Skip to main content

பாலத்தை உடைக்க மணல் திருடர்களுடன் ஒப்பந்தம்? அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

bridge

    தமிழ்நாட்டில் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் குடிதண்ணீருக்கு கூட கையேந்தி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றதால் விவசாயம் பொய்த்து நிலத்தடி நீரை சேமிக்கும் பனைமரங்கள் கூட பட்டுச் சாயும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

 

 


    மணல் நிறைந்த பகுதிகளில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்து பல மாவட்டங்களுக்கும் குடிதண்ணீர் வழங்கி வரும் நிலையில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படும் இடத்திற்கு அருகிலேயே மணல் அள்ளிவிட்டதால் அதற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 


    தற்போது கொள்ளிடம் ஆற்றுப் பாலம் உடைய மணல் கொள்ளை தான் காரணமா என்ற கேள்விக்கு அப்படிச் சொல்ல முடியாது என்று பொதுப்பணித்துறையை வைத்துள்ள முதலமைச்சரே பதில் சொல்லிவிட்டு சென்றார். ஆனால் மணல் திருடர்கள் பாலத்தின் அடியில் அள்ளிய மணல் தான் கொள்ளிடம் பாலம் உடைய காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.  

bridge


 

bridge


    மேலும் இதே போல இன்னும் பல பாலங்களை உடைக்க மணல் திருடர்களிடம் எழுதப்படாத ஒப்பந்தம் செய்துள்ளனர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் என்று குற்றச்சாட்டையும் எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். 


    அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு என்பது மிகப் பெரிய ஆறு. இதில் புதுக்கோட்டை  - திருமயம் சாலை  பகுதியில் ஒரு நாளைக்கு இரவில் 300 லாரிகள் வரை மணல் திருடுகிறது. அவசரத்திற்கு மரங்கள் இருக்க அதன் வேர்கள் தெரியும் அளவில் தோண்டி அள்ளிவிடுகிறார்கள். அதாவது மரமிருக்க வேர் தோண்டும் பணி நடக்கிறது. இதே போல அந்த ஆறு முழுவதும் சுமார் 50 கி.மீ தூரத்திற்கு மணல் கொள்ளை நடக்கிறது. அதிகாரிகள் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. பெயருக்கு சில மாட்டுவண்டிகளை மட்டும் பிடித்து வழக்கு பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


    அறந்தாங்கி பகுதியில் அழியாநிலை பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆலங்குடி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் ஆலமரத்தடியில் தொடர் போராட்டத்தை அறிசவித்து நடத்தினார்கள். சில நாட்களில் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் கோயில் இருக்கும் மணல் திட்டு என்பது தெரியாமல் போய்விட்டது. மணல் குவாரி அமைக்கவில்லை என்று உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. 

bridge 

bridge


    ஆனால் போராட்டம் கைவிடப்பட்ட நிலையிலும் எந்த ஆற்றையும், ஆற்று மணலையும் காத்து நிலத்தடி நீரை சேமிக்க நினைத்தார்களோ அந்த வெள்ளாற்றில் தினசரி 500 லாரிகளில் 5 பொக்கலின் வைத்து மணல் கொள்ளை நடக்கிறது. இத்தனைக்கம் அறந்தாங்கி நகரில் இரந்து 3 கி.மீ. தூரத்தில் தான் அந்த கொள்ளை நடக்கிறது. எந்த அதிகாரியும் கண்டகொள்ளவில்லை. 

அதனால் அறந்தாங்கி கோட்டாட்சியர் முதல் வட்டாட்சியர், மற்றும் காவல் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் வரை யார் யாருக்கு எவ்வளவு தொகை லஞ்சமாக கொடுத்துவிட்டு மணல் திருடுகிறார்கள் என்பதை ஒரு துண்டறிக்கையாக வெளியிட்டார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். அந்த துண்டறிக்கை வந்நத நாளில் சில மாட்டுவண்டிகளை மட்டும் பிடித்தார் வட்டாட்சியர் கருப்பையா.. ஆனால் ஒரு லாரி கூட பிடிபடவில்லை. 

 

 

    அறந்தாங்கி – காரைக்குடி சாலையில் வெள்ளாற்றை கடக்க தரடமட்டப் பாலம் இருந்தது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் அதிகமாக சென்றதால் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டதுடன் பல கிராமங்கள் தண்ணீரில் சிக்கி தவித்தது. அதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இப்போது அந்த பாலம் எப்ப சாயும் என்ற நிலையை உருவாக்கி உள்ளார்கள் மணல் கொள்ளையர்கள்.


    அதாவது.. வெள்ளாற்றில் மணல் திருடும் கொள்ளையர்கள் அதிகாரிகளின் எழுதப்படாத உத்தரவின் பேரில் பாலத்தின் கீழே உள்ள தூண்களை கூட மணலுக்காக தோண்டிவிட்டனர். அதனால் அந்த பாலத்தை தாங்க நிற்கும் தூண்கள் வலுலிழக்க தொடங்கி உள்ளது. அதனால் மீண்டும் ஒரு முறை தண்ணீர் அதிகமாக வந்தால் அறந்தாங்கி – காரைக்குடி சாலையில் உள்ள வெள்ளாற்றுப் பாலம் எந்த நிலையிலும் சாயும் வாய்ப்பு உள்ளது. இதை பல முறை நேரில் பார்த்த வருவாய்துறை அதிகாரிகள் எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை. காரணம் மணல் கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்சம்.


    அதனால் தான் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள்.. வெள்ளாற்றுப் பாலத்தை உடைக்க மணல் கொள்ளையர்களிடம் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுள்ளார்கள் அதிகாரிகள் என்று..


    இதன் பிறகும் இப்படி தூண்களைத் தோண்டி மணல் திருடினால் பாலம் இருக்காது. அதனால் ஏற்படும் விபத்தில் எத்தனை உயிர்கள் போகும் என்பது தெரியாது. போக்குவரத்தும் பாதிக்கும் அரசு பணமும் விரயமாகும். இதை தடுக்கும் அதிகாரி யார்? தடுக்க வேண்டிய அதிகாரிகளே மணல் கொள்ளையர்களை இரவில் சந்திக்கும் நிலை என்றால் எப்படி?

 

 


    அதே போல விராலிமலைத் தொகுதியில் ஆவூர் பகுதியில் உள்ள காட்டாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணையாக காக்கி சீருடை அணிந்த அதிகாரிகளே பாதுகாப்பாக சென்று பிரதான சாலைகளில் கையசைத்து வழியனுப்பி வைத்துவிட்டு வருகிறார்கள். 


    பல நேரங்களில் வெகுண்ட மக்கள் மணல் லாரிகளை சிறை பிடித்து வைத்துக் கொண்டாலும் அதை அதிகாரிகளே மீட்டு அனுப்பி வைக்கிறார்கள். இதனால் வறண்ட மாவட்டமாக புதுக்கோட்டை மீண்டும் வறட்சியாகி பாலைவனமாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்