
தூத்துக்குடியில் லயன்ஸ் டவுனை சேர்ந்தவர் 47 வயதான ஆனந்த சைரஸ். மீன் பிடி தொழிலில் செய்து வந்த இவர், தனது குடும்பத்தினருடன் ராஜகோபால் நகரில் வசித்து வந்துள்ளார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் கருப்பசாமி என்பவருக்கும் இடையே குடிபோதையில் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் 19ஆம் தேதி மாலை ஆனந்த சைரஸ் குடிபோதையில் புலம்பி கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கருப்பசாமி போலீஸுக்கு போன் செய்து தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சிப்காட் காவல் நிலையத்திலிருந்து ஆனந்த சைரஸ் வீட்டுக்கு வந்த போலீசார் மூன்று பேர், அங்கிருந்த ஆனந்த சைரஸிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் ஆனந்த சைரஸ் அடாவடியாக பேசியதால் “நீ என்ன பெரிய சண்டியரா.....” என கேட்டு அப்பகுதி மக்கள் முன்பாக போலீசார் தாக்கியதோடு அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தகவலின் பேரில் அங்கு வந்த ஆனந்த சைரஸ் மனைவி சரோபினா வீட்டுற்கு வெளியே நின்று போலீசாருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஆனந்த சைரஸ் திடீரென தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதை கண்டு பதறிய போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். பின்னர் உடல் கருகிய ஆனந்த சைரஸை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை(22.4.2025) இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். ஆவேசமடைந்த அவரது குடும்பத்தினர் உரிய நிவாரணம் வழங்கக் கோரி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ஆனந்த சைரஸ் மனைவி சரோபினா கூறுகையில்.... எனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை. குடிபோதையில் புலம்பி கொண்டு இருந்துள்ளார். இதனை பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பசாமி என்பவர் தன்னைத்தான் பேசுவதாக கூறி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதை விசாரிக்க வந்த போலீசாருக்கும் எனது கணவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே எனது கணவரை போலீசார் கம்பால் தாக்கியுள்ளனர். இதில் மனமுடைந்த எனது கணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். எனது கணவர் வருமானத்தை வைத்தே குடும்பம் நடந்து வந்த நிலையில் அவர் இறந்ததால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனது குடும்ப வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி வழங்க வேண்டும். அவர் தற்கொலை செய்வதற்கு காரணமான 3 போலீசார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். போலீசார் தாக்கியதாக மீனவர் தீக்குளித்து இறந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி