குக்கரை தேடிப்பிடித்து பருப்பை வேக வைச்சிருக்காங்க:
நடிகர் சிங்கமுத்து பேட்டி
நடிகர் சிங்கமுத்து பேட்டி

தினகரனை ஆர்.கே.நகர் மக்களுக்கு பிடித்துவிட்டது. அதனால்தான் இவ்வளவு பிரச்சனைக்குப் பின்னரும் குக்கரை தேடிப்பிடித்து பருப்பை வேக வைச்சிருக்காங்க என்று நடிகர் சிங்கமுத்து கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு குறித்து நம்மிடம் பேசிய அவர்,
அதிமுகவில் நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தோம். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பிரிந்தார்கள். எங்களைப் போன்றவர்கள் இரட்டை இலை பக்கம் நின்றோம். அதையே தொடரலாம் என்று முடிவு எடுத்து இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு ஆதரவாக இரண்டு நாள் பிரச்சாரம் செய்தோம்.
ஆனால் ஆர்.கே.நகர் மக்களுக்கு தினகரனை பிடித்துவிட்டது. ஒட்டுமொத்தமாக நம்பிக்கை வைத்து வாக்கு அளித்துள்ளனர். இல்லையென்றால் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற முடியாது. குக்கரை தேடிப்பிடித்து பருப்பை வேக வைச்சிருக்காங்க. அதிமுக ஏன் பிரிந்து இருக்க வேண்டும். ஒன்றாக இணைந்து இருக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் மக்கள் நினைக்கிறார்கள். அதைத்தான் இந்த முடிவு காட்டுகிறது. தமிழகம் முழுவதும் தினகரனை ஏற்றுக்கொண்டார்களா என்பது தேர்தல் காலத்தில்தான் தெரிய வரும்.
எங்களைப்போன்ற அடிமட்ட பேச்சார்கள் விரும்புவது எம்ஜிஆர், ஜெயலலிதா காப்பாற்றி வந்த இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். அதற்காக இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தால் நல்லது. கட்சிக்குள் சண்டை, பங்காளி சண்டை போல விரைவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று விரும்பிகறோம்.
திமுக கூட்டணி பலமாக உள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் அந்த கூட்டணி வெற்றியை முறியடிக்க வேண்டும் என்றால் வேறுபாடுகளை மறந்து பிரிந்தவர்கள் ஓன்றுகூடி அதிமுக முழு பலத்தோடு இருக்க வேண்டும் என்றார்.
-வே.ராஜவேல்