Skip to main content

‘நிவர்’ புயல் பெயர் ஏன்? எப்படி?... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020
nivar cyclone

 

 

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. மிகவும் பொறுமையாக ஐந்து கி.மீ. வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. சென்னைக்கு கிழக்கே 450 கி.மீ. மற்றும் புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவில் புயல் நகர்ந்து வருகிறது. இன்று மாலை ஐந்து மணிக்கு அதி தீவிர புயலாக நிவர் உருவாகிறது. தற்போதுவரை புதுச்சேரியில் புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், புயல் கரையை நெருங்க நெருங்க அதனுடைய பாதை வட-மேற்கு நோக்கியும் மாறலாம் என்று சொல்லப்படுகிறது. 

 

நாளை கரையை கடக்கும் புயலுக்கு யார் நிவர் என பெயர் வைத்திருப்பார்கள். நாம் இதுவரை பார்த்த புயல்களுக்கு ஏன் இப்படி பெயர்கள் வைக்கிறார்கள் என்று பலருக்கு இந்த புயலுக்கு சூட்டப்படும் பெயர்கள் குறித்து பல கேள்விகள் எழுந்திருக்கலாம். அப்படி இந்த நிவர் என்று பெயர் எப்படி வந்தது என்பதை பார்ப்போம்...

 

நாளை கரையை கடக்கும் புயலுக்கு நிவர் பெயரை பரிந்துரை செய்தது ஈரான் நாடு. வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்காக உருவாக்கப்பட்ட புது பெயர் பட்டியலில் மூன்றாவது பெயராக இது இருக்கிறது. இந்த வருடம் மேற்கு வங்கத்தையும், வங்கதேசத்தை பெரிதும் சேதமாக்கிய அம்பான்(உம்பான்) புயலுக்கு பெயர் வைத்த நாடு தாய்லாந்து. கடந்த ஜூன் மாதம் மஹாராஷ்ட்ராவில் கரையை கடந்த நிஷாக்ரா புயலின் பெயரை வங்கதேசம் பரிந்துரை செய்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரபிய கடலில் உருவாகி சோமாலியாவில் கரையை கடந்த கதி புயலுக்கு இந்தியாவின் பரிந்துரை செய்த பெயர் வைக்கப்பட்டது.

 

அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஒமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் உள்ளிட்ட 13 நாடுகள்தான் இணைந்து புது புது பெயர்களை பரிந்துரை செய்கின்றன. உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு மற்றும் ஒருசில அமைப்பு இணைந்து அவர்களுக்கான வழிமுறைகளில் இந்த பெயர்களை தேர்வு செய்கின்றன. ஒவ்வொரு நாடு சுமார் 13 பெயர்களை பரிந்துரை செய்கிறது. 

 

ஒரு நாடு 13 பெயர்களை பரிந்துரை செய்வதற்கு நிறைய நிபந்தனைகளும் உள்ளது. அது என்ன என்றால், குறிப்பிடும் பெயரில் அரசியல், கலாச்சாரம், மத நம்பிக்கை எல்லாம் கலக்காது பொதுவாக இருக்க வேண்டும். உலகரங்கில் இருக்கும் மக்கள் எவரின் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இருக்கக்கூடாது. பெயரின் அளவு, அதிகபட்ச 8 எழுத்துகள்தான். அனைத்து தரப்பு மக்களாலும் எளிதில் உச்சரிக்கும்படி இருக்க வேண்டும். அதேபோல வட இந்திய பெருங்கடலில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் பயன்படுத்தபட முடியாது. 

 

metrological

 

கதி, தேஜ், முரசு, ஆக், நீர் ஆகிய பெயர்களை இந்தியா, அடுத்து வர இருக்கும் புயல்களுக்கு பெயர் சூட்ட பரிந்துரை செய்திருக்கிறது. இந்த அமைப்பில் இருக்கும் நாடுகளின் பெயர்கள் ஆல்ஃபபெட்டிகல் ஆர்டரில் இருக்கும், அந்தந்த நாடு பரிந்துரை செய்யும் புயலுக்கான 13 பெயர்கள் பட்டியலில் வரிசையாக இருக்கும். மொத்தமாக 169 பெயர்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றிலிருந்து ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு நாட்டின் பரிந்துரைபடி அதில் இடம்பெற்றிருக்கும் பெயர்கள் பயன்படுத்தப்படும். 

 

தற்போது இருக்கும் பட்டியலின்படி நிவர் என்று ஈரான் பரிந்துரை செய்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்து அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயலுக்கு மாலத்தீவு பரிந்துரை செய்த புரேவி என்னும் பெயர் சூட்டப்படும். இதுபோல அடுத்த 25 வருடங்களில் வரப்போகும் புயலுக்கான பெயர் பட்டியல் உலக வானிலை ஆராய்ச்சி மையத்திடம் ரெடியாக உள்ளது. அடுத்து எங்கு புயல் ரெடியோ அதுக்கு பெயரும் ரெடி..