டெல்லியில் மூன்று நாட்கள் நடைபெற்ற கலவரத்தில் பதினோரு இந்துக்களும் முப்பத்தி நான்கு இசுலாமியர்களும் உயிரிழந்ததாக டெல்லி நகர காவல்துறை அறிவித்துள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்கள் பலியான 2002 குஜராத் கலவரத்திற்கும். 2020-ல் நடந்த டெல்லி கலவரத்திற்கும் உள்ள பெரிய வித்தியாசம் சமூக ஊடகங்கள்தான். குஜராத் கலவரத்தின்போது தனியார் டெலிவிஷன் சானல்களும் தெஹல்கா போன்ற ஒரு சில புலனாய்வு ஊடகங்களும் மட்டுமே இருந்தன.
குஜராத் கலவரத்தின் கொடுமையை தங்களது உயிரை பணயம் வைத்து பத்திரிகையாளர்கள் வெளியே கொண்டு வந்தார்கள். ஆனால் டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின் ஒவ்வொரு நிமிடமும் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக வெளியே வந்தது. கலவரம் பிறப்பதற்கும் பரவுவதற்கும் அதிலிருந்து பெரும்பான்மையானோர் தப்பிப்பதற்கும் சமூக ஊடகங்களே பொறுப்பு என்கிறார்கள் கலவரக் காட்சிகளை இந்த முறையும் உயிரை கொடுத்து பதிவு செய்த டெல்லி பத்திரிகையாளர்கள்.
ஷாஹின்பாக்கில் தொடர் போராட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து டெல்லியில் ஏழு இடத்தில் இசுலாமியர்கள் ஷாஹின்பாக் ஸ்டைலில் தொடர் போராட்டம் நடத் தினர். உத்தரபிரதேசத் தில் ஆறு இடங்களில் ஷாஹின்பாக் ஸ்டைல் போராட்டத்தை இசுலாமியர்கள் நடத்தினர். கலவரத்திற்குப் பிறகு டெல்லியில் ஏழு இடங்களில் நடைபெற்ற ஷாஹின் பாக் ஒரே இடமாக சுருங்கிப் போனது. உத்தர பிரதேசத்தில் அஜ்மீர் நகரில் அரசு அனுமதியுடன் இசுலாமியர்கள் போராடுகிறார்கள்.
அதற்காகத்தான் டெல்லி கலவரம் நடத்தப்பட்டது. இந்த கலவரத்திற்கு விரிவான ஒரு திட்டம் இருந்தது. தற்பொழுது கலவரம் நடந்த வடகிழக்கு டெல்லி பகுதி உத்தரபிரதேசம் காசியாபாத் நகருக்கு பக்கத்தில் உள்ள பகுதி. அங்கிருந்து மீரட் எனும் உ.பி.யின் நகரம் வெறும் ஐம்பது கி.மீ. தொலைவில்தான் இருக்கிறது. டெல்லியில் பரவும் கலவரம் காசியாபாத்தை தாக்கும்; அங்கிருந்து மீரட் நகருக்கு பரவும். மீரட் நகரம் என்பது இந்து, முஸ்லிம் கலவரம் அடிக்கடி நடக்கும் இடம். மீரட்டிலிருந்து உ.பி. முழுவதும் பரவும். அதைத் தொடர்ந்து வட இந்தியா முழுவதும் பரவும். இதுதான் ஒரிஜினல் ப்ளான். அதற்காகத்தான் ஒரு பக்கம் முஸ்லிம்கள் அதிகமாகவும் மறுபுறம் இந்துக்கள் அதிகமாகவும் இருக்கக்கூடிய வடகிழக்கு டெல்லியை தேர்ந்தெடுத்தார்கள்.
அந்தப் பகுதியில் உள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளில் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், ஹிந்து அமைப்புகள் அதிகம் உள்ள பகுதி. இங்குள்ள ஜாபராபாத்தில் இசுலாமியர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஷாஹின்பாக்கில் துப்பாக்கியால் சுட்டும் இசுலாமியர்கள் கலையவில்லை. அங்கு இசுலாமியர்கள் எண்ணிக்கை அதிகம். வடகிழக்கு டெல்லியில் பா.ஜ.க.வினர் அதிகம். எனவே ஜாபராபாத்தை கலவரத்திற்காக தேர்ந்தெடுத்தார்கள்.
கற்கள் லாரிகளில் குவிக்கப்பட்டன. பெட்ரோல் குண்டுகள் தயார் செய்து வைக்கப்பட்டன. ஷாருக் என்கிற இசுலாமிய இளைஞனிடம் துப்பாக்கியை கையில் கொடுத்து போலீசாரை நோக்கி குறிவைக்கச் சொன்னார்கள். பர்தா அணிந்த பெண்கள் போலீசாரை நோக்கி கல்லெறிவது போன்ற போட்டோக்களை வாட்ஸ்அப்களில் பா.ஜ.க.வினர் பரப்பினார்கள், கலவரத்தில் இறங்கினார்கள். இந்த முறை துப்பாக்கிகள் அதிகம் திரட்டப்பட்டன.
போலீசார் தங்களது பெரிய வாகனங்களை ஒவ்வொரு தெருவின் முனையில் நிறுத்தி வைத்து தெருவை அடைத்துக் கொள்ள பா.ஜ.க.வினர் முஸ்லிம் வீடுகளை அடித்தனர். முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து தாக்கினார்கள். இக்பால் மிர்சி என்கிற எல்லை பாதுகாப்பு படைவீரரின் வீட்டை தாக்குகிறார்கள் என்கிற தகவல் வாட்ஸ் அப் மூலம் டெல்லியில் இருந்த அவருக்கு தெரியவர... அவர் ஒரு பெரிய எல்லை பாதுகாப்பு படையுடன் வந்து தனது வீட்டை பாதுகாத்ததோடு கலவரக்காரர்களையும் விரட்டி அடித்தார்.
