Skip to main content

கண்காணிப்பில் வீரன் அபிநந்தன்!

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

மார்ச் 1-ஆம் தேதி. வாகா எல்லை. தமது மகனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனர் அந்தப் பெற்றோர். அவர்களோடு, தேசப்பற்றுமிக்க மக்கள் பெருந்திரளே அங்கே காத்திருந்தது. எதிர்பார்க்கப்பட்ட அபிநந்தனின் விடுதலை மதியம் மூன்று மணிக்கு நடக்கவில்லை. சம்பிரதாயங்கள், மருத்துவப் பரிசோதனைகள் என காரணங்கள் அடுக்கப்பட்டன. நேரமோ கோடைகால ஆற்று நீரோட்டத்தைப் போல மிகமெதுவாய் ஒழுகிச் சென்றது. ஒவ்வொரு மணி நேரமும் ஒரு யுகமாய்க் கழிய, இரவு 9.15 மணிக்குதான் அபிநந்தன் விடுவிக்கப் பட்டார். அதுவரை வெளிச்சமில்லாத அந்த பெற்றோர் முகம் உறுதிப்பாட்டின் வெளிச்சத்தால் பிரகாசமாய் மலர்ந்தது.

abhinandan


அபிநந்தனின் தந்தை சிம்மக்குட்டி வர்த்தமான் இந்திய ராணுவத்தில் ஏர் மார்ஷலாகப் பணியாற்றியவர். தாய் சோபா மருத்துவர். போர் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று மருத்துவம் பார்ப்பவர். அபிநந்தனின் மனைவி தன்வி விமானப் படையில் பணியாற்றியவர். ஜம்முவிலிருந்து அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி மீண்டதில் ஒரு த்ரில்லர் நாவலுக்குக் குறையாத சுவாரசியச் செய்திகள் மறைந்திருக்கின்றன.

இந்தியாவின் பாலக்கோட் தாக்குதலுக்கு பதிலடியாக ஜம்மு- காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ் தான் பதிலடித் தாக்குதல் நடத்தியது. ஜம்மு பக்கமுள்ள நோஷிரா கிராமத்தில் பாகிஸ்தான் விமானங்கள் குண்டுவீசித் திரும்பின. ஆனால் பாகிஸ்தான் குறிவைத்தது, இந்தியாவின் ஜம்முவின் நார்த்தன் கமாண்ட் பகுதிக்குத்தான். அங்கு தான் இப்பகுதிக்கான பெட்ரோல், டீசல் சேமிப்புக் கிடங்கு இருக்கிறது. பாகிஸ்தான் குண்டுபோட்ட இடத்துக்கும், சேமிப்புக் கிடங்குக்குமான வித்தியாசம் வெறும் 2 கிலோமீட்டர்தான் என்கிறது இந்தியாவின் முன்னணி வலைத்தள பத்திரிகையான ஃபர்ஸ்ட் போஸ்ட்.
abhinandan
வெவ்வேறு இடங்களிலிருந்து பத்து எஃப்-16 விமானங்கள் கிளம்பி, குறிப்பிட்ட இலக்கை நோக்கி வரத் தொடங்க, அவர்கள் வருவதை கடைசிக் கட்டத்தில்தான் மோப்பம்பிடித்திருக்கிறது இந்தியப்படை. வந்த விமானங்களைத் தடுத்து திருப்பியனுப்ப, விமானப் படையை அனுப்புகிறது, இந்தியா. இந்திய எல்லையைத் தாண்டுவதைச் சொல்லி எச்சரித்து, பாகிஸ்தான் விமானங்களை துரத்த ஆரம்பித்திருக்கிறார்கள் இந்தியப் படையினர். மோதலில் 9 விமானங்கள் பின்வாங்கிச் சென்றுவிட ஒரேயொரு விமானம் மட்டும் பின்வாங்கவில்லை. இந்த விமானத்துக்கான பைலட்டாக இருந்தவர் பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த சகாஸ் உட்பின். இந்த விமானத்தை எதிர்கொண்டவர்தான் அபிநந்தன்.

