அனைத்து சாதியினரும் கருவறைக்குள் போகும் உரிமையை பெறவேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகரானால் சாதி கட்டுமானம் உடையும் என நம்பினார் பெரியார். அதற்காகத்தான் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டவனை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவேண்டும்மென போராடினார். கோயில் சட்டப்படி அனைவருக்கும் உரிமையானது என்ற பின், கருவறை நுழைவு உரிமை என்பது அனைத்து சாதியினருக்கும் உரிமையானதுதானே என கேள்வி எழுப்பினார்.
ஆகமங்கள் தெரிந்தால் தான் கோயிலுக்குள் நுழைய முடியும் என்றால் பிராமணர்கள் அல்லாதவர்களும் ஆகமங்கள் கற்றுள்ளார்கள், அவர்கள் அர்ச்சனை செய்யட்டும் என்றார் பெரியார். சுவாமி சிலைகள் நாங்கள் மட்டுமே தொடவேண்டும் என்றபோது, எதிர்குரல் கொடுத்து போராடினார் பெரியார்.
1970 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆலய கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்தார் பெரியார். நடப்பது பெரியார் ஆட்சி, அவரது ஆட்சியில் அவர் கேட்பது கிடைக்கும் எனச்சொன்னார் அப்போது முதலமைச்சராகயிருந்த திமுக தலைவர் கலைஞர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். இதனை எதிர்த்து சேசம்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தகுதியான நபர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என தீர்பளித்தது உச்சநீதிமன்றம். என் நெஞ்சில் குத்திய முள் என மனம் நொந்துப்போய் விமர்சனம் செய்தார் பெரியார். அவர் வாழும்வரை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கனவு நிறைவேறவில்லை. அவரின் இதயத்தில் அந்த ரத்தக்கசிவு இருந்துக்கொண்டே இருந்தது.
2006ல் கலைஞர் முதல்வரானபோது, நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க என்ன செய்யவேண்டும் என்ற அறிக்கையை வாங்கி சட்டவிதிகளின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டமசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றினார். 2007 மே 11ந் தேதி தமிழகம் முழுக்க அனைத்து சாதியினருக்கான பயிற்சி பள்ளிகள் 6 இடங்களில் தொடங்கப்பட்டது. அதன் தொடக்கவிழாவில் பேசிய முதலமைச்சராக இருந்த கலைஞர், பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை இப்போது தான் எங்களால் எடுக்க முடிந்தது என்றார் நா தழுதழுக்க.
தமிழ்நாட்டில் 6 இடங்களில் சைவ, வைணவ முறைப்படி பயிற்சி பள்ளிகள் நடைபெற்றன. பல சாதிகளை சேர்ந்த 210 மாணவர்கள் ஆகம பள்ளியில் இணைந்து பயின்றனர். இந்த சட்டத்தையும், அரசாணை, பள்ளி செயல்படுதலை எதிர்த்து மதுரை ஆதிசைவ சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனால் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்காமலே அந்த பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன.
2007 முதல் பலமுறை வழக்கை விசாரணைக்கு எடுக்கச்சொல்லி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டும் தீட்சதகர்கள் அவர்களுக்கு சாதகமானவர்கள் தடை ஏற்படுத்திக்கொண்டே வந்தார்கள். 8 ஆண்டுகளுக்கு பின் 2015 ஏப்ரல் 7 ஆம் தேதி நீதிபதிகள் ரன்ஜன்கோகாய், எம்.இ.ரமணா தலைமையிலான அமர்வுமுன் இந்தவழக்கு இறுதி விசாரணைக்கு வந்தது. ஆதிசிவாச்சாரியர்கள் சார்பாக பிரபல வழக்கறிஞர் பராசரன், தமிழகரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், அர்ச்சக பயிற்சி பெற்ற மாணவர்கள் சார்பாக வழக்கறிஞர் காலின்கன்சல்வேஸ் வாதாடினார்கள்.
வழக்கறிஞர் பராசரன், பழக்க வழக்கங்கள் மாற்றக்கூடாது, சாதி தீண்டாமை பற்றி சொல்லக்கூடாது. ஆகமவிதிகள்படி அந்தந்த கோயிலுக்கு அவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் தான் பூஜை செய்யனும், மற்றவர்கள் செய்தால் தீட்டு பட்டுடும். 1972ல் சேசம்மாள் வழக்கில், ஆகமத்தை மீற மாட்டோம்ன்னு அரசாங்கம் உத்தரவாதம் தந்துள்ளது. அதை மீறி அரசாங்கம் ஜீ.ஓ போட முடியாது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பழக்கவழக்கம் உள்ளது. அதை மீறக்கூடாது என்று தன்னோட வாதத்தை வைத்தார்.
