கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து திமுக எம்.பி.கனிமொழியிடம் அரசு டாக்டர்கள் பலரும் புலம்பித் தள்ளியுள்ள நிலையில், அது குறித்த ஊழல்களைச் சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் கனிமொழி.
கரோனா வைரஸ் பரவுதலை அறிந்து தனது தூத்துக்குடி தொகுதியில் களமிறங்கி ஆய்வுப் பணிகளைக் கடந்த வாரம் துவக்கினார் கனிமொழி. இதற்காக 1 வாரம் தூத்துக்குடியிலேயே தங்கியிருந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு விசிட் அடித்தவர், அங்கு அட்மிட் செய்யப்பட்டிருந்த நோயாளிகளின் நிலைமையைக் கேட்டறிந்ததுடன், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் தேவையான மருத்துவப் பாதுகாப்பு பொருட்களை வழங்கினார்.

அப்போது, ’’மருத்துவ உதவிகள் எது தேவையாக இருந்தாலும் என்னிடம் கேட்கலாம்’’ எனச் சொல்லியிருந்தார் கனிமொழி. இந்தச் சூழலில், சமீபத்தில் கனிமொழியைத் தொடர்புகொண்ட தூத்துக்குடி அரசு டாக்டர்கள், ’’கரோனா தொற்று தாக்கமலிருக்கும் மருத்துவக் கவச உடைகள் வேண்டும்’’ எனக் கோரிக்கை வைத்தனர். ‘’எத்தனை பேருக்கு வேண்டும்?’’ எனக் கனிமொழி கேட்க, ’’100 செட்டுகள் தேவைப்படுகிறது மேடம் ‘’ எனச் சொல்லியுள்ளனர்.
உடனே, டாக்டர்களுக்கும் செவிலியர்களுக்குமான கவச உடைகளைச் சென்னை மற்றும் கோவை நகரங்களில் பர்ச்சேஸ் செய்தார் கனிமொழி. பர்ச்சேஸ் செய்தத்தில் 174 செட்டுகள் கிடைத்தன. அதனை உடனடியாக, கோரிக்கை வைத்த டாக்டர்களுக்கு அனுப்பி வைத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட டாக்டர்கள், கனிமொழிக்கு நன்றி சொன்னபோது, ‘’உங்களுக்குத் தேவையான கவச உடைகளைத் தமிழக அரசு தரவில்லையா ?’’ எனக் கனிமொழி கேட்க, ’’சுகாதார துறையிலிருந்து கவச உடைகள் வந்தன. ஆனால், அவைகள் தரமற்றவையாக இருந்தன. பார்சலிலிருந்து எடுக்கும் போதே பல ஆடைகள் கிழிந்து கிடந்தன. பயன்படுத்த பயனற்றவைகளாக இருந்தது’’ என்று சொல்லி ஆதங்கப்பட்டிருக்கிறார்கள்.

அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கனிமொழி, ’’நாடே ஒரு நெருக்கடியான சூழலில் சிக்கியிருக்கும் போது, இந்தச் சூழலிலும் ஊழலா ?’’ என அவர்களிடம் சொல்லி விட்டு, தமிழக மருத்துவத் துறைகளிலுள்ள தனக்குத் தெரிந்த அதிகாரிகளிடமும், டாக்டர்களிடமும், ’’கரோனாவிற்காக கொள்முதல் செய்யப்படும் உபகரணங்களில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்த விபரங்கள் வேண்டும் ‘’ எனக் கேட்டுள்ளார். மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து தமிழக சுகாதாரத் துறையில் நடந்துள்ள ஊழல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் ரகசியமாக ஈடுபட்டுள்ளார் கனிமொழி !