தனது மிக் 21 விமானத்தின் துணைகொண்டு, அபிநந்தன் சகாஸ் உட்பினை மறிக்கிறார். இருவருக்கும் இடையே ஒருவரையொருவர் மறிக்கவும் துரத்தவுமான டாக்ஃபைட் நடக்கிறது. ஒருகட்டத்தில் சகாஸின் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார் அபிநந்தன்.

இந்த மோதலில் வீழ்ந்த சகாஸின் மரணம் பற்றி அறிவிக்கமுடியாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது. ஆனால் இந்த மோதலில் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் எல்லையில் வீழும் மிக் விமானத்திலிருந்து அபிநந்தன் பாராசூட்டில் குதிக்கும் புகைப்படம் ஒன்றுமட்டும் இந்தியத் தரப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உலகத் தரம் வாய்ந்த எஃப் 16 விமானத்தை, தனது பழமையான மிக் 21-ஐ வைத்து அபிநந்தன் துரத்தியடித்து வீழ்த்தியிருப்பது சாதாரணமானதல்ல. எஃப் 16 விமானம் மிகவும் திறன்வாய்ந்த விமானம். அது வருவதே 2 கிலோமீட்டருக்கு முன்னால்தான் நம் கவனத்துக்கு வரும். எளிதாக ரேடார் கவனத்தை ஏய்க்கும் திறன்மிக்கது.

அமெரிக்காவின் ஏவியேஷன் சிஸ்டமே தனித்தன்மை வாய்ந்தது. போர் விமானங்கள் தயாரிப்பில் அமெரிக்காவுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. நம்மிடம் அத்தகைய தரத்திலான விமானங்கள் இன்று இல்லை.
s
பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டதும் அபிநந்தன் செய்த முதல்வேலை, இந்தியா தொடர்பான மிலிட்டரி ஆவணங்களை அழித்ததுதான். அபிநந்தன் கையில் எந்தத் தளத்தைத் தாக்கவேண்டும், அந்த இடத்துக்கு எப்படிப் போகவேண்டும் என்பதற்கான ராணுவத்தள மேப் இருந்தது. அதை வாயில்போட்டு மென்று தின்றுவிட்டார். இன்னும் சில ஆவணங்களை நீரில் நனைத்து அழித்துவிட்டார். இவையெல்லாம் பாகிஸ்தான் ராணுவம் கையில் கிடைத்திருந்தால், அந்த மேப்பை வைத்தே இந்தியாவின் திட்டம் என்ன என்பதை ஓரளவுக்கு யூகித்திருக்கும்.

தனது பிடிக்குள் அபிநந்தனைக் கொண்டு வந்ததும் பாகிஸ்தான் ராணுவம் அபிநந்தனிடம் விடாமல் கேள்வி கேட்கிறது, இந்தியாவின் டார்கெட் என்ன? எப்படி தாக்க நினைத்தது இப்படி ஆயிரம் கேள்வி கேட்டு- மனநிலையில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

தற்சமயம் டெல்லி ஆர்.ஆர். மருத்துவமனை எனப்படும் ராணுவ மருத்துவமனையில் இருக்கிறார் அபிநந்தன். புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்று அது. அபிநந்தனிடம் இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ராணுவ புலனாய்வுக் கான அதிகாரிகள், ஐ.பி. எனப்படும் இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், ரா அதிகாரிகள், விமானப் படை அதிகாரிகள் பேசிவருகிறார்கள். அபிநந்தன் வசமிருந்த துப்பாக்கி பாகிஸ்தான் ராணுவத்திடம் இருப்பது உள்ளிட்ட கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. இந்தியாவின் 130 கோடி மக்கள் போற்றும் வீரனான அபிநந்தன் ராணுவ நடைமுறைப்படி இந்திய அரசின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.

