Skip to main content

“நாங்க ரெடி முதலமைச்சர் ரெடியா?”- ஸ்டாலின்  

Published on 31/05/2018 | Edited on 31/05/2018
mk

 

திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் “நாங்க ரெடி  முதலமைச்சர் ரெடியா?”- என்ற தலைப்பில் விடுத்துள்ள   அறிக்கை.:

‘’திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கடந்த 29.5.2018 அன்று சட்டமன்றத்தில் மிகவும் தெளிவாக, “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; புறக்கணிக்கிறோம்”, என்று பேரவைத்தலைவரிடம் கூறிவிட்டுத்தான் அவையில் இருந்து வெளியேறினோம் என்பதை, மாண்புமிகு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது, இன்று (31.5.2018) சட்டமன்றத்தில் அவர் அளித்துள்ள விளக்கத்தில் இருந்து தெரிய வருகிறது.

 

ஒரு ஆலையை மூடுவது என்றால், முதலில் அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதியைத் திரும்பப்பெற வேண்டும். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில், கடந்த 17.5.1995 அன்று வழங்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதி திரும்பப் பெறப்பட்டதாக, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக வெளியான இருபக்க அரசு ஆணையில் இல்லை. அதேபோல், 22.5.1995 அன்று ஆலையை துவக்க, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கிய ஒப்புதல் கடிதம் அந்த ஆணையில் ரத்து செய்யப்படவில்லை.

 

ஆகவே, இந்த அரசாணையானது நீதிமன்றத்தின் முன்பு நிற்க முடியாத, ஒரு அரைகுறை ஆணையாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டித்தான், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டுங்கள்; அதில் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்கு தேவையில்லை என்று காரண, காரிய விளக்கங்களோடு, சட்டரீதியாக எந்தவித ஐயப்பாட்டுக்கும் இடம் தராதபடி தெளிவான, முழுமையான ஒரு கொள்கை முடிவை எடுங்கள்; அதனடிப்படையில் எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும் வகையில், அந்த ஆலையின் விதிமீறல்களை எல்லாம் ஒன்றுவிடாமல் வரிசையாகச் சுட்டிக்காட்டி, விரிவானதொரு அரசு ஆணையை வெளியிடுங்கள்; அதுமட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும், நீதிமன்றம் எந்தநிலையிலும் குறுக்கிடாமல் இருப்பதற்கும் ஒரே தீர்வாக அமையும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இன்றுவரை தன்னுடைய அமைச்சரவையை கூட்டுவதற்கே தயங்கி, தாமதித்துத் தடுமாறி வரும் முதலமைச்சர், ஏதோ ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டதாகப் பேசுவது வியக்கத்தக்கதாக மட்டுல்ல; வேடிக்கையாகவும் இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை துவங்க முக்கிய அனுமதிகளைக் கொடுத்தது அ.தி.மு.க. அரசுதான். 250 மீட்டருக்கு “க்ரீன் பெல்ட்” அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டு, பிறகு, 25 மீட்டர் “க்ரீன் பெல்ட்” அமைத்தால் போதும் என்று தளர்த்தி அனுமதித்ததும் அ.தி.மு.க. அரசுதான். “இந்த தாராள மனப்பான்மைக்கு போதிய காரணங்கள் கோப்புகளில் இல்லை”, என்று உயர் நீதிமன்றமே குட்டு வைத்ததை முதலமைச்சர் ஒருவேளை மறந்து விட்டிருக்கலாம்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களே ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் எல்லாம் இன்னும் செய்தித்துறையில் பாதுகாப்பாக இருக்கின்றன. வாட்ஸ்அப்பிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. வேண்டுமென்றால், செய்தித்துறை அமைச்சரிடம் வாங்கிப் பார்த்து, முதலைமச்சர் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, ஏதோ ஸ்டெர்லைட் ஆலையை 2013-ல் மூடிவிட்டதாக கூறியிருக்கிறார் முதலமைச்சர். கடந்த 29.3.2013 அன்று அப்படியொரு உத்தரவு அ.தி.மு.க. அரசால் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நான்கே மாதங்களுக்குள், ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பாகச் செயல்படுகிறது என்று, அதே அ.தி.மு.க. அரசு அறிக்கை கொடுத்து, தனது இரட்டை நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டது.

 

ஆகவே, ஸ்டெர்லைட் ஆலை என்பது அ.தி.மு.க.வின் “பேபி” அல்லது வளர்ப்புக் குழந்தை. அதை திடீரென்று எங்களுடையது அல்ல என்று கையை உதறி, தி.மு.க. மீது திசை திருப்ப நினைப்பது முதலமைச்சருக்குக் கொஞ்சம்கூட அழகல்ல. ஆலை விரிவாக்கத்தைப் பொறுத்தவரை, நான் அவையில் கூறியிருப்பதாக முதலமைச்சர் பேசியிருப்பது, பொதுவான தொழில் வளர்ச்சி பற்றியதே தவிர, ஸ்டெர்லைட் ஆலை நடந்தே தீர வேண்டும் என்றல்ல. 