1984 சீக்கிய கலவரத்தின் போது துப்பாக்கிகள் பயன்படுத் தப்படவில்லை. போலீசார் பாதுகாப்புடன் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள் சீக்கியர்களை தாக்கினார்கள். அந்த அனுபவத்தில், சமூக வலைத்தளங்களில் பரவிய கலவர காட்சிகளை கண்ட சீக்கியர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வரும் இசுலாமியர்களுக் காக 1984 அனுபவத்தை வைத்து தங்களது குருத்வாராக்களை திறந்து வைத்தனர். கலவரம் முடிந்த பிறகும் கலவரம் பாதித்த பகுதிகளில் உணவுப் பொருட்களை விநியோகித்தனர்.
அதேபோல் இந்துக்களும் தங்கள் வீடு களில் இசுலாமியர்களின் தாடிகளை மழிக்க வைத்து தங்களது உறவினர்களாக அமர வைத்தனர். இவ்வளவுக்குப் பிறகும் முஸ்லிம்கள் துப்பாக்கி குண்டுக்கு பலியாவதை கண்ட முஸ்லிம்களும் திருப்பி தாக்குதல் நடத்தினர்.
இந்துவுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் தீக்கிரையானது. அங்கீத் என்கிற உளவுத்துறையில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியர் தனது வீட்டுக்குள் நுழைய முயன்ற, பா.ஜ.க.வினரை எதிர்த்து தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தாஹீர் உசேன் என்கிற ஆம் ஆத்மி கவுன்சிலருடன் பேச சென்றார். அவரை தாக்குதல் நடத்த வந்தவர் என கருதி தாஹீர் உசேன் அடித்துக் கொன்றார்.
அங்கீத்தின் உடல் கிடந்த கழிவுநீர் கால்வாயில் பா.ஜ.க.வினர் அடித்துக் கொன்ற இரண்டு இசுலாமியர் உடல்களும் காணப்பட்டன. ஹனுமன் சேனாவை சேர்ந்தவர்கள் அசோக் நகரில் உள்ள மசூதிக்கு தீ வைக்க... ஷிவாநகர் என்ற பகுதியில் இருந்த ஹனுமார் கோவிலும் தாக்குதலுக்குள்ளானது.
1984-ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கிய கலவரம் நடந்தபோது அப்பொழுது இருந்த ஒரே தொலைக்காட்சி சேனலான தூர்தர்ஷன் கலவரக் காட்சிகளை ஒளிபரப்பவில்லை. இன்று டெல்லியில் நடந்த கலவரத்தின் போது தனியார் தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடகங்கள் கலவரத்தை தெளிவாக ஒளிபரப்பின. அதனால் இசுலாமியர்கள் தங்களை காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க முடிந்தது.
2002-ல் குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட்ட இந்துக்களின் உடல்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத்திற்கு ஊர்வலமாக 100 கி.மீ. தூரம் கொண்டு வர வைத்து குஜராத்தை கலவரக் காடாக்கினர் அன்றைய குஜராத்தின் ஆட்சியாளர்கள்.
டெல்லி கலவரம் காவல்துறை உதவியுடன் நடைபெற்றது.
"கோலிமாரோ' (துப்பாக்கியால் சுட்டுக் கொல்) என்பதை தேசிய கோஷமாக மாற்ற முயன்றனர். துப்பாக்கிகள் பேசின. கலவரம் முடிந்த பிறகு கல்கத்தாவில் பேசிய அமித்ஷாவின் கூட்டத்திலும் "கோலிமாரோ' கோஷம் ஒலித்தது.
டெல்லி கலவரங்கள் சமூக வலைத் தளங்களின் மூலமாக உலகத்தின் கவனத்தை ஈர்த்தன. வட இந்தியா முழுவதும் "கோலிமாரோ' என்கிற கோஷத்துடன் பா.ஜ.க. கலவரம் நடத்தி குஜராத் பாணியில் கலவரம் விளைவித்து ஆதாயம் தேடுகிறது என பட்டவர்த்தனமாக தெரிந்ததால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் மூலம் அதே கோலிமாரோவை திருப்பி கலவரக்காரர்களை கண்டதும் சுட்டுத்தள்ளு என உத்தரவிட்டவுடன் மூன்று நாள் நடந்த கலவரம் ஒரேநாளில் முடிவுக்கு வந்தது என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.
"இது சம வலிமையுள்ள இரு சமூ கங்களுக்கிடையே நடைபெற்ற மோதல் அல்ல. பெரும்பான்மை சமூகமான இந்துக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பா.ஜ.க, முஸ்லிம் சமூகத்தை சிதைத்து அதன் பொருளாதார வளங்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளது. இது 1934-ல் ஹிட்லர் யூதர்களின் சொத்துக்களை எரியவிட்டு அவர்களை நசுக்கியவதற்கு சமம். ஹிட்லரின் வாரிசுகள்தான் இன்று இந்தியாவை ஆளுகிறார்கள்'' என்கிறார் லண்டன் பல்கலைக்கழக பேராசிரியரும் தமிழருமான ப்ரியா கோபால்.