பெண்கள் தொடர்பாக மனுநீதியில் கூறிய சில கருத்துகளை சமூக ஊடகம் வாயிலாக திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதற்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருமாவளவன் சொந்தத் தொகுதியான சிதம்பரத்தில் அவரை கண்டித்து குஷ்பு தலைமையில் போராட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் காவல்துறை தலைவர் அவர்களை சந்தித்த திருமாவளவன் இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்தார். அதில், "இன்று நான் தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி அவர்களை சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளேன். அதில் பாஜகவினர் வரும் 6ம் தேதி முதல் வேல் யாத்திரை ஒன்றை நடத்துவதாக கூறி அதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறார்கள். அந்த யாத்திரை ஒன்றும் மத நல்லிணக்கத்துக்காக செய்யப்படுபவை அல்ல, அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்படுபவையும் அல்ல. மதவெறியை, சாதி வெறியை, வன்முறையை தூண்டுவதற்கான திட்டமிட்ட செயல் அது.
காவல்துறையினர் அதற்கு அனுமதி அளித்தால் இந்த நிலையைத்தான் அவர்கள் ஏற்படுத்துவார்கள். எனவே அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்துள்ளேன். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக நடத்திய அனைத்து போராட்டங்களும் மதவெறியை தூண்டுகின்ற போராட்டமாகத்தான் இருக்கிறது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் அவரது மனைவி ஆகியோர்கள் எப்போதோ பேசிய பேச்சுகளுக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் ஆபாச அர்ச்சனைகள் செய்தார்கள். அதே போன்று நெல்லை கண்ணன் அவர்களையும் இந்துக்களை புண்படுத்திவிட்டார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்தார்கள். அவதூறாக, அநாகரிகமாக பதிவுகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பினார்கள். தற்போது நான் பேசாத ஒன்றை பேசியதாக தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள்.
இணையவழி கூட்டத்தில் பெரியார் தொடர்பான கருத்தரங்கில் நான் நாற்பது நிமிடங்கள் பேசினேன். அப்போது மனுதர்ம கருத்துகளையும் எடுத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் மனுதர்மத்தில் பெண்கள் தொடர்பாக கூறப்பட்டிருந்த சில கருத்துகளை எடுத்து வைத்தேன். பெரியார் மற்றும் அம்பேத்கார் பற்றி பேசும்போது மனுதர்ம கருத்துகளை பற்றி பேசாமல் நகர்ந்து போக முடியாது. அதனால் சில கருத்துகளை முன்வைத்தேன். மனு தர்மத்தை பெரியார் ஏன் எதிர்த்தார் என்பதை சொல்லும் பொருட்டு, மனுதர்ம நூலில் பெண்களை பற்றி என்ன கூறியிருக்கின்றதோ அதை பற்றி பேசினேன். தனிபட்ட முறையில் நான் எப்போது பெண்களை அவமரியாதை செய்தது கிடையாது. அரசியல் ஆதாயத்திற்காக தற்குறிகள் செய்கின்ற வேலையாகத்தான் இதனை நான் பார்க்கிறேன்" என்றார்.