இதற்கு பதிலடியாக தமிழக அரசு சார்பில் ராவ் வாதாடும்போது, அர்ச்சகர் என்பவர் கோயிலில் ஒரு ஊழியர் தான். அர்ச்சகர் பணி நியமனம், நீக்கம் அதிகாரம் அரசுக்கு மட்டும்மே உண்டு. இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது எனச்சொல்வது தவறானது. மத உரிமை என்கிறார்கள். மத உரிமையில் தவறு இருந்தால் அதை சரி செய்ய அரசாங்கம் தலையிடும் உரிமையுள்ளது. இந்த விவகாரத்தில் மதத்தில் நாங்கள் தலையிடவில்லை. கோவிலில் ஊழியர் நியமனம் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால் எங்களது அதிகாரத்தை செலுத்தியிருக்கிறோம். ஒரு ஊழியரை நியமனம் செய்ய அவருக்கு தகுதியிருக்கிறதா என்பதை தான் நாங்கள் இதில் பார்க்கிறோம்மே தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை. புதியதாக நியமிப்பதன் மூலம் தற்போது பணியில் இருப்பவர்கள் பாதிக்கப்படபோவதில்லை. இதுவரை நாங்கள் யாரையும் பணி நியமிக்காதபோது, நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என இவர்கள் வந்ததே தவறு என வாதத்தை வைத்தார்.
அர்ச்சக பயிற்சி பெற்ற மாணவர்கள் சார்பில் காலின்கன்சல்வேஸ் வாதத்தின்போது, பழக்க வழக்கங்கள் என்பது சட்டப்படியானவை, சட்டத்திற்கு புறம்பானவை என இரண்டு உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்படும் போது எதிர்க்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட சாதியை தவிர மற்ற சாதிக்காரர்கள் தொட்டால் சாமி தீட்டுப்பட்டுவிடும் என சொல்வது சாதி தீண்டாமையாகும். இது தீண்டாமை சட்டப்படி தவறு. மத உரிமையில் தலையிடகூடாது என்கிறார்கள், மத உரிமை பற்றி அவர்கள் எப்போது கேட்கலாம் என்றால், அவர்களே கோயில் கட்டி, அவர்களே பணி செய்யும் போது இது எங்கள் கோயில் இங்கு நாங்கள் தான் பணி செய்வோம் என உரிமை கோர முடியும். பொது கோயில்களில் அப்படி கேட்கமுடியாது. இந்த கோயில்கள் அந்த காலத்தில் ராஜாக்கள் கட்டியது. அப்போது ராஜாக்கள் பணியாளர்களை நியமித்தார்கள், இப்போது அரசாங்கம் நியமிக்கிறது. அதில் தற்போது பணியாற்றுபவர்கள் உரிமை கோர முடியாது. அவர்கள் சொந்தமாக கட்டிய கோயிலில் கூட தவறுகள் நடந்தால் அரசாங்கம் தலையிடும் உரிமை உள்ளது. ஆகமவிதிகளை இந்த சட்டம் மீறவில்லை. விதிமுறைகளின் அடிப்படையில் பயிற்சி பள்ளி, பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டது. அங்கு படித்தவர்கள் தகுதியானவர்கள், அவர்கள் தீட்சை பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு கோயிலில் அர்ச்சகராகும் தகுதியுள்ளது. மதுரை சிவாச்சாரியார்களுக்கு அவர்கள் கோயில் பற்றி மட்டுமே பேசும் உரிமையுள்ளது. மற்ற கோயில்களில் யாரை நியமிக்க வேண்டும் என அவர்கள் சொல்லக்கூடாது என வாதம் வைத்தார்.
2015 ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், ஆனால் அந்தந்த கோயில் ஆகமவிதிகளை பின்பற்றி அர்ச்சகர் நியமனம் செய்யலாம் என்றே சொல்லப்பட்டது. இந்த தீர்ப்பில் வாத பிரதிவாதிகள் எழுந்தது.
2018ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற கலைஞர் கொண்டுவந்த திட்டத்தின்படி மதுரை அருகிலுள்ள அய்யப்பன் கோயிலில் தலித் இளைஞர் ஒருவர் அறநிலையத்துறையின் சார்பில் நியமிக்கப்பட்டார். அதன்பின் அந்த விவகாரம் தூக்கி தூரவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2021 தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்தபின், ஆட்சிக்கு வந்த 100வது நாள் நிகழ்வில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்தின்படி படித்து பட்டம் பெற்று தீட்சை பெற்ற 206 மாணவர்களில் பெரும்பாலோனோருக்கு அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பூஜை செய்தவற்கான ஆணையை வழங்கி பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை கலைஞர் நீக்க முயன்று இறுதியில் மு.க.ஸ்டாலின் நீக்கி வெற்றி பெற்றுள்ளார்.