மந்திரி பதவி கேட்டு மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற அப்பா ஓ.பி.எஸ். எடுக்கும் முயற்சிகளுக்கு தடை போடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். இதனால் ஓ.பி.எஸ்சுக்கும் இ.பி.எஸ்.சுக்குமிடையே பனிப்போர் உச்சத்தில் இருப்பதாக அ.தி.மு.க.வில் தகவல்கள் கசிகின்றன.
"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி, தேனி தொகுதியில் மட்டும் வென்றது. தனது மகன் ரவீந்திரநாத்தை வெற்றிபெற வைக்க பெரும்பாடு பட்டார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அப்போதிலிருந்தே டெல்லியின் குட் புக்கில் ஓ.பி.எஸ்.சுக்கு ஏறுமுகம் தான். இந்த நம்பிக்கையில் தனது மகன் ரவீந்திரநாத்தை மத்திய பா.ஜ.க. அமைச்சரவையில் இணைத்துவிட வேண்டும் என காய்களை நகர்த்தினார் ஓ.பி.எஸ். அப்போது, "அமைச்சரவையில் அ.தி.மு.க.வை இணைத்துக் கொள்கிறேன். ஆனா, ஒருவருக்குத்தான் வாய்ப்பு. அது யாருக்கு என்பதை உங்கள் கட்சியில் பேசி முடிவெடுங்கள்' என தெளிவாக ஓ.பி.எஸ்.சுக்கு தகவலை பாஸ் பண்ணியிருந்தார் பிரதமர் மோடி.
மகனுக்கு மந்திரி பதவி கேட்டு ஓ.பி.எஸ். முயற்சிப்பதை எடப்பாடி ரசிக்கவில்லை. அதேசமயம், ஒருவருக்குத்தான் வாய்ப்பு என மோடி சொல்லியிருந்ததை அறிந்து குஷியாகி விட்டார். அப்போது, மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து அ.தி.மு.க. தலைவர்களிடையே கலந்துரையாடல் நடந்தது. ஓ.பி.எஸ். மகனுக்கு மந்திரி பதவி கிடைக்கக்கூடாது என திட்டமிட்டு ராஜ்யசபா எம்.பி. வைத்தியலிங்கத்தை கோதாவில் இறக்கினார் எடப்பாடி. அமைச்சர் பதவிக்காக வைத்தியும் கச்சை கட்ட, யாருக்கும் கிடைக்காமல் வாய்ப்பு பறிபோனது. இதனால் எடப்பாடி மீது ஓ.பி.எஸ்.சுக்கு ஏகத்துக்கும் கோபம். இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தை கடந்த 6 மாதமாக தள்ளிவைத்துள்ள பிரதமர் மோடி, தற்போது அது குறித்து ஆலோசித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அமைச்சர் பதவி கேட்டு அப்பா ஓ.பி.எஸ்.சிடம் வலியுறுத்தியுள்ளார் ரவீந்திரநாத். அதனையொட்டி, எடப்பாடியிடம் ஓ.பி.எஸ். விவாதிக்க, மீண்டும் தடைபோடுகிறார் எடப்பாடி'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தினர்.
ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான இரு தரப்பு ஆதரவாளர்களிடமும் நாம் விசாரித்தபோது, "அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய டெல்லியில் திட்டமிடப்படுகிறது என்பதை அறிந்த ரவீந்திரநாத், "இந்த முறை நான் ஏமாறத் தயாராக இல்லை. அதனால் கட்சியிலும் டெல்லியிலும் பேசி அமைச்சரவையில் இடம் வாங்கிக் கொடுங்கள். முடியாதுன்னா சொல்லிடுங்க. எப்படி வாங்க முடியுமோ அப்படி வாங்கிக்கிறேன்' என ஓ.பி.எஸ்.சிடம் விவாதம் செய்திருக்கிறார். அப்போது, "அப்படியெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் மாதிரியெல்லாம் அரசியல் செய்ய முடியாது. கட்சிக்குன்னு சில வரையறைகள் இருக்கின்றன. உன்னை விட சீனியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் பொறுமையாகத் தான் இருக்க வேண்டும்' என மகனுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். அவர் மகனோ அதை ஏற்கவில்லை.
இந்த நிலையில், எடப்பாடியிடம் மத்திய அமைச்சர் பதவி குறித்து மகனுக்காக ஓ.பி.எஸ். விவாதிக்க, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடக்குமான்னு எனக்குத் தெரியலை. அப்படியே நடந்தாலும், சீனியர்களை தவிர்த்து விட்டு உங்க மகனுக்காக நான் எப்படி சிபாரிசு செய்ய முடியும்? அப்பா துணை முதல்வர், மகன் மத்திய அமைச்சர்னா கட்சிக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடிக்கும். வேணும்னா துணை முதல்வர் பதவியிலிருந்து நீங்க விலகிக்கிங்க. அதை காரணம் காட்டி சீனியர்களிடம் பேசலாம். அவர்கள் சம்மதித்தால் எனக்குப் பிரச்சனை இல்லை' என எடப்பாடி சொல்ல, அவருடைய பேச்சு ஓ.பி.எஸ்.சை டென்சன் படுத்தியுள்ளது. கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மேலும் விவாதிப்பதை துண்டித்துக்கொண்டார்.
தனது மகனை ஓ.பி.எஸ். ஜெயிக்க வைத்ததுபோல, சேலம் மாவட்டத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களை எடப்பாடி ஜெயிக்க வைத்திருக்க வேண்டும். அவரால் முடியவில்லை. சொந்த மாவட்டத்திலேயே அவரது செல்வாக்கு சரிந்து கிடக்கிறது. இந்த நிலையில், ஓ.பி.எஸ். மகன் மந்திரியானால் சேலம் உட்பட அனைத்து மாவட்ட அ.தி.மு.க.வினரும் ஓ.பி.எஸ்.சையும் அவரது மகனையும் சந்திக்கத் துவங்கி விடுவார்கள். அதன் மூலம் கட்சியில் ஓ.பி.எஸ்.சின் செல்வாக்கு வலிமையாகி விடும். அப்படி ஒரு சூழல் உருவாவது தனக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறார் முதல்வர். அதற்குப் பயந்தே ஓ.பி.எஸ். மகனுக்கு மந்திரி பதவி கிடைக்கக்கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி. அதிகாரமில்லை என்றாலும் துணை முதல்வர் பதவி ஓ.பி.எஸ்.சுக்கு ஒரு கௌரவத்தை கொடுத்திருப்பதால் அதற்கு செக் வைத்தால்தான் மகனுக்கு மந்திரி பதவி கேட்க மாட்டார் என யோசித்தே கண்டிஷன் போடுகிறார் முதல்வர்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.
"மகனுக்காக வைத்த கோரிக்கையை எடப்பாடி நிராகரித்ததில் ஓ.பி.எஸ். அப்செட்டானாலும் கவலைப்படவில்லை. டெல்லியில் தனக்குள்ள தொடர்புகள் மூலம் முயற்சிகளை அவர் எடுத்து வருவதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. அதேசமயம், மத்திய அமைச்சரவையில் மகனுக்கு வாய்ப்பு பெறுவதில் ஓ.பி. எஸ்.சுக்கும் இ.பி.எஸ்.சுக்கும் பனிப்போர் உச்சத்தில் இருப்பதால் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்'' என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். இந்த நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, "நவம்பரில் நடக்கும் குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய நினைக்கிறார் பிரதமர் மோடி. ஆனா. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சில சிபாரிசுகளை செய்கிறது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் விரிவாக்கம் தள்ளிப்போகலாம்'' என்கின்றனர்.