காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தனது சித்து விளையாட்டைத் துவக்கியிருக்கும் பா.ஜ.க. தலைமையிடம், கடந்த வருடம் கர்நாடகாவைப் போல இந்த வருடம் சிக்கியிருக்கிறது மத்தியப் பிரதேசம்.
6 அமைச்சர்கள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்களுடன் குவாலியர் அரண்மனை வாரிசான காங்கிரசின் ஜோதிராதித்திய சிந்தியா விலகியதால், பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கும் முதலமைச்சர் கமல்நாத், சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடி வருகிறார். 230 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்துக்கு கடந்த 2018-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களையும், பா.ஜ.க. 109 இடங்களையும் கைப்பற்றின. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். மூத்த தலைவர் கமல்நாத்தை முதல்வராக்கினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.
முதலமைச்சர் பதவியை குறிவைத்து ராகுல்காந்தியிடம் காய்களை நகர்த்திய சிந்தியாவுக்கு இது ஏமாற்றமாக இருந்தது. தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, "இது உருப்படாத ஆட்சி. தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முதல்வர் (கமல்நாத்) நிறைவேற்றாவிட்டால் நானே வீதியில் இறங்கி ஆட்சிக்கு எதிராகப் போராடுவேன்' என்பதில் தொடங்கி, 2 வருடமாகவே உள்ளடிகளில் ஈடுபட்டார்.
2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ம.பி.யில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளை கைப்பற்றியது பா.ஜ.க. காங்கிரசில் போட்டியிட்ட சிந்தியா தோல்வியடைந்தார். ஆட்சிக்கு எந்த நேரமும் ஆபத்து வரும் என எதிர்பார்த்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கங்காரு போல பாதுகாத்து வந்த கமல்நாத், டெல்லித் தலைமைக்கு நம்பிக்கையான தகவல்களைத் தந்தபடி இருந்தார். பலமுறை எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளை சிந்தியா உதறியதால், போனால் போகட்டும் என்கிற அலட்சியமும் காங்கிரஸ் தலைமைக்கு இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில்தான் மத்திய பிரதேசத்தில் காலியாகும் 3 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் 26-ந் தேதி நடக்கிறது. இதில் காங்கிரசும், பா.ஜ.க.வும் தலா 1 இடத்தை எளிதாகக் கைப்பற்றும். மூன்றாவது இடத்துக்குத்தான் போட்டி அதிகரித்திருக்கிறது. அந்த இடத்தைக் கைப்பற்ற எம்.எல்.ஏ.க்களை தூக்கும் மறைமுக பேரங்களை நடத்தியபடி இருக்கிறது பா.ஜ.க.
அப்போது, "காங்கிரஸ் எளிதாக ஜெயிக்கும் ராஜ்யசபா சீட்டை தனக்கு வேண்டும்' என கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்தார் ஜோதிராதித்திய சிந்தியா. ஆனால், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங்கும் ராஜ்யசபா சீட்டை குறிவைக்க, "பிரியங்காகாந்தியை ராஜ்யசபாவுக்கு அனுப்பலாம்' என்கிற யோசனையை சோனியாவுக்குத் தெரிவித்திருந்தார் கமல்நாத். இதனால், சிந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த சமயத்தில், காங்கிரசுக்கு எதிரான அரசியலையும் கமல்நாத்துடனான மோதலையும் நடத்தும் உங்களுக்கு எப்படி ராஜ்யசபா சீட் ஒதுக்குவது? அரசியலில் குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாத உங்களுக்கு வாய்ப்பளிப்பது காங்கிரஸ் தொண்டர்களை அவமானப்படுத்தும் செயல்' என சிந்தியாவிடம் கோபமாக கடிந்துகொண்டார் ராகுல்காந்தி''’என்கிறார்கள் ராகுலுக்கு நெருக்கமான தமிழக எம்.பி.க்கள்.
இந்த நிலையில்தான், காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களிடமும் பகுஜன்சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களிடமும் பா.ஜ.க.வுடன் இணைந்து சிந்தியா பேசிவரும் பேரங்களை அறிந்து அதிர்ச்சியடைந்தது காங்கிரஸ். கறுப்பு பணத்தின் மூலம் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது என குற்றம்சாட்டினார் மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் ஹோகில். மத்தியப் பிரதேசத்தின் பா.ஜ.க. தலைவர் ஷர்மா, "எந்த முயற்சியையும் பா.ஜ.க. எடுக்கவில்லை. காங்கிரசில் உள்கட்சி மோதல்தான், ஆட்சிக்கு தலைவலியை கொடுத்துக்கொண்டிருக்கிறது''’என தாக்கியிருக்கிறார்.
சிந்தியா கடந்த 10-ந் தேதி பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து பேசியதுடன், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பிவிட்டு மறுநாளே பா.ஜ.க.வில் இணைந்து விட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தங்களது பதவியையும் ராஜினாமா செய்தனர். கட்சியில் இணைந்த சிந்தியாவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியிருக்கிறார் அமித்ஷா.
தேசிய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கிய இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரசின் செயல்தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி., "முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்தார் சிந்தியா. அது கிடைக்கவில்லை என்றதும் கடந்த 2 வருடங்களாக முதல்வர் கமல்நாத்தோடு மல்லுக்கட்டி வந்த அவர், பதவி வெறியில் தற்போது கட்சிக்கு துரோகமிழைத்திருக்கிறார். ராஜ பரம்பரையில் வந்தவர் என்பதாலேயே துரோகங்கள் அவருக்கு எளிதாக இருக்கிறது.
சமீபத்தில் நடந்த பா.ஜ.க.வின் தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்ல திருமண வரவேற்பில் கலந்துகொண்ட மத்தியபிரதேசத்தின் முன்னாள் தலைவர் சிவ்ராஜ்சிங்குடன் ம.பி. அரசியல் பற்றியும் சிந்தியாவின் அரசியல் பற்றியும் நீண்டநேரம் அமித்ஷா விவாதித்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, ராஜ்யசபா எம்.பி.யும், அமைச்சர் பதவியும் தருவதாக சிந்தியாவுக்கு நம்பிக்கை தந்துள்ளது பா.ஜ.க. அதற்கு பிரதிபலனாக காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க உறுதியளித்த சிந்தியா, அதனை செயல்படுத்த முனைந்திருக்கிறார்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாடி ஆட்சியை கவிழ்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது பா.ஜ.க. ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க் களில் பலர், தங்கள் தவறுகளை உணர்ந்து ராஜினாமாவை திரும்பப்பெறும் முடிவில் இருப்பதால், அமித்சா-சிந்தியா கூட்டணியின் எண்ணம் நிறைவேறாது என்கிறார் அழுத்தமாக.
தமிழக காங்கிரசின் மாநில செய்தித் தொடர்பாளர் சிவாஜி சந்திரசேகர், "மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்த போது, தன்னை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தினார் சிந்தியா. ஆனால், சோனியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், "நமக்கும் பா.ஜ.க.வுக்கும் வெற்றி வித்தியாசம் பெரியளவில் இல்லை. அதனால் பா.ஜ.க.வை சமாளிக்க சிந்தியாவால் முடியாது' என தீர்மானித்து கமல்நாத்தை முதல்வராக டிக் அடித்தனர். இதனால் தலைமை மீதும் கமல்நாத் மீதும் அதிருப்திகளை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார் சிந்தியா. அத்துடன், "லோக்சபாவில் தோற்ற யாருக்கும் ராஜ்யசபா சீட் கிடையாது' என ராகுலும் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிந்தியா, பா.ஜ.க.வுடன் இணைந்து முதுகில் குத்தியுள்ளார்.
"முன்பிருந்த காங்கிரஸ் கட்சிபோல இப்போது இல்லை. அதனாலேயே புதிய பாதை தேடி பயணிக்கிறேன்' என சொல்லி காங்கிரசிலிருந்து விலகியிருக்கிறார் சிந்தியா.
"இப்படி சொல்லும் தகுதி அவருக்கு கிடையாது. ஏன்னா, அவரது தந்தை மாதவராவ் சிந்தியா மறைவுக்குப் பிறகு இவரை ஆளாக்கியது காங்கிரஸ். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளில் 17 ஆண்டுகள் எம்.பி.யாகவே வைத்திருந்ததுடன் அவரை மத்திய அமைச்சராகவும் வைத்திருந்தது காங்கிரஸ். இவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைப்போல ம.பி.யில் யாருக்கும் கிடைத்ததில்லை. பதவிக்காக பா.ஜ.க. பின்னால் ஓடிப்போனது ராஜ பரம்பரைக்கே இழுக்கு'' என்கிறார் ஆவேசமாக.
சிந்தியாவின் துரோக அரசியலால் மத்தியப்பிரதேச காங்கிரஸ் ஆட்சி கலகலத்துப் போயிருக்கும் நிலையில்... இதன் தாக்கம் ராஜஸ்தான், மகாராஷ்டிராவிலும் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. ம.பி.யை போலவே ராஜஸ்தானிலும் முதல்வர் அசோக் கெலட்டுக்கும், துணைமுதல்வர் சச்சின் பைலட்டுக்கும் முட்டல் மோதல் அதிகரித்துள்ளது.
அதேபோல மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்துவருவதால் அதிருப்தியிலுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வளைக்க ரகசிய ஸ்கெட்ச் போட்டு வருகிறது பா.ஜ.க. இதனை உணர்ந்துள்ள சோனியாகாந்தி, அந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள அதிருப்தியாளர்கள் விலை போகாமல் இருக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
தற்போது ம.பி. சட்ட மன்றத்தில் 2 இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அதன் பலம் 228 ஆக இருக்கிறது. இதில், பெரும்பான்மையை நிரூபிக்க 115 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் கமல்நாத்திற்கு தேவை. ஆனால், காங்கிரசிடமுள்ள 114 எம்.எல்.ஏ.க் களில் 22 பேர் ராஜினாமா செய்திருப்பதால் அதன் பலம் 92 ஆக குறைந்துள்ளது. பா.ஜ.க. தவிர்த்த மற்ற கட்சி கள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவு கிடைத்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க 16 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. இந்த நிலையில், ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தங்களது ராஜினாமாவை திரும்பப்பெறுமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது காங்கிரஸ்.
அத்துடன் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகள், தங்களது எம்.எல்.ஏ.க்களை வெளி மாநில ரிசார்ட்டுகளில் தங்கவைத்து பரஸ்பரம் அடைகாத்து வருகின்றன. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸும், ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க.வும் எதிர்தரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரங்களை நடத்திவருவதால் ம.பி. அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்து வருகிறது.