தலை நகரம் புகை நகரமானது !!!

இரண்டு நாட்களுக்கு முன், இணையத்தில் ஒரு காணொளி வைரலாகப் பரவியது, செய்திகளிலும் இடம்பெற்றது. பனி படர்ந்த ஒரு நெடுஞ்சாலையில் ஏற்கனவே முன்னே சென்ற வாகனத்தின் மீது பின்னே வந்த கார் மோதி நிற்க, அதிலிருந்தவர்கள் பதறி, வெளியே வரும் முன், அடுத்து வேகமாக வந்த கார் இடித்து நிற்கிறது. சுற்றியிருப்பவர்கள் கத்தினாலும் கைகாட்டி நிறுத்தினாலும், காரை ஓட்டி வருபவர்களுக்கு பனிமூட்டத்தில் தெரியாததால் அடுத்தும் ஒரு கார் வந்து மோதுகிறது. கடந்த 17 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு டெல்லியில் பனிமூட்டமும் காற்றும் மாசடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிரும் பனிமூட்டமும் அதிகமானதாக இதனால் விமானங்களும் ரயில்களும் போக்குவரத்தும் தடைபடும் நிகழ்வுகள் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு மிகவும் காற்று மாசடைந்து டெல்லி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. காற்று மாசு தாஜ்மஹாலையும் விட்டுவைக்கவில்லை, ஆக்ரா வரை சென்றுவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வின் படி உலகில் அதிகம் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்திலும், நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும் இருந்தது. சமீபத்தில் கூட டெல்லியின் நிலை கருதி டெல்லி உச்சநீதிமன்றம் தீபாவளியின் போது வெடி விற்கவும் வெடிக்கவும் தடை விதித்திருந்தது. அதனால் மாசு பெரிய அளவில் அதிகரிப்பது தடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லி அரசு இதற்கு முன்பே காற்று மாசுபடுதலை தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. டெல்லி பேருந்துகள் பெரும்பாலும் CNG எரிவாயுவால் இயக்கப்படுகின்றன. வாகன போக்குவரத்தில் கட்டுப்பாடு, மின் உற்பத்தி நிலையங்கள் மூடல், ஒற்றைப் படை மற்றும் இரட்டைப் படை பதிவெண்கள் கொண்ட கார்கள் ஒரே நாளில் பயணிக்காமல் மாறி மாறிப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இவை பெரிதாக வெற்றி அடையவில்லை.

டெல்லியில் காற்று மாசடைவதன் காரணங்களில் தொழிற்சாலைகளுக்கு முக்கிய பங்குண்டு. அதனால் தற்போது சில நாட்களுக்கு தொழிற்சாலைகளை மூடவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. கனரக வாகனங்கள் இரவிற்கு மேல் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கழகம் "சுகாதார ரீதியான அவசர நிலை" நிலவுவதாக கூறி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண முயற்சிகளை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரத்தை கட்டுக்குள் வைக்க ஹெலிகாப்டர் கொண்டு தண்ணீர் தெளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரத்திலிருந்து மீண்டும் ஒற்றைப் படை, இரட்டைப் படை வாகன எண்களின் அடிப்படையில் வாகனங்கள் இயங்கும் திட்டம் கொண்டுவர இருந்த நிலையில் இன்று (10 நவம்பர் 2017), தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளது. 'கார்களை மட்டும் கட்டுப்படுத்தினால் மாசு குறையுமா, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எவ்வளவு தூரம் பயன் கிடைக்கும், அப்படியானால் இரு சக்கர வாகனங்களை அனுமதிப்பது ஏன், ஏற்கனவே இதை முயற்சித்த போது, மக்களுக்கு மெட்ரோ ரயிலிலும், பேருந்துகளிலும் மூச்சுவிடக் கூட முடியாத கூட்டம் ஏற்பட்டதே...என்று பல கேள்விகளை கெஜ்ரிவால் அரசை நோக்கி வீசியுள்ளது. என்னதான் செய்வதென்று குழப்பியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஏற்கனவே பாஜகவின் நெருக்குதல்கள் இருந்த நிலையில் டெல்லி காற்று மாசும் சேர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை மூச்சுத் திணற வைத்துள்ளது.
ஹரிஹரசுதன்