எதிரி ராணுவத்திடம் சிக்கும் ஒருவரின் மூளையில் எதிரி ராணுவத்தால் பல விஷயங்கள் ஏற்றப்படும். அதை மாற்றுவதற்கு டீ ப்ரீபிங் எனப்படும் அவர்களால் விதைக்கப்பட்டதை அகற்றும் சிகிச்சை குறைந்தபட்சம் மூன்றுவார காலத்துக்கு நடக்கும்.
modi
தவிரவும் எலெக்ட்ரானிக் சிப் போன்ற உளவறியும் சாதனங்கள் ஏதும் உடலில் பொருத்தப்பட்டிருக்கிறதா என சோதனை செய்வார்கள். அப்படி எதுவும் இல்லை என தெரிய வந்திருக்கிறது.

"பாராசூட்டில் குதித்து தப்பும்போது அவருக்கு முதுகுத் தண்டுவடத்திலும், விலா எலும்பிலும் அடிபட்டிருக்கிறது. அதற்கான சிகிச்சைகள் தரப்படுகின்றன. கன்னத்தில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்திற்கும் மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அபிநந்தனின் தற்போதைய காயங்கள் எல்லாம் குணமாகவேண்டும். அதன்பிறகுதான் வேலையில் சேருவதுபற்றி யோசிக்கமுடியும். அதுவும் மீண்டும் ஏர் மார்ஷலாகச் சேருவ தென்பது சாதாரணமானதல்ல. பைட்டர் ஃப்ளைட்டுக்கான முழு உடற்தகுதியுடன் திரும்பிவரும்போது அபிநந்தனை அதே பணியில் அமர்த்தமுடியும்' என்கிறார் ஏர் சீஃப் மார்ஷலான பீரேந்தர் சிங் தனோவா.

இந்திய ராணுவத்தில் ஜெனரலாக இருந்தவர் கேரளாவைச் சேர்ந்த பத்மநாபன். அவர் பணியிலிருந்த காலத்தில் பழைய விமானங்களை எல்லாம் அகற்றிவிட்டு, புதுவிமானங்கள் வாங்கவேண்டும் என அரசாங்கத்துக்கு கோரிக்கை வைக்கிறார். அன்றைக்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் ஏ.கே. அந்தோணி. 20 வருடங்களுக்கு முன்பே ராணுவத்துக்கு வைக்கப்பட்ட கோரிக்கை இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

இந்தியா டுடே விழாவில், "இந்த சமயம் மட்டும் இந்தியாவிடம் ரஃபேல் விமானம் இருந்தா நிலைமையே வேற' என சொல்கிறார் பிரதமர் மோடி. அவரோட அந்த அறிவிப்பே இந்தியா இந்த போர்ல தோற்றுவிட்டது என சொல்றதுக்கு ஒப்பானதுதான் என்கிறார்கள் போர் நுணுக்கம் அறிந்தவர்கள். மம்தா பானர்ஜியோ, "350 பேர் மரணம், 250 பேர் மரணம்னு சும்மா கதை விடாதீங்க. ஆதாரம் எங்கே' என கேட்கிறார். சங்கப் பரி வாரங்களே இதுகுறித்து கேள்வி கேட்கும் நிலை மோடிக்கு வந்துவிட்டது. உண்மை நிலவரத்தை அவரால் சொல்ல முடியவில்லை.

அமெரிக்க சாட்டிலைட் இந்தியா- பாகிஸ்தான் சண்டை யைக் கவனிச்சுக்கிட்டிருந்தது. இந்தியா போட்ட குண்டுகளால 350 பேர் செத்ததுக்கு ஆதாரம் கிடையாது. உலக முன்னணி பத்திரிகைகளும் இதுவரை 300 பேர் செத்ததா தெரிவிக்கலை.

மிராஜ் 2000 குண்டு போட்ட இடத்தின் விளைவுகளை அறிய, ஐட்பத எனும் கையால் பயன்படுத்தக்கூடிய ரெக்கார்டர் தேவை. இத்தகைய ரெக்கார்டர்களுக்கு ஜீரோ விஸிபிளிட்டி பதிவுசெய்யும் திறன் உண்டு. இந்தியா பாகிஸ்தானில் போட்டது இஸ்ரேல் கொடுத்