இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் உங்களது பிரச்சாரம் எப்படி இருக்கும்?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னார்கள், கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னார்கள், விவசாய உற்பத்தி பொருள்களின் விலையை உயர்த்துவதாக சொன்னார்கள் இதையெல்லாம் செய்யவில்லை. குறிப்பாக தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம். எடப்பாடி பழனிசாமி அரசு மாநில உரிமைகளையும், நலன்களையும் விட்டுக்கொடுத்து பாஜகவின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து செயல்படுகிறது. இதனை முன்வைத்து எங்களது பிரச்சாரம் அமையும்.
கலைஞர், ஜெயலலிதா இரணடு ஆளுமைகள் இல்லாத நேரத்தில் நடக்கும் முதல் தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?
திமுக தலைவராக இருந்த கலைஞர் மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்படுகிறார். தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து உரிய மரியாதை அளித்து தொகுதி பங்கீடு உரிய வகையில் பிரித்து கொடுத்துள்ளார். எல்லோரையும் அரவணைத்து, ஒருங்கிணைத்து செல்கிறார்.
அதிமுகவின் விதி என்னவென்றால் அக்கட்சிக்கு பொதுச்செயலாளர் இருக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியாமல் இருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்று போட்டுள்ளார்கள். ஜெயலலிதா மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும் யாருடைய நிர்பந்தத்திற்கும் அடிபணிந்தது கிடையாது. ஆனால் இப்போது அதிமுகவில் இருப்பவர்கள் பாஜகவின் நிர்பந்தத்தற்கு அடிபணிந்து கூட்டணி வைத்துள்ளார்கள். ஜெயலலிதா இல்லாத நேரத்தில் அடிபணிந்து அதிமுக பரிதாப நிலையில் இருக்கிறது என்பதுதான் உண்மை.
ஒரே நாளில் திமுகவுடனும், அதிமுகவுடன் தேமுதிக பேசியதாக செய்திகள் வெளியானதை எப்படி பார்க்கிறீர்கள்?
கொள்கை இல்லையென்றால் எங்க வேண்டுமானாலும் பேசலாம். சீட் அல்ல பிரச்சனை. ஒரு கட்சி என்றால் கொள்கை இருக்க வேண்டும். தேமுதிகவுக்கு என்ன கொள்கை இருக்கிறது. வகுப்புவாதத்தை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? வகுப்புவாதத்தை எதிர்ப்பதாக இருந்திருந்தால் அந்த அணியுடன் பேசியிருக்கக்கூடாது. ஒரு கொள்கையற்ற நிலையில் இருக்கிறது தேமுதிக. ஆளும் அதிமுக பலவீனமாக இருக்கிறது, அதனை பயன்படுத்தி அதிக இடங்களை பெறலாம் என்று நினைக்கிறது. எந்தவித கொள்கையும் இல்லாமல் கூட்டணிக்கு நெருக்கியதால் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று அதிமுகவினர் கூறுகிறார்களே?
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தேர்தலுக்காக ஒன்று சேரவில்லை. கடந்த இரண்டு வருடமாக மக்கள் பிரச்சனைகளுக்காக எங்கள் அணி போராடியது எல்லோருக்கும் தெரியும். மாநில அரசுக்கு தேவையான நிதிகளை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று எங்கள் அணி போராடியது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று போராடியது எங்கள் அணிதான். 7 பேர் விடுதலையில் அமைச்சரவை முடிவை நிறைவேற்ற வேண்டும் என்பதும் எங்கள் அணிதான். மக்கள் பிரச்சனைகளுக்காக ஒன்றிணைந்து போராடிய நாங்கள், ஆட்சி மாற்றம் நடந்தால்தான் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதால் ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. எதிரணிதான் பச்சை சந்தர்ப்பவாத கூட்டணி.