இப்போது விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை யார் சந்தித்தது, எவ்வளவு நேரம், எப்போது, என்ன பேசினார்கள், என்ன சாப்பிட்டார்கள் என்று சர்ச்சைகளும், விவாதங்களும் நீண்டுகொண்டே இருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் வைகோ பிரபாகரனை சந்தித்தது எப்போது, என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
1989-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்திசாயும் நேரமோ அல்லது அதிகாலை நேரமோ சரியாகத் தெரியவில்லை. உடைந்துபோன படகில் ஒரு டசன் ஆசாமிகள் இருந்தார்கள். எல்லோரும் இறுக்கமான முகத்தோடு எதுவும் பேசிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தார்கள். கடல் காற்று முகத்தில் அறையும் வேகத்தில் வீசிக்கொண்டிருந்தது. கழுத்தில் இருக்கும் துண்டை சரிபார்த்த படியே வை.கோபால்சாமி படகில் அமர்ந்திருக்கிறார். அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். கடற்புலிகள் கையில் ஆயுதங்களோடு சுற்றி வளைத்திருப்பதை பார்க்கும்போது அவரைக் கடத்திக் கொண்டுபோவது போலத் தோன்றும். உற்றுப்பார்க்கும்போதுதான் வை.கோபால்சாமியின் பதற்றமில்லாத முகம் தெரியும்.
வை.கோபால்சாமி அவர்களோடு ஏதோ பேசுகிறார், படகு நகர ஆரம்பிக்கிறது. வவுனியாவின் எல்லைக்கு வந்த பின்னர் கடற்புலிகள் விடைபெற்றுக் கொள்கிறார்கள். வை.கோபால் சாமியை இன்னொரு புலிகள்படை உள்ளே அழைத்து செல்கிறது. பச்சைக்கலர் யூனிபார்ம் அவர்களை காட்டுப் புலிகள் என்பதைக்காட்டுகிறது. அடுத்த காட்சி விரிகிறது. ஒரு கட்டிடமோ அல்லது கூடாரமோ தெளிவாக இல்லை. உள்ளே புலிகள் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்தி நின்று கொண்டிருக்கிறார்கள். உள்ளே நுழைந்த வை.கோபால்சாமியை பிரபாகரன் எதிர்கொண்டு வரவேற்கிறார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொள்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளை வை.கோபால்சாமி பாராட்டுகிறார். சிங்கள அரசின் இனவெறியைக் கண்டிப்பதாக சொல்கிறார். விடுதலைப் புலிகள் போராட்டம் வெற்றி பெறும் என்றும் அதற்காக வாழ்த்துச் செய்தியை தமிழ்நாட்டிலிருந்து சுமந்து வந்திருப்பதாகச் சொல்கிறார். அடுத்தமுறை வவுனியாவுக்கு வரும்போது தமிழ் ஈழம் கிடைத்திருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார். பிரபாகரன் மற்றும் அவருடன் இருப்பவர்களுடன் கைகுலுக்கி விடைபெறுகிறார்.
வை.கோபால்சாமியின் பயணம் பற்றிய எடிட் செய்யப்பட்ட வீடியோ டேப் காட்சிகள்தான் இவை.
வை.கோபால்சாமி திரும்பி வந்தபிறகு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. அலுவலகங்களில் வீடியோ டேப் ஒலிபரப்பானது, அதற்குப் பின்னர்தான் விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்தது. வை.கோபால்சாமியின் வவுனியா பயணம் விடுதலைப்புலிகளுக்கு உற்சாகமான விஷயமாக அமைந்தது. புலிகள் தங்களுடைய பிரத்தியேக வானொலியில் இந்தப் பயணம் பற்றி சிறப்பு செய்திகளில் சொன்னார்கள். பிரபாகரனுடனான சந்திப்பு பற்றியும் பேசப்பட்ட விஷயங்களும் விவரமாக ஒலிபரப்பப்பட்டன.
