நரிக்குறவர்கள் பல்வேறு இனப் பிரிவுகளில் இருந்ததால் இவர்களுக்கான அரசு திட்டங்களும், வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் படிப்பு, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கிடைக்காமல் தங்கள் குழந்தைகளை பள்ளிப் படிப்பிற்கு கூட அனுப்ப முடியாமல், தங்களின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து பாசி, மணி, ஊசி விற்றனர்.
இந்த நிலையில் தான் எங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து எஸ்.டி சாதிச் சான்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு எடுத்துச் சென்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதனை ஏற்ற மத்திய அரசு நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து எஸ்.டி சான்றிதழ் வழங்க அனுமதி அளித்தது.
மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உடனே எஸ்.டி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் உத்தரவையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை கோட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, திருமயம் உள்ளிட்ட 5 தாலுகாவிலும் உள்ள நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் நேரில் சென்று அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்களையும் வரவழைத்தார். பிறகு ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்து பழங்குடியினர் எஸ்.டி சான்றுகளை உடனே பதிவிறக்கம் செய்து வழங்கினார். அதன்படி புதுக்கோட்டை கோட்டத்தில் உள்ள 5 வட்டத்திலும் சுமார் 295 பேருக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் கீரமங்கலம் அறிவொளி நகர், நரிக்குறவர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு 111 சாதிச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்தது. அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சாதிச் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். அப்போது அவர், “புதுக்கோட்டை கோட்டாட்சியர் அரசின் எந்தப் பணியாக இருந்தாலும் உடனுக்குடன் செய்து வருகிறார். பல பாதைப் பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர். பழங்குடியினர் வீடுகளுக்கே சக அதிகாரிகளுடன் வந்து விண்ணப்பப் பதிவேற்றம் செய்து உடனே சாதிச் சான்றிதழை பதிவிறக்கம் செய்துள்ளது பாராட்டத்தக்கது.
முதலமைச்சர், ‘உங்களின் கல்வி, வேலைவாய்ப்பு தான் நாட்டின் வளர்ச்சி’ என்கிறார். இது போன்ற விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளும் போது தான் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சாதிச் சான்று மிகப் பெரிய ஆயுதம். இதனை நீங்கள் தொழில் கடன் பெறவும், உங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கவும், வேலை பெறவும் பயன்படுத்தலாம். இட ஒதுக்கீட்டில் உங்கள் குழந்தைகள் படித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகும் போதுதான் இதற்கான முழு பலன் கிடைக்கும். அதை எதிர்பார்க்கிறோம்.
இப்போது யாரேனும் பள்ளி, கல்லூரிகளில் படிக்க நினைத்து படிக்க முடியாமல் இருந்தால் சொல்லுங்கள். உடனே உங்களைச் சேர்த்து படிக்க வைக்கிறோம். நீங்கள் தொழில் செய்யக் குறைந்த வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் தொழிற்கடன் வழங்கும் விழா நடத்துவோம்” என்றார்.
இதே போல மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா எஸ்.டி சான்றிதழ் மூலம் என்னவெல்லாம் சலுகைகள் பெறலாம் என்பதை விளக்கிப் பேசினார். கோட்டாட்சியர் முருகேசன், “இந்தச் சான்றிதழ் உங்களின் வளர்ச்சி, உங்கள் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதுடன் உங்கள் பொருளாதாரத்தையும் உயர்த்தும். இந்த சான்றிதழ் வழங்க முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த வருவாய்த் துறையினருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.
இதே போல இலுப்பூர் கோட்டத்திலும் கோட்டாட்சியர் முயற்சியில் முழுமையாக சான்று வழங்கியுள்ள நிலையில், அறந்தாங்கி கோட்டத்தில் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். இதனால் அறந்தாங்கி கோட்டத்தில் சுமார் 300 பேருக்கு பழங்குடியினர் எஸ்.டி சான்றிதழ் கிடைக்கப் பெறவில்லை. அவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என்ற விழிப்புணர்வே இல்லாத மக்களிடம் விண்ணப்பம் எதிர்பார்த்து காத்திருப்பதை தவிர்த்து, புதுக்கோட்டை, இலுப்பூர் கோட்டம் போல நரிக்குறவர்கள் காலனிக்கே அலுவலர்களை அனுப்பி இணைய வழி விண்ணப்பப் பதிவேற்றம் செய்து சாதிச் சான்று வழங்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.