என்னதான் ஆச்சு தே.மு.தி.க.வுக்கு என்பதுதான் அரசியல் வட்டார அதிர்ச்சி. தே.மு.தி.க. தரப்பிலேயே கேட்டோம். நம்மிடம் மனம் திறந்த அக்கட்சியினர், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் பா.ஜ.க.வும் மட்டும் போதும்ங்கிறது முதல்வர் எடப்பாடி மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலரின் எண்ணம். அதனால் தே.மு.தி.க.வை விரும்பவில்லை எடப்பாடி. ஆனால், தே.மு.தி.க. இருக்க வேண்டும் என பா.ஜ.க. விரும்பியது. அதற்கேற்ப ஓ.பி.எஸ்.சை டியூன் பண்ணினார் அமித்ஷா.
பா.ஜ.க. போட்டியிடுகிற 5 தொகுதிகளிலும், ஓ.பி.எஸ். சிபாரிசில் அவரது ஆதர வாளர்கள் களமிறங்கும் தொகுதிகளிலும் பா.ம.க.வுக்கு வாக்கு வங்கி கிடையாது. ஆனால், தே.மு.தி.க.வுக்கு கணிசமான வாக்குகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளில் தினகரனால் பிரியும் வாக்குகளை தே.மு.தி.க.வால் நிரப்பிவிட முடியும் என கணக்கிட்டே அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த்தை இணைக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து எடப்பாடிக்கு நெருக்கடி தந்தது. "நீங்களே பேசி முடியுங்கள்' என எடப்பாடி சொல்லி விட்டார். பியூஷ்கோயல் முதலில் பேசியபோது, பா.ம.க. அளவுக்கு சீட் உள்ளிட்ட எதிர்பார்ப்பு களை தே.மு.தி.க. வெளிப்படுத்தியது. இதை பியூஷ்கோயல் எடப்பாடியிடம் சொன்ன போது, "3 சீட்டுகளுக்கு மேலே தர முடியாது. மற்ற கோரிக்கைகளை பா.ஜ.க.தான் நிறைவேற்ற வேண்டும். எங்களால் முடியாது' என கைவிரித்தார்.
பேரத்தை அதிகரிப்பதற்காக தி.மு.க.வுடன் விஜயகாந்த் குடும்பம் பேசத் தொடங்கியது. இதனை அமித்ஷாவிடம் தெரியப்படுத்தினார் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ். அவரை சமாதானப்படுத்திய அமித்ஷா, பியூஷ்கோயலை தொடர்புகொண்டு, "பிரதமரின் சென்னைக் கூட்டத்தில் தே.மு.தி.க. மேடையேற வேண்டும். அதற்கேற்ப விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்த எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்துங்கள்' என கட்டளையிட்டிருக்கிறார். அமித்ஷா உத்தரவுபடிதான் ஓ.பி.எஸ்.ஸும் விஜயகாந்த்தை சந்தித்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரை அனுப்பி வைத்தவர் எடப்பாடி.
ஓ.பி.எஸ்.சிடம், பா.ம.க.வுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லி ஏகத்துக்கும் எகிறியடித்தார் பிரேமலதா. "இதெல்லாம் பேச இப்போது நேரமில்லை. 6 சீட்டுகளுக்கு நாங்கள் ஏறி வந்திருக்கிறோம். கூட்டணியை உறுதி செய்யுங்கள்' என ஓ.பி.எஸ். சொல்ல, பலகட்ட விவாதங்களுக்குப் பின், 6-க்கு ஒப்புக்கொண்ட பிரேமலதா, "இந்த தொகுதிகளெல்லாம் ஒதுக்க வேண்டும்' என சொல்ல, அதில் 4 தொகுதிகள் பா.ம.க.விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளாக இருந்தன. முடிவு ஏற்படாமல் வெளியேறிய ஓ.பி.எஸ். இது பற்றி இ.பி.எஸ்.ஸிடம் சொல்ல அவருக்கும் அதிர்ச்சி. அந்த சமயத்தில், எடப்பாடியை தொடர்பு கொண்ட பியூஷ் கோயல், "தே.மு. தி.க. எதிர்பார்க்கும் தொகுதிகள் பா.ம.க.விடம் இருந்தால் அதனை திரும்ப பெற்று தே.மு.தி.க.வுக்கு கொடுங்கள்' என அமித்ஷா சொல்வதாகச் சொல்ல, திகைத்துப்போன எடப்பாடி 4-ந்தேதி இரவு முழுவதும் தூங்கவில்லை.
டாக்டர் ராமதாசை தொடர்பு கொண்டு பேசியபடியே இருந்தார் எடப்பாடி. அவரை 5-ந்தேதி காலையில் சந்தித்த பா.ம.க. அன்புமணி, தொகுதிகள் மாற்றத்திற்கு சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், 6-ந்தேதி மதியம் ஹோட்டல் ட்ரைடெண்டில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தே.மு.தி.க. சுதீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பியூஷ் கோயல். அதிலும் தே.மு.தி.க. பிடிவாதம் காட்டிய துடன் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் பேசிக்கொண்டே தி.மு.க. துரைமுருகனிடமும் தே.மு.தி.க.வினர் பேச்சு நடத்திய விவகாரம், துரைமுருகன் வாயாலேயே அவருக்கேயுரிய நக்கல் நடையில் வெளிப்பட, விஜயகாந்த் குடும்பத்தின் மோசமான அரசியலை அம்பலப்படுத்தியது. இதில் அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமைக்கு கடும் கோபம்!''’ என விரிவாக விவரித்தனர். கூட்டணி உறுதியாகாததால் மோடியின் கூட்டத்தில் விஜயகாந்த் மேடையேறவில்லை.
இதுகுறித்து தே.மு.தி.க. குடும்பத்திற்கு நெருக்க மானவர்களிடம் விசாரித்தபோது, தேர்தல் செலவு தொடர்பாக பிரேமலதா வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக பா.ஜ.க. தலைமை ஒப்புக்கொண்டது. ஆனால், பிரதமரின் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொண்ட பிறகு அது செட்டில் செய்யப்படும் என கோயல் தரப்பிலிருந்து சொன்னதால் சுதீஷ் ஷாக் ஆனார். தன் அக்கா பிரேமலதாவிடம், "தி.மு.க.விடம் நாம் பேசினால் அவர்களுக்கு சுள்ளுன்னு ஏறும். அப்போது நம் வழிக்கு வந்துவிடுவார்கள்' என சுதீஷ் சொல்லியிருக்கிறார். இதனை பிரேமலதா ஆமோதிக்க, தி.மு.க. பொருளாளர் துரைமுருகனை தொடர்புகொண்டு பேசினார் சுதீஷ். இந்த சூழலில், சென்னைக்கு பியூஷ்கோயல் வந்துவிட்டார் என சுதீசுக்கு தகவல் தரப்பட, ஒரு காரில் சுதீஷும் பார்த்த சாரதியும் பியூஷ்கோயலை சந்திக்கச் செல்ல, மற்றொரு காரில் தே.மு.தி.க. மா.செ.க்கள் அனகைமுருகேசனும், இளங்கோவனும் துரைமுருகனை சந்திக்க விரைந்தனர்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஹோட்டல் ட்ரைடெண்டில் நடந்த பேச்சு வார்த்தையில், ""உங்களுக்கான தொகுதிகளை வட தமிழகத்திலேயே தரமுடியாது. பரவலாகத்தான் தரமுடியும். அதன்பிறகு உங்கள் விருப்பம். கூட்டணியில் இருக்க வேண்டுமென நாங்கள் வற்புறுத்தவில்லை. நீங்களாச்சு, பா.ஜ.க.வாச்சு'' என கட் அண்ட் ரைட்டாக சொல்லியிருக்கிறார் தங்கமணி. பியூஷ்கோயலோ, "கூட்டணியை ஏற்று மேடைக்கு வந்தால் எல்லாம் செட்டிலாகும்' என்று சொல்ல, அதை ஏற்காத சுதீஷ், "அமித்ஷா எங்களுக்குத் தந்த உறுதிமொழியை நீங்க நிறைவேற்றா விட்டால் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளமாட்டோம். இப்போது கூட தி.மு.க.வின் கதவு எங்களுக்காக திறந்திருக்கிறது தெரியுமா' என்றதும், பியூஷ்கோயலும் தங்கமணியும், வேலுமணியும் அதிர்ந்து விட்டனர். அதே நேரத்தில், துரைமுருகனின் ஓப்பன் டாக் எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பாக ஒட்டு மொத்த டீமும் அதிர்ந்தது. இந்த ப்ளாக்மெயில் அரசியலை நேரடியாகவே சுதீஷிடம் கண்டித்தனர் அ.தி.மு.க. அமைச்சர்கள். பிரேமலதாவும் சுதீஷும் செய்த அரசியலால் தே.மு.தி.க.வின் இமேஜ் டோட்டலாக டேமேஜானது'' என்றனர்.
"கூட்டணி குறித்து பேச வந்தனர்' என்று துரைமுருகனும், "தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்று சுதீஷ் மற்றும் இளங்கோவனும் சொல்ல "எது உண்மை' என துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. மா.செ. ஒருவரிடம் பேசியபோது, ""அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுடன்தான் தே.மு.தி.க பேசி வந்தது. நம்ப வைத்து ஏமாற்றுவதாக நினைத்த விஜயகாந்த் குடும்பம், எங்களிடம் கூட்டணிக்கு முயற்சித்தபோது, எதிர்பார்ப்பு ஓவராக இருந்ததால் நிராகரித்து விட்டார் ஸ்டாலின். இந்த நிலையில், மோடி மேடையில் ஏறப்போகிற சூழலில், துரைமுருகனை தொடர்பு கொண்ட சுதீஷ், "அ.தி.மு.க., பா.ஜ.க. எங்களை ஏமாற்றுகிறது. அந்த கூட்டணி பிடிக்கவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க விஜயகாந்த்தும் மா.செ.க்களும் விரும்புகிறார்கள். அது குறித்து பேச வேண்டும்' என சொல்ல, "இதற்கு வாய்ப்பில்லை' என மறுத்துவிட்டார் துரைமுருகன். ஆனால், சுதீஷோ, "எங்கள் மா.செ.க்கள் வருகிறார்கள். அவர்களை மட்டும் சந்தியுங்கள்' என சொன்னார். சுதீஷ் பேசியதை ஸ்டாலினிடம் அவர் பகிர்ந்துகொள்ள, "அவர்களை சந்தியுங்கள். கூட்டணி பற்றி பேசினால் தொகுதிகள் இல்லையே என சொல்லிவிடுங்கள்' என்று சொல்லி யிருக்கிறார்.
அனகை முரு கேசனும், இளங்கோவனும், துரைமுருகனை சந்தித்து, நோக்கத்தை விவரிக்க, தொகுதி இல்லை என்று சொன்னதுடன், "உங்களுடைய அரசியல் தவறாக இருக்கிறது' என்றும் துரைமுருகன் அட்வைஸ் செய்தார். மீடியாக்கள் துரைமுருகன் வீட்டுக்கு வர, முருகேசனும் இளங்கோவனும் அவசரம் அவசரமாக கிளம்பி ஓடினார்கள். துரைமுருகனை சந்தித்து மீடியாக்கள் கேள்வி எழுப்பவும், உண்மையைச் சொல்லிவிட்டார். "அட்லீஸ்ட், நாங்கள் சந்தித்ததை கூட்டணிக்காகத்தான் என சொல்லிவிடாதீர்கள்' என தே.மு. தி.க.வினர் கேட்டுக்கொண்டிருந்திருந்தாலாவது அவர்களது நோக்கத்தை சொல்லாமல் தவிர்த்திருப்பார். ஆனால், அன்றைக்கு மீடியாக்களிடமே "தி.மு.க.வுடன் கூட்டணி பேசினோம்' என்ற சுதீஷ், மறுநாள் பேட்டியில், "அது தனிப்பட்ட சந்திப்பு' என மறுக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த்தை சந்தித்துவிட்டு வந்த ஸ்டாலின், "தனிப்பட்ட உடல்நலம் விசாரிப்புதான். அரசியல் எதுவும் பேசவில்லை' என வெளிப்படுத்தினார். ஆனால், "அரசியலும் பேசினோம்' என பிரேமலதா இரண்டு நாட்கள் கழித்து சொல்லி பர பரப்பாக்கினார். அதற்கு சரியாகப் பழி தீர்த்திருக்கிறது எங்கள் தலைமை'' என்று விவரித்தார்.
தே.மு.தி.க.வின் டபுள் கேம் அரசியலை அறிந்த மோடியும் தே.மு.தி.க. மீதிருந்த மதிப்பை புறந்தள்ளியிருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள். இதற்கிடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்துள்ள தே.மு.தி.க. தலைமைக்கு தற்போது, ஆரம்பத்தில் சொன்ன 3 சீட்டுகள்தான் என எடப்பாடி தரப்பு பிடிவாதம் காட்டியுள்ளது. அதேசமயம், ஒப்புக்கொள்ளப்பட்ட கூடுதல் சீட்டுகளையும் செட்டில்மெண்டையும் கேட்டு 7-ந்தேதி இரவு வரை பா.ஜ.க தலைமையிடம் நச்சரித்தபடி இருந்தது.
Published on 11/03/2019 | Edited on 11/03/2019