தோணியில் ஏறியது முதல் பிரபாகரனை சந்தித்துவிட்டு விடைபெறுவது வரையிலான அனைத்து முக்கியமான சம்பவங்களும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ டேப், தமிழ்நாட்டில் புயலைக் கிளப்பியது. 1989 பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து புயலைக் கிளம்பியவர் 1989 மார்ச் 3-ஆம் தேதி படகின் மூலமாக திரும்பி வந்தார். கிட்டத்தட்ட 24 நாட்கள் வை.கோபால்சாமி வவுனியா காட்டில் தங்கியிருந்தார். இது தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பியது. ஒரு ராஜ்யசபா எம்.பி. யாருக்கும் தெரியாமல் ரகசியப் பயணம் போனது ஏன்? எப்படி போக முடிந்தது? பயணத்திற்கு ஏற்பாடு செய்தது யார்? திடீரென்று பிரபாகரனை சந்திக்க நினைத்தது ஏன்? அப்படி என்ன அவசரம்? பிரபாகரனிடம் வை.கோபால்சாமி பேசியது என்ன? இப்படி ஏகப்பட்ட கேள்விக் கணைகள் நாலா பக்கமுமிருந்து ஒரே நேரத்தில் தொடுக்கப்பட்டன.
இந்த கேள்விகளுக்கெல்லாம் ஓரளவுக்கு விடை கொடுத்தது ஒரு கடிதம்:
“"எனது உயிரினும் மேலான சக்தியாய் இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காமல் என்னை இயக்கி வரும் தலைவர் அண்ணன் முதல்வர் கலைஞர் அவர்களின் பாதங்களில் இந்த மடலை சமர்ப்பிக்கிறேன். கடுகளவுகூட வருத்தமும், கோபமும் என்மீது எந்தக்கட்டத்திலும் ஏற்படா வண்ணம் பயம் கலந்து பக்தியுடன் தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பணியாற்றி வரும் நான் பல இரவிலும், பகலிலும் ஆழமாகச் சிந்தித்து எடுத்த முடிவின் விளைவாக, நான் எழுதிய இந்தக் கடிதம் தங்கள் திருக்கரங்களில் கிடைக்கும் வேளையில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்குமானால் ஈழத்திருநாட்டில் வவுனியா காட்டுப்பகுதிக்குள் தம்பி பிரபாகரனைக் காணச் சென்று கொண்டிருப்பேன்.
ஈழத்தமிழர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் பாதுகாப்பை நிரந்தரமாக உத்தரவாதமாக்கக்கூடிய வழிமுறைகளைக்காண பிரபாகரனுடன் பல கோணங்களிலும் இப்பிரச்சனையை விவாதித்து கருத்துக்களைப் பரிமாறி அதன்மூலம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகின்ற மனப்பான்மையை உருவாக்கிடவும் உண்மைநிலையை நேரில் கண்டறியவும் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
பிப்ரவரி-5 என்று தேதியிட்ட கடிதம் பிப்ரவரி இறுதியில் கருணாநிதியின் கைக்கு வந்துசேர்ந்தது.
உடனடியாக தி.மு.க.வின் செயற்குழு கூடியது. கட்சித் தலைமையிடம் அனுமதிபெறாமல் தன்னிச்சையாக இலங்கைக்கு வை.கோபால்சாமி பயணம் செய்தது பற்றி பலரும் பேசினார்கள். அவரைக் கட்சியை விட்டு நீக்கவேண்டும் என்று ஒரு குழுவினரும் நீக்கக் கூடாது என்று மற்றொரு குழுவினரும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
கோபால்சாமியின் இலங்கைப் பயணம் பற்றி கருணாநிதி, ராஜீவ் காந்தியிடம் விளக்கினார். தனிப்பட்ட சந்திப்பே தவிர கட்சி சார்பாக அனுப்பப்படவில்லை என்று விளக்கமளித்தார். அதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என்று ராஜீவ் சொல்லிவிட்டார். இதன்பிறகு விடுதலைப்புலிகள் தி.மு.க. தலைமை மௌனம் சாதிக்க ஆரம்பித்தது. ஆனால் வை.கோபால் சாமியோ தி.மு.க. கூட்டங்களில் புலிகளை ஆதரித்து வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருந்தார். தமிழ் ஈழம் பற்றிய சிந்தனையில் இருந்த இளைஞர் கூட்டம் வை.கோபால்சாமியின் பின்னால் வரத்தொடங்கியது'' என்கிறது ம.தி.மு.க. நூல்.