புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு மற்றும் சமகால அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை நம்மோடு சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ஜி.செல்வா பகிர்ந்துகொள்கிறார்.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காதவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். நம் நாட்டை காட்டிக்கொடுப்பதற்காக ஆங்கிலேயர்களிடம் சம்பளம் பெற்றவர் சாவர்க்கர். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலுக்கு புதிய கதைகளை இவர்களாக உருவாக்கியுள்ளனர். அந்தக் காலத்தில் நேரு மறுத்தபோதும் காங்கிரஸ் கட்சியில் இருந்த சில வலதுசாரி சிந்தனையாளர்கள் பல்வேறு பூஜைகள் செய்து அந்த செங்கோலைப் பெற்றனர். பல்வேறு தலைவர்கள் மற்றும் மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை செங்கோலை வைத்து இவர்கள் மறைக்கப் பார்க்கின்றனர்.
இவர்கள் மனுஸ்மிருதியை ஏற்பவர்கள். அதன் காரணமாகவே மன்னர் காலத்து செங்கோலை வைத்து அரசியல் செய்கின்றனர். இந்தக் காலத்து மக்கள் நம்புவதற்காக புதிய கதைகளை உருவாக்குகின்றனர். மவுண்ட் பேட்டனிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் நேருவிடம் வந்ததாக எந்த ஆவணமும் இல்லை. பிரிட்டிஷாரிடம் மூன்று முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் சாவர்க்கர். மத அடிப்படையில் இந்த தேசத்தை முதலில் வரையறுத்தவர் சாவர்க்கர் தான். ஒரே ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியைக் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் காட்ட முடியாது.
புதிய நாடாளுமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த அன்றைய குடியரசுத் தலைவரை இவர்கள் அழைக்கவில்லை. இப்போது நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. இது ஒரு மிகப்பெரிய துரோகம். பாராளுமன்றத்துக்கே வராத, எந்த வேலையும் செய்யாத பிரதமருக்கு புதிய பாராளுமன்றம் எதற்கு? நாடாளுமன்ற ஜனநாயகத்தை இவர்கள் சிதைக்கிறார்கள். அதனால்தான் எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணித்தனர். பாஜக எம்.பி மீதான பாலியல் புகாரில் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களை பாஜக கண்டுகொள்ளவே இல்லை. இதுதான் இவர்கள் ஜனநாயகத்தை மதிக்கும் போக்கு.