உழைக்கும் பெண்களின் தன்னெழுச்சியான ஒருங்கிணைப்பும், உரிமை வேட்கைக்கான முழக்கமுமே, வரலாற்றில் ‘பெண்கள் தினம்’ என்ற ஒன்று உருவாகக் காரணம். சம ஊதியம், சம உரிமை மற்றும் கண்ணியம் என அன்று பெண்கள் முன்னிறுத்திய கோரிக்கைகள் இன்றும் பெயரளவிலேயே பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன. அதனால்தான் பெண்கள் தினத்தின் முக்கியத்துவத்தை, பெருமையை உரக்கப் பேசவேண்டிய கட்டாயம் எழுகிறது.
அந்த வகையில், உலக மகளிர் தின பொதுக்கூட்ட நிகழ்ச்சி, சென்னை புரசை வாக்கத்தில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி அனைத்து மகளிர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. பறையிசையுடன் மாலையில் நிகழ்ச்சி உற்சாகமாக தொடங்கியது. கார்மெண்ட்ஸ் பேஷன் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பழனிபாரதி வரவேற்றுப் பேச, புதிய குரல் தலைவர் ஓவியா துவக்கவுரை நிகழ்த்தினார். இஊஎஒ அமைப்பைச் சேர்ந்த பிரேமலதா தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமான தேர்தல் அறிக்கை வெளியீடு நடைபெற்றது. வரவிருக்கும் தேர்தல்களில் பெண்களுக்கு தேவையான கோரிக்கைகளை அரசியல் கட்சிகளுக்கு வலியுறுத்தும் இந்த அறிக்கையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் சுகந்தி மற்றும் பிராவோ அமைப்பின் ஓல்கா ஆகியோர் வெளியிட்டனர்.
நக்கீரன் வெளியீடான "மகளிர் தினம் உண்மை வரலாறு' நூலின் ஆசிரியர் தோழர் இரா.ஜவஹரை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. “""இரண்டு வருடங்களுக்கு முன்புவரை பெண்கள் தினம் என்றாலே ஒரு பொத்தாம் பொதுவான கதையைச் சொல்வார்கள். ஆனால், மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் மகளிர் தினத்தின் வரலாறு குறித்து நக்கீரன் இதழில் தொடராக எழுதி, பின்னர் வெளியான இந்த நூல், அதன் உண்மை நோக்கத்தை, வரலாற்றுத் தெளிவோடு உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. இதற்காகவே அவர் இதில் பயணித்த லெனி எனும் பிரெஞ்சு அம்மையாரை நேரில் சந்தித்து தரவுகளைத் திரட்டியிருக்கிறார். பெண்களின் வரலாறு எப்போதுமே இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில், சோவியத் புரட்சி உருவாவதற்கு பெண்கள்தான் காரணம் என்ற உண்மையை உலகிற்குச் சொன்னதற்காகவே தோழர் ஜவஹரைப் பாராட்ட வேண்டும்''’என்றார் புதிய குரல் தலைவர் ஓவியா.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சுகந்தி பேசுகையில், “""மகளிர் தினத்தை பெண்கள் எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை இன்றைய முதலாளித்துவ உலகம் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருப்பவர்கள் உண்மை வரலாற்றைத் திரிப்பவர்கள். வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும் என்கிற கொள்கையில் இருப்பவர்கள்.
எனவேதான், மகளிர் தினத்தின் உண்மை வரலாற்றை எழுதிய தோழர் ஜவஹரை பாராட்டிச் சிறப்பிக்க முடிவுசெய்தோம். இதோடு நிறுத்தாமல் பல்லாயிரக் கணக்கான பெண்களிடத்திலே இந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயத்தையும் நாம் உணர வேண்டும்''’என்றார் அழுத்தமாக.
""25-க்கும் அதிகமான மகளிர் அமைப்புகள் உருவாக்கிய அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பின் மூலமாக, "மகளிர் தினம் -உண்மை வரலாறு!'’நூலுக்காக எனக்கு சிறப்பு செய்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்'' என பேசத் தொடங்கிய தோழர் ஜவஹர், ""எனது எழுத்துப் பணியிலும், வாழ்க்கையிலும் உற்ற துணையாக இருந்தோர் பலர். அவர்களின் சார்பில் சிலருக்கேனும், என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறி சிறப்புசெய்ய விரும்புகிறேன். எனது தோழராக, தாயாக, மகளாக இருந்துகொண்டு என்னைப் பராமரித்துவரும் என் துணைவியார் தோழர் பூரணம் அவர்களுக்கும், நக்கீரன் இதழில் குறுந் தொடராக வெளிவந்த இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு "இதை விரிவுபடுத்தி தமிழ், ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிடுவோம்' என்று ஊக்கப்படுத்திய தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், நான் சந்தித்த தலைசிறந்த மனிதாபிமானிகள் சிலரில் ஒருவரான என் தோழர் கண்ணன் அவர்களுக்கும், தோழமைகளில் எனக்கிருக்கும் மகள்களில் முதன்மையானவரான தோழர் ஓவியாவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்''’எனக் கூறிக்கொண்டு, தான் எழுதிய புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.