சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தும், பாஜக அரசியல் செயல்பாடுகள் குறித்தும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்தும், நடிகை கஸ்தூரியின் கருத்துக்களைப் பற்றியும் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பல்வேறு விதமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் நம் முன் வைக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைப் பொறுத்தவரை அவர் கட்சியின் தலைவராக நீடிப்பாரா இல்லையா என்பது தெரியாத நிலையில், அவருடைய எதிர்கால அரசியல் வாழ்க்கை இருண்டு போயிருக்கிற நிலையில், பாஜக தலைமைக்கே 5 மாநில தேர்தலின் மீது அச்சத்தில் இருக்கும் போது எதிர்காலம் ஒன்றே இல்லாமல் இருக்கிற அண்ணாமலை எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.
பாஜகவிற்கும் தமிழகத்திற்குமே சம்பந்தம் இல்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கிறோம் என்பது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவுமே தவிர, தேர்தலுக்கு உதவாது. கடந்த முறை தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஹெச்.ராஜா நான்கு கோடிக்கு வீடு கட்டினார் என்று பாஜக நிர்வாகிகளே கூறிக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
3 சதவீதம் மட்டுமே வாக்கு வங்கி வைத்திருக்கிற பாஜக, அதை விட பத்து மடங்கு அதிக வாக்கு வங்கி வைத்திருக்கிற திமுகவிற்கு சரிசமம் என்று நினைத்துக் கொள்கிறது. பூனைக்குட்டிக்கும் புலிக்குட்டிக்குமான போட்டி என்பது இதுதான். ஓரமா போயி விளையாடுங்க உங்களுக்கு இங்கே களமே இல்லை. நீட்டிற்கு விலக்கு வாங்கி தந்தார்களா? தமிழக வளர்ச்சிக்கு எதாவது செய்தார்களா? தமிழகத்திற்கு பாஜக செய்தது என்னவென்று கேட்டால் இவர்களிடம் பதில் இல்லை. ஆருத்ரா வழியாக கோடிக்கணக்கான தொகை மோசடி செய்திருக்கிறார்கள் அதை காரணமாக சொல்லி ஓட்டு கேட்பார்களா?
மோடி ஒன்பது ஆண்டுகளாக சாதனை செய்திருக்கிறார் என்கிறார்கள். அதுவும் மணிப்பூரில் கலவரம் பண்ணியிருக்கீங்க, காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாத்தியிருக்கீங்க, இதனால பல மாநில தேர்தலில் தோல்வி அடைஞ்சிருக்கீங்க. பிளவு அரசியல், சக மனிதன் மீது வெறுப்பு அரசியல் செய்ததை விட பாஜக செய்த சாதனை என்னவென்று கேட்டால் சொல்லத் தெரியாது.
மணல் மாஃபியாக்களின் மீது ரெய்டு நடந்தது. அவர்களிடம் பாஜக தரப்பில் தேர்தல் நிதி தருமாறு கேட்டிருக்கிறார்கள். தர மறுக்கும் பட்சத்தில் அமலாக்கத்துறை, வருமானவரித் துறையினரைக் கொண்டு ரெய்டு நடத்துகிறார்கள். மணல் மாஃபியாக்களோ ரெய்டிற்கு பயந்து பெரும் தொகையினை கொடுக்கிறார்கள். அதனால் விடுவிக்கப்படுகிறார்கள். இதுதான் நடக்கிறது. பாஜகவின் ஒரு பிரிவாக அமலாக்கத்துறை செயல்படுகிறது.
சிறுபான்மையின மக்களிடம் நம்பிக்கையை பெறுவதற்காக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி சிறையிலிருக்கும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கைதிகளின் விடுதலையைப் பற்றி பேசுகிறார். ஒரு சலசலப்பை உண்டாக்குகிறார். ஆனால் அவர் அதிமுக ஆட்சிக் காலத்தில் இது பற்றி பேசவில்லை. சிஏஏ சட்டத்திற்கு ஓட்டு போட்டவர்கள் இவர்கள் தான். எடப்பாடி பேசியதால் பெரும்பான்மை மக்களிடம் இந்த பிரச்சனை போய் சேர்ந்திருக்கிறது என்பதும் உண்மை தான்.
அதிமுகவிற்கு சிறுபான்மை வாக்கு வங்கி இருக்கிறது என்பது, இது இட்லி என்றால் சட்னி கூட நம்பாது என்று சொல்லும் நகைச்சுவைக்கு ஒப்பானது தான். அதிமுக என்ற கட்சியை காப்பாற்ற பாஜக உடன் கூட்டணி முறித்துக் கொண்டது என்பது ஒருபுறம் இருக்கும் பட்சத்தில், கூட்டணியில் பெரிய முடிவுகளை பாஜக எடுப்பதால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் கூட்டணி முறிந்தது என்பது தான் காரணமாகும். விதை இல்லாத பழம் என்பார்களே கொட்டை இல்லாத பழம் அதைப்போல கொள்கை இல்லாதவர்களே அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களாக உருவெடுத்தார்கள். கொள்கை சிக்கலால் இவர்கள் பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொள்ளவில்லை.
காவிரி பிரச்சனை என்பது பிரிட்டிஷ் காலத்திலிருந்து இருக்கிறது. காவிரி தண்ணீரை பிரித்துக் கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வோம் என்கிற அளவிற்கு அங்கே விவசாயிகளை மடைமாற்றி ஒரு இனவெறி அரசியல் செய்து வைத்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக தமிழகத்திலும் அதற்கு இணையாக இனவெறியை உண்டாக்க வேண்டும் என்று சிலர் பேசுகிறார்கள். இது நியாயமில்லை. ஒரே நாட்டில் நதிநீர் பங்கீடு என்பது சட்ட ரீதியில் தான் சரி செய்து கொள்ள வேண்டும். இது குறித்தெல்லாம் காங்கிரசுக்கும் திமுகவிற்கும் இடையே சிண்டுமுடியுற வேலையை நடிகை கஸ்தூரி போன்றவர்கள் செய்கிறார்கள். பாஜகவின் வார்த்தையின் வேறு வடிவமாகத்தான் அவர் செயல்படுகிறார்.
நக்கீரனுக்கு அளித்த பேட்டியினை வீடியோ வடிவில் முழுமையாகக் காண....