சானியாவும் சர்ச்சைகளும்!
நவம்பர் 15- சானியா மிர்சா பிறந்தநாள்

பி.டி.உஷா, மல்லேஸ்வரி என்று அவ்வப்போது இந்திய பெண்களின் பெயர்கள் விளையாட்டுலகில் பேசப்பட்டாலும், கிரிக்கெட்டைத் தாண்டி இளைஞர்களிடையில் அப்பொழுது பெரிய ட்ரெண்டானது சானியா மிர்சாதான். டென்னிசிலும், மக்கள் மனதிலும் தனித்துவமான இடத்தை பிடித்தவர். ஆண் வீரர்களே ஆதிக்கம் செலுத்திய விளம்பரங்களில் , பெண் வீரராக, அழகிய மாடலாக அதிகம் வளம் வந்தார். ஹைதராபாத்தில் பிறந்து இந்தியாவிற்காக உலகமெல்லாம் விளையாடி வந்தவர். பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரு 'இன்ஷ்பிரேஷனாக' இருந்த சானியாவிற்கு இன்று பிறந்தநாள்.

புகழ், பணத்துக்கிணையாக சர்ச்சைகளையும் சம்பாதித்தார் சானியா. ஆரம்பத்திலிருந்தே சானியாவின் விளையாட்டு உடை விமர்சிக்கப்பட்டு வந்தது. அவரது வெற்றிகளைப் பார்க்காமல் உடையின் நீளத்தைப் பார்த்தவர்கள் விமர்சித்தனர். இன்னும் சிலர் அவர் இசுலாமிய கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் விமர்சித்தனர். இந்த விமர்சனங்கள் ஏற்படுத்திய மனஉளைச்சலைத் தாண்டித்தான் வெற்றிகளைக் குவித்தார் சானியா.
2008 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டென்னிஸ் போட்டியை பார்க்கும்போது, இந்திய கொடி முன்னாள் கால் வைத்து உட்கார்ந்திருப்பார்.இது இந்தியாவில் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.இதனை பற்றி அவர் கூறுகையில் "இந்தியாவை நான் மிகவும் நேசிக்கின்றேன்.நான் ஒரு 21 வயது பெண்தான், அரசியல்வாதி அல்ல"என்றார்.
2012 லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், பிற வீரர்கள் கையில் தேசிய கொடியோடு இருக்கும்போது சானியாவின் கையில் தேசியக் கொடி இல்லை. இதனால், அவரது தேசப் பற்று சந்தேகிக்கப்பட்டது. அதற்கு, "ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் பெருமை, பதக்கம் வாங்கிய பின்னர் தன் தேசிய கொடி உயர்வதை வெற்றி மேடையிலிருந்து பார்ப்பதே... அந்தப் பெருமையை அடைய வேண்டுமென்பதே என் விருப்பம் " என்றார்.

விளையாட்டில் தான் சர்ச்சைகள் என்றால் அவர் திருமணத்திலும் பிரச்சனை வந்தது. பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கை அவர் திருமணம் செய்துகொண்ட போது, அவர் இந்திய தேசத்துக்கே துரோகம் செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. தெலுங்கானா தனி மாநிலம் உருவாகி, அதன் தூதுவராக சானியா நியமிக்கப்பட்டபோது, 'பாகிஸ்தானின் மருமகளுக்கு இந்தத் தகுதியில்லை' என்ற விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன. ஒவ்வொரு சர்ச்சையின் போதும் பதிலளிப்பதை விட, அதைத் தாண்டித் தன்னை நிரூபிப்பதில் தான் கவனம் செலுத்தினார் இந்த விளையாட்டு அழகி!
சந்தோஷ் குமார்