Skip to main content

அரசியல் சாசனத்தின் இடத்தில் மனுதர்மம்! -பா.ஜ.க. அரசை விளாசிய டி.ராஜா! 

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
d.raja

 

 

கரோனா ஊரடங்கு தொடர்ந்தாலும், கருத்தியல் ரீதியிலான கலந்துரையாடல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன அரசியல் இயக்கங்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் குமரி, கோவை மாவட்டங்களும், கோவை சமூக விஞ்ஞானப் பயிலரங்கமும் இணைந்து நடத்திவந்த மெய்நிகர் சந்திப்பு கூட்டத்தின் நூறாவது நாளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, ‘இந்தியப் பாசிச சூழலில் நம் கருத்தியல் போராட்டம்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரை சமகாலச் சூழலில் மிக முக்கியமானது.

 

"இன்று இந்தியாவில் பாசிசம் தலைவிரித்தாடுகிறது. 2014ல் இந்தியாவில் நடைபெற்ற ஆட்சிமாற்றம், பா.ஜ.க. என்ற ஒரு கட்சியின் ஆட்சி மாற்றமல்ல. அது அடிப்படையில் குணாம்ச ரீதியிலான மாற்றத்தை குறிக்கிறது. பா.ஜ.க. அரசை ஆர்.எஸ்.எஸ். என்றொரு பதிவு செய்யப்படாத, மதவாத பாசிச கொள்கையைக் கொண்ட இயக்கம் கட்டுப்படுத்துவதுதான் அதற்கு காரணம். இன்று அரசியல் சட்ட அடிப்படைகள் தகர்க்கப்படுகின்றன. ஜனநாயகம் சிறுமைப்படுத்தப்படுகிறது. அரசியல் சட்டம் வழங்கிய குடியுரிமை சிதைக்கப்படுகிறது. தேசியம் பேசிக்கொண்டே மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு தூண்டிவிடப்படுகிறது.

 

ஆட்சியாளர்களின் கொள்கைகளைத் தட்டிக்கேட்டால் தேசவிரோதிகள் என்கின்றனர். உரிமை குரலெழுப்பும் மாணவர்கள், மனித உரிமை போராளிகள், உண்மைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் மீது தேசவிரோத வழக்கு பாய்கிறது. அம்பேத்கர் உருவாக்கி தந்த அரசியல் சாசனத்தை மாற்றி விட்டு, அதில் மனுதர்மத்தை கொண்டு நிறுத்தும் வேலைகள் நடக்கின்றன. முதலாளித்துவத்தின் கையில் நாடு சிக்கித் தவிக்கிறது.

 

நவீனகால இந்திய முதலாளித்துவத்தில் வர்க்க போராட்டம், சாதிய கட்டமைப்பை தகர்க்கும் சமூக நீதிக்கான போராட்டம், பெண் விடுதலை போராட்டம் ஆகிய மூன்று முக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன. மனுதர்மத்தை முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ். இதையெல்லாம் ஏற்காது. இந்திய பொருளாதாரம் கரோனா காலத்திற்கு முன்பே மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. கரோனா கெடுபிடிகள் அதை மேலும் வீரியமாக்கிவிட்டன.

 

சொந்த நாட்டுக்குள்ளே மக்கள் வாழவழியின்றி புலம் பெயர்ந்து அலைகிறார்கள். நவதாராளமய முதலாளித்துவம் என்றுமில்லாத அளவுக்கு சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளால் ஆட்டுவிக்கப்படும் ஆட்சி நடக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளும், ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்து ராஷ்டிரா கொள்கையோடு ஒத்துப்போகிறார்கள். மனுவும் பணமும் (Manu and Money)  கைகோர்த்து நிற்கின்றன.

 

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஒருபுறமிருக்க, இந்தியாவின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறது அரசு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றப்படுகின்றன. தியாகங்கள் செய்து பெற்ற தொழிலாளர் உரிமைச் சட்டங்களை கேலிக்கூத்தாக்குகிறார்கள். இதையெல்லாம் கண்டித்து போராடினால் சாதிரீதியிலும், மதரீதியிலும் பிளவுபடுத்துகிறார்கள். போராடுகிறவர்கள் பெண்கள் எனில் கீழானவர்களாக நடத்துகிறார்கள்.

 

நாம் எதிர்கொள்ளும் துயரங்களை தெய்வீக விதிகள் என்றெண்ணி அடங்கிப்போக சொல்கிறார்கள். இந்துத்துவா கருத்தியலைக் கேள்வியெழுப்பி, சுயமரியாதை, முற்போக்கு பேசியவர்களைப் படுகொலை செய்கிறார்கள். மதமென்ற மாயையின் கீழ் சாமான்ய மக்களை ஒன்று திரட்டுகிறார்கள். சத்குருக்களும், சங்கராச்சாரியார்களும் சொல்லும் மதமும், சாதாரண ஏழை, எளிய மக்கள் நம்பும் மதமும் வெவ்வேறானது என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

 

காரல் மார்க்ஸ் எனும் பெரும்ஞானி, தத்துவஞானிகள் இதுவரை உலகத்தை வியாக்கியானம் செய்துள்ளார்கள். ஆனால், இந்த உலகத்தை மாற்றுவதுதான் மிகமுக்கியமான விஷயம்’ என்றுரைத்தார். நம் இந்தியாவை மக்களுக்கானதாக மாற்ற வேண்டுமென்றால், அதற்கு சோசலிசம் மட்டுமே மாற்று. உலகின் பல இடங்களிலும், புதிய கோணங்களில் சோசலிசத்துக்கான மாற்றங்கள், இடத்திற்கேற்றாற்போல் நிகழ்ந்து வருகின்றன. அப்படியொரு மாற்றான சோசலிசத்தை நம் இந்தியாவில் கட்டுவது பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

 

இங்குதான் கலை இலக்கியப் பண்பாட்டு தளத்தில் பெரும் சவால்கள் முன்னிற்கின்றன. இங்கே நாம் மானுட விடுதலை பற்றி பேசவேண்டும். கொள்வாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பதால் மானுடம் வென்றது என்று கம்பன் பாடுவானே… அதைத்தான் மாமேதை கார்ல் மார்க்ஸும் பேசினார். நம்முடைய அரசியல் சாசனம் மக்களாகிய நாம் என்றுதான் தொடங்குகிறது. அதில் இங்கே இந்து, முஸ்லீம், கிறித்தவன், பவுத்தன் என்று சொல்லவில்லை. பிராமணன், தலித், சூத்திரன் என்று சொல்லவில்லை. நாம் மானுடர்களைப் புரிந்துகொள்வதும், சக மானுடர்களைப் அரவணைப்பதுதான் முக்கியம்.

 

இந்திய சூழலில் பாசிச சக்திகளை முறியடிக்க, கார்ப்பரேட் முதலாளித்துவத்தை வீழ்த்த, மக்கள் விடுதலை விரும்பும் அனைத்து கருத்துடையோரும் ஒரே அணியில் திரளவேண்டும். ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். இதுவே காலத்தின் கட்டாயம்.

 

இந்திய புரட்சி என்பது பொருளாதார புரட்சி மட்டுமின்றி, முதலாளித்துவ பிரச்சனை மட்டுமின்றி, சமூக நீதிக்கான, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் வெற்றியில் இருக்கிறது'' என விரிவாக பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்