பரிணாம வளர்ச்சியில் வேதியல் மூலக்கூறுகளைக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய விஷயத்தை விலங்குகள் மீது செலுத்தி அதற்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் அதை மனிதனும் பயன்படுத்தலாம் என்று சட்டமும் அறிவியலும் சொல்லுகிறது. ஆனால், இந்தச் சட்டமும் அறிவியலும் மனிதன் மூளைக்கு எப்படி தட்டுப்பட்டது என்ற கேள்வி எழுமாயின் அதன் விடையும் இதிலே இருக்கிறது. எப்படி என்றால் மனித இனம் முதல் முதலில் உண்ட உணவு என்பது அவர்கள் வாழ்ந்த காட்டுப் பகுதியில் விலங்குகளும் பறவைகளும் எதைத் தின்றதோ அதைத்தான் அவர்களும் தின்றனர். இப்படி மெய்யுணர்வில் உணர்ந்து பரிசோதித்த மெய்யறிவியலைத்தான் இன்றைய நவீன உலகம் ஞான அறிவியல் என்றும் சட்டம் என்றும் சொல்லுகிறது. சரி இவ்வளவு வியாக்கியானம் எதற்கு என்றால் இன்று, மனித இனத்தின் மிகமுக்கியமான நாள். அதுமட்டுமின்றி இதற்கு பிறகு பார்க்கப்போகும் உலக காஃபி தினத்தை பற்றிய வரலாற்று உண்மையும் கதையும் இதனோடு சம்பந்தம் பட்டதாக இருக்கும். அதற்குதான்.
இன்று உலக காஃபி தினம். இந்த காஃபிக்கும் நம் மனித இனத்திற்கும் 11 நூற்றாண்டுகால உறவு இருந்து வருகிறது, இது இனியும் இருக்கும் என்பதுதான் உண்மை. சரி இந்த காஃபியை யார், எங்கு, எப்படி, கண்டுபிடித்தார்கள். இது எப்படி இன்று உலகம் முழுக்க வலம்வருகிறது. இதன் பிறப்பிடம் எது, பிழைப்பிடம் எது என்பதைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
காஃபி, கண்டறிந்ததில் சில முகங்கள் இருக்கிறது. ஒரு காலகட்டம்வரையில், ஒன்பதாம் நூற்றாண்டில் எதியோப்பியாவில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த கால்டி என்பவரின் ஆடுகள் அங்கு செந்நிறத்தில் இருந்த ஒரு பழத்தை தின்றதும், அது உற்சாகத்துடன் ஓடுவதைக்கண்டு அவரும் அந்தப் பழத்தை சுவைத்துப்பார்த்து அதில் ஏதோ ஒரு வித்தியாசமும் புத்துணர்ச்சியும் இருப்பதைக்கண்டு அங்கு இருந்த ஒரு துறவியிடம் அதைத்தர, அதை அவர் தீயிலிட்டு சுட அங்கு இருந்தவர்களுக்கு மயக்கநிலை ஏற்பட்டதாகவும், பின் அந்த பழத்தின் சூட்டை குறைக்க தண்ணீரில் போட்டதாகவும் பின் அந்தத் தண்ணீர் குடித்ததில் இருந்துதான் உலகத்தின் முதல் காஃபி பிறந்ததாக ஒரு கதை இருக்கிறது.
மொரோக்கோ நாட்டை சேர்ந்த அபு ஹல் ஹசன் என்பவர் எத்தியோப்பியாவிற்கு சென்றிருந்தபோது, அங்கு இருக்கும் பறவைகள் மற்றப் பறவைகளைவிடவும் சற்று உற்சாகத்துடன் இருப்பதைக்கண்டு அவரும் அந்தப் பறவைகள் சாப்பிடும் பழத்தை தேடி சாப்பிட்டபோது அவருக்குள்ளும் அந்த உற்சாகத்தை கண்டுள்ளார். இன்னொரு பக்கம் பார்க்கும்போது, ஷேக் அபுல் ஹாசன் என்பவரின் சீடர் ஒமர் என்பவர் நாடு கடத்தப்பட்டபோது அங்கு பசியில் இருந்த அவர், சாப்பிட எதுவும் கிடைக்காமல் அருகில் புதரினுள் இருந்த ஒரு பழத்தை எடுத்து திறன்றதாகவும் அது கசப்பாக இருக்க அதை தீயிலிட்டு சுட்டு, பின் அதை நீரில் போட்டு அந்த நீரை குடித்ததாகவும் ஒரு கதை இருக்கிறது. அப்த அல் கதிர் என்பவர் எழுதியுள்ள குறிப்புகளை சான்றாகக் கொண்டு பெரும்பாலானோர் ஓமரின் கதைதான் உண்மை என்று கருதுகிறார்கள்.
ஏமன் நாட்டில் காஃபி கடவுள் வழிபாட்டில் முக்கியமானதாக இருந்து இருக்கிறது. காரணம், சூஃபிக்கள் இரவு நேரங்களில் கடவுளை வணங்கும்போது தூக்கம் வராமல் இருக்க காஃபியை உபயோகித்து இருக்கிறார்கள். அதன் பின் சற்று காலத்திற்குள் மெக்காவில் காஃபிக்கு தடை விதிக்கப்பட்டது. தடைக்கான காரணமும் அதன் உற்சாகம்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.
இது இந்தியாவிற்கு வந்தத்தின் கதைதான் மிக சுவாரசியமானது. 17-ஆம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் இருந்து பாபா பூடன் எனும் சூஃபி துறவி ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு ஏமன் வழியாக இந்தியா திரும்பும்போது, அங்கு காஃபியை சுவைத்துப் பார்த்திருக்கிறார். அது உற்சாகத்தை அளித்ததைத் தொடர்ந்து அதனை இந்தியாவிற்கு கொண்டுவர முயன்று இருக்கிறார். ஆனால், அவர்கள் அதைத்தர மறுத்து இருக்கிறார்கள். பின் யாருக்கும் தெரியாமல் சில விதைகளை மறைத்து இந்தியாவிற்கு கொண்டுவந்து தன் மாநிலத்தில் உள்ள சிக்மகளூரில் விதைத்து இருக்கிறார். அதுதான் இன்று இந்தியா முழுக்க பரவியுள்ளது. இப்படித்தான் காஃபி மனித இனத்திற்கும், இந்தியாவிற்கும் வந்துள்ளது.