திய தவ்ஹீத் ஜமாத், வெல்ஃபேர் பார்ட்டி, இந்திய தேசிய லீக் (பஷீர் ஹாஜியார்)   இந்திய தேசிய லீக் (நிஜாமுதீன்), அகில இந்திய தேசிய லீக், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி,முஸ்லிம் தொண்டு இயக்கம், இஸ்லாமியர் விழிப்புணர்வு கழகம், ஐக்கிய சமாதான பேரவை, இஸ்லாமிய இலக்கிய கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.


  mjk


 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன், கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர், அவர்களை கைது செய்து சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அடைத்தனர். 
 

இந்த நிலையில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார். 
 

காஷ்மீர் மக்கள் விருப்பம் இல்லாமல் ஜம்மு காஷ்மீர் குறித்து எந்த முடிவும் எடுக்காது என இந்திய அரசு கூறியிருந்தது. இப்போது ஜம்மு காஷ்மீர் குறித்து இந்திய அரசு எடுத்துள்ள முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?. 
 

இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. ஐ.நா அவையில் இந்தியா சார்பில் அன்றைய பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதியை, நரேந்திர மோடி, அமித்ஷா கூட்டணி சவக்குழிக்குள் வைத்து விட்டது. இப்போது இவ்விஷயத்தில் உலக நாடுகள் தலையிடும் நிலை உருவாகியுள்ளது. காஷ்மீர் பிரச்சனையை உலக பிரச்சனையாக மாற்றியது நமது நாட்டின் ராஜதந்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பின்னடைவாகும்.

 

mjk

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தமிமுன் அன்சாரி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அடைக்கப்பட்டபோது போலீசாரிடம் கையெழுத்திடுகிறார்.
 

 

நாடாளுமன்றத்துக்கோ, மக்களுக்கோ தெரிவிக்காமல் திடீரென்று ஜனாதிபதியைக் கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியது சரியா?
 

இது கொல்லைப்புறமாக வந்து குரல் வளையை நெறிப்பது போன்றதாகும். Rss-ன் நீண்ட நாள் திட்டத்தை நிறைவேற்றவே, இவ்வளவு அவசரம் காட்டப்பட்டிருக்கிறது. எண்ணிக்கை பெரும்பான்மை என்ற பலத்தில் அதிகார திமிரை காட்டுகிறார்கள்.
 

ஐம்மு காஷ்மீர் இனி கார்ப்பரேடட்டுகளின் கைகளுக்கு மாறும் என்று கூறுகிறார்களே அப்படி நடக்குமா?
 

இனி அதானி, அம்பானி, வேதாந்தா, டாட்டா போன்ற கார்ப்பரேட்டுகளின் சந்தையாக காஷ்மீரின்  அழகிய நிலங்கள் பறி போகப்போகின்றன. அந்த மக்கள் தங்கள் மண்ணிலேயே அகதிகளாகும் நிலை உருவாகும் என்பதை மறுப்பதற்கில்லை.
 

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்து மீறல் இனி குறையுமா?
 

காஷ்மீரிகள் இந்தியாவை விட பாகிஸ்தானை அதிகமாக வெறுக்கிறார்கள் என்பதே நிஜமாகும்.பாகிஸ்தான் அத்துமீறலை ஒடுக்குவது நம் ராணுவத்தின் பணியாகும். அதை நாமும் ஆதரிக்கிறோம்.

 அதற்காக, காஷ்மீருக்காக 370 வது சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவை நீக்கி, காஷ்மீரை துண்டாடுவதை ஏற்க முடியாது. அவர்கள் தங்களை மதத்தால் பிரிப்பதை எதிர்க்கிறார்கள். அங்கு முஸ்லிம்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் அனைவரும் தங்களை காஷ்மீரிகள் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள்.
 

இதை புரியாமல், எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானை காட்டி, உண்மைகளையும், நீதிகளையும் திசை மாற்றக் கூடாது.

 

mjk


 

ஐம்மு காஷ்மீரில் இனி தேர்தல் நடக்குமா என்பது சந்தேகம் என்கிறார்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இனி இந்தியாவிலேயே தேர்தல் நடக்குமா ? என சிலர் அச்சம் எழுப்பியிருக்கிறனர். அது உண்மைதான். இனி மாநில சட்டமன்றங்களின் அதிகாரம் மாநகராட்சி அந்தஸ்தாக குறைக்கப்படும். பல மாநில அரசுகள் பந்தாடப்படும். அரசியல் சுய நலன்களுக்காக பல மாநிலங்கள் உடைக்கப்படலாம்.

 

mjk



 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கியதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு தற்காலிக ஏற்பாடுதான் என்று நவநீதகிருஷ்ணன் பேசியிருக்கிறாரே?
 

அதிமுகவை உருவாக்கிய MGR அவர்கள், காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஷேக் அப்துல்லாவின் உற்ற நண்பராவார். அவர் காஷ்மீர் மக்களை நேசித்தார். அன்னை தெரஸா பல்கலைக்கழகத்தை கொடைக்கானலில் தொடங்கியப் போது ஷேக் அப்துல்லாவை அழைத்து கெளரவித்து அன்பு காட்டினார். அவரது எண்ணத்திற்கு எதிராக இன்று அதிமுக செயல்பட்டிருக்கிறது. அதிமுகவின் இம் முடிவு கண்டிக்கத்தக்கது. அண்ணாவின் மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு எதிரானது. தங்களின் சரணாகதி அரசியலை அப்பட்டமாக மீண்டும் வெளிப்படுத்தி விட்டார்கள்.