அந்த ஆலை விரிவாக்கத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில், மக்களின் கருத்தை பரவலாகவும், விரிவாகவும் கேட்டறிவதுதான் சட்டரீதியில் சரியானது. அதுவே ஜனநாயக முறையிலான ஒரு அரசுக்கும் அழகு.

 

அதேபோல, ஆலை விரிவாக்கத்திற்கு அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற 16.12.2005 மற்றும் 16.2.2006 ஆகிய தேதிகளில் நிலம் ஒதுக்கிய விவரங்களைச் சுட்டிக்காட்டி, நில ஒதுக்கீட்டை தற்போது ரத்து செய்திருப்பதையும், தி.மு.க. ஆட்சியில்தான் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டது என்பது போல மடைமாற்றிப் பேசியிருக்கிறார். ஆகவே, “எப்படி துப்பாக்கிச் சூடு” பற்றியே குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக விளக்கம் அளித்தாரோ, அதேபோல், ஸ்டெர்லைட் ஆலை குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமலேயே, அரைகுறையாக அவையில் முதலமைச்சர் பதிலளித்துக் கொண்டிருக்கிறார். ஆகவே, ஸ்டெர்லைட் ஆலை துவங்குவதற்கும், தூத்துக்குடி பகுதியையே கொடிய நோய்களின் ஊற்றுக்கண்ணாக மாற்றியதற்கும் அ.தி.மு.க. அரசு எப்படி காரணமானதோ, அதேபோல, இன்றைக்கு 13 பேரை காக்கை குருவி போல் சுட்டுக்கொன்றதற்கு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியே முழு முதல் காரணம்.

 

தான் முதலமைச்சரானதும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் பற்றி கூறாமல், தனது நூறு நாள் சாதனைக்கு விழா எடுத்துக்கொண்ட  எடப்பாடி பழனிசாமி அவர்கள், திடீரென்று ஜெயலலிதா புகழ் பாடி; புகலிடம் தேடியிருக்கிறார். அதுமட்டுமல்ல, சட்டமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், எதிர்க்கட்சி விவாதங்களுக்கு உரிய பதில் அளிக்கவும், ஆர்வமுள்ள எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காரணத்தால், மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அன்றைக்கு தன்னந்தனியாக வந்து சட்டமன்றத்தில் பங்கேற்றார். அது கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தை நடத்தும் பக்குவத்துக்கும், பழுத்த அனுபவத்துக்கும், கிடைத்த வெற்றியே தவிர எடப்பாடி பழனிசாமி கூறுவதுபோல, மறைந்த அம்மையாருக்கு கிடைத்த வெற்றியல்ல என்பதை உணர வேண்டும்.

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றப் புறக்கணிப்பு குறித்து பேசியுள்ள முதலமைச்சர், “அவர்களாகவே வெளியேறினார்கள். அவர்கள் திரும்பி வந்து ஜனநாயக கடமையாற்றுவதற்கு எவ்வித தடையும் கிடையாது”, என்று கூறியிருக்கிறார். சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எடுத்து வைத்து, பணியாற்றுவதில் தி.மு.க.விற்கு, அ.தி.மு.க.வால் எக்காலத்திலும் ஈடு இணையாக இருக்க முடியாது. தமிழக நலனுக்காகக் கொண்டு வரப்படும் தீர்மானங்களில், ஆளுங்கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் தி.மு.க.வின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையில் ஒருதுளி கூட அ.தி.மு.க.வுக்குக் கிடையாது என்பதை நாட்டு மக்கள் நன்கு உணருவார்கள்.

 

ஆகவே, சட்டமன்றத்தில் பணியாற்றுவது பற்றி இவர் எங்களுக்கு அறிவுரை கூற முற்படுவது, “பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது”, என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு இருந்தால், நாளைக்கே அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து, விரிவானதொரு அரசு ஆணையை பிறப்பித்து, நிரந்தரத் தீர்வு காணுவதற்கு நடவடிக்கை எடுத்தால், திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்ற கூட்டத்தில் உடனே பங்கேற்கத் தயாராக இருக்கிறது.

 

அதுமட்டுமின்றி, அமைச்சரவை முடிவின்படி வெளியிடப்படும் அரசு ஆணை பற்றியும், ஸ்டெர்லைட் ஆலை துவங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றியும், சட்டமன்றத்தில் நாள் முழுவதும் விவாதிக்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நானும் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். “நாங்க ரெடி; முதலமைச்சர் ரெடியா?” என்பதை உடனே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’’


 

சார்ந்த செய்திகள்