Skip to main content

சீமான் வீட்டில் நடந்த சம்பவம்; காவல்துறைக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Published on 11/03/2025 | Edited on 11/03/2025
 Incident at Seeman's house; Court orders police

சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். சம்மனில் குறிப்பிட்டிருந்த படி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகாத நிலையில் 28.02.2025 காலை 11 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டில் கடந்த 27 ஆம் தேதி சம்மன் ஒட்டப்பட்டது. இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த உதவியாளர் ஒருவரால் கிழிக்கப்பட்டது.

இந்த சம்மனை கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த நீலாங்கரை காவல் ஆய்வாளர், சீமான் வீட்டு காவலாளியாக இருந்த முன்னாள் ராணுவ வீரரான அமல்ராஜை குண்டுக்கட்டாக இழுத்துச் சென்றார். அதேபோல் சம்மனை கிழித்த நபரையும் போலீசார் கைது செய்தனர். கடந்த 27 ஆம் தேதி சீமானின் வீட்டில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கைது மற்றும் தாக்குதல் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து ஜாமீன் கோரி கைது செய்யப்பட்ட இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் மற்றும் சுபாஷ் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், 'அரசியல் உள்நோக்கத்தோடு தாங்கள் கைது செய்யப்பட்டதாகவும், காவல்துறை வைக்கும் குற்றச்சாட்டு தவறானது. உரிமம் உள்ள துப்பாக்கியை வைத்திருந்தோம். ஆயுதத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது தவறு' என தெரிவித்திருந்தனர்.

நீதிபதி சுந்தர் முன்பு இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. வெள்ளிக்கிழமை இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைப்பதாக நீதிபதி தெரிவித்த நிலையில், மனுதாரர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அதனை ஏற்ற நீதிபதி, வழக்கை நாளை மறுநாள் விசாரிக்க ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்