Skip to main content

ஊரெங்கும் வவ்வால்கள்! அச்சத்தில் கொரக்கை கிராம மக்கள் !

Published on 18/04/2020 | Edited on 18/04/2020

கரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று அவரவர் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வீட்டிலிருந்தபடியே வணங்குகிறார்கள் தூக்கமின்றி தவிப்பவர்கள். நோய் பயத்தினால் சரியாக சாப்பிடாமல் தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள் சாதாரண மக்கள். இது ஒருபக்கம் என்றால் அண்மையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல் தமிழக மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏன்?

  v


உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா என்ற வைரஸ் திட்டமிட்டு பரப்பப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா இப்படி பல்வேறு சர்ச்சைகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. அதுமட்டுமல்ல இந்த நோய் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்ற கருத்தையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.   இது சம்பந்தமாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மரங்களில் குடியிருக்கும் வௌவால்கள் மூலம் இந்த நோய் பரவி இருக்கக்கூடும் என்ற சர்ச்சை இப்போது மேலும், மேலும் அச்சத்தை உருவாகியுள்ளது. இது சம்பந்தமாக சீனா பல்வேறு ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது என கூறுகிறார்கள்.
 

nakkheeran app



இயற்கையாகவே வௌவால்கள் பலவகை வைரஸ் கிருமிகளை தன்னுள் வைத்திருக்கும் தன்மையுடையது என்கிறார்கள்   ஆராய்ச்சியாளர்கள்.   இதற்கு ஒரு உதாரண சம்பவத்தை கூறுகின்றனர்.... நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் கடந்த ஆண்டு நீபா என்ற வைரஸ் மனிதர்களுக்கு பரவியது.  இந்த நோய் "பிடரோ பஸ் "என்கிற ஒரு வகை பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவியது என்றும், அதுபோன்ற வவ்வால்கள் சாப்பிட்ட பழத்தை மனிதர்கள் சாப்பிடுவதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியது என்றும்,  அந்த அடிப்படையில் வவ்வால்கள் மூலம் கரோனா பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வவ்வால்களை வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டது.  இதில்,  தமிழகம், புதுச்சேரி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்ற இரண்டு வகையான வௌவால்களை பிடித்து ஆய்வு செய்தனர்.  அதில் இரண்டு வகையான வவ்வால்களுக்கு கரோனா வைரஸ் இருக்கிறது என்கிற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனது இந்திய மருத்துவ கவுன்சில்.

 

v


கேரளாவில்  நிபாவை போன்று கரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து, ஒரு மனிதனுக்கு பரவி அந்த மனிதனிடமிருந்து மற்றொரு மனிதருக்கு என சங்கிலித் தொடர் போன்று பரவக்கூடிய நோயாச்சே  இந்த கரோனா, என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.  இருந்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தற்போது மனிதர்களுக்கு பரவிவரும் கரோனாவுக்கும், வௌவால்களில் காணப்படுகின்ற கரோனாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது, மக்களுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது.

அதேவேளையில் வௌவால்கள் மூலம் இருந்து மக்களுக்கு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் முக்கியம் என்பதையும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் பல்வேறு வௌவால் இனங்கள் மரங்களில் தங்கி வாழ்ந்து வருகின்றன. அவை கிராமப்புறங்களில்தான் அதிக அளவில் வசித்து வருகின்றன. இதற்கு உதாரணமாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது கொரக்கை என்ற கிராமம். இந்த கிராமத்தில் நுழைவதற்கு முன்பே அங்குள்ள ஏரிக்கரையில் மிகப்பெரிய அய்யனார் கோயில் உள்ளது.   இக்கோயில் அருகிலேயே 2 பெரிய புளிய மரங்கள் உள்ளன.  இந்த மரங்களில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் தங்கி வாழ்ந்து வருகின்றன.  இந்த வவ்வால்கள் இம்மரங்களில் சுமார் ஐம்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

பொதுவாக வௌவால்கள் இரவில் இரைதேடச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி, பகல் முழுவதும்  இந்த மரங்களில் வந்து தங்கிக் கொள்ளும்.  இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஊர்மக்கள் இந்த வௌவால்களை பார்த்து அதன் கீச்கீச் சத்தத்தை கேட்டு சந்தோஷப்படுவார்கள்.   காலம்காலமாக இந்த கோவில் அருகே உள்ள மரங்களில் வௌவால்கள் வாழ்ந்து வருவதால் இது சாமிகளின் வௌவால்கள் என்று நம்புகிறார்கள் மக்கள்.

ஒரு முறை வௌவால்கள் இங்குள்ள மரங்களில் இருப்பதை தெரிந்துகொண்ட வேட்டைக்காரர்கள் சிலர் இரவில் அவைகளை பிடிப்பதற்கு வந்துள்ளனர்.  இதை அறிந்த கிராம மக்கள் அந்த வேட்டைக்காரர்களை விரட்டியடித்துள்ளனர். ஏனென்றால் இங்கு வாழும் வௌவால்கள் இங்கு உள்ள தெய்வங்களின் அருளால் வாழ்கின்றன என்று நம்புகிறார்கள்.  மேலும் இந்த வௌவால்களுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யாமல் அதனை அதன்போக்கில் வாழவிடுகிறார்கள். இவ்வூரில் தீபாவளி, திருவிழாக்கள் போன்ற பண்டிகை காலங்களில் கூட பட்டாசு வெடிப்பதில்லை காரணம் அந்த வெடிச் சத்தத்தை கேட்டு பயந்து போய் வௌவால்கள் பறந்து  சென்றுவிடும்.  பாவம் வௌவால்கள் என்பதால் பட்டாசு இல்லாத தீபாவளியாக, திருவிழாவாக நடத்துகிறார்கள்.

அதுமட்டுமல்ல, குடும்ப விசேஷங்கள் மற்றும் மனிதர்கள் இறந்து போனால் அந்த இறுதி ஊர்வலத்தில்கூட பட்டாசு வெடிப்பது இல்லை.   இப்படி தங்கள் ஊரில் வாழும் வௌவால்களுக்காக தங்களது சந்தோஷத்தையும், துக்கத்தையும்கூட கட்டுப்படுத்தி வாழ்கிறார்கள் கொரக்கை கிராம மக்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு வௌவால்கள் மூலம் கொரோனா நோய் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது என்ற செய்தி அவ்வூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது பற்றி ஊர் மக்களிடம் கேட்டபோது,   வௌவால்களுக்கும் கரோனா இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து வெளிப்படுத்தி உள்ளனர் என்ற தகவல் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   இருந்தாலும் இது தெய்வங்களின் அருளால் இங்கு வாழ்கின்றன, அப்படிப்பட்ட இந்த சாமிகளின் வௌவால்களுக்கு அது போன்று கொரோனா நோய்  பாதிப்பு இருக்காது என்று நம்புகிறோம்.  இருந்தாலும் தமிழக அரசு மருத்துவ ஆராய்ச்சியாளர்களை இங்கு அனுப்பி, இங்குள்ள வௌவால்களுக்கு உரிய பரிசோதனை செய்து உண்மைத்தன்மையை வெளிப்படுத்தி எங்கள் பகுதி மக்களின் அச்சத்தை போக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள் கொரக்கை கிராம மக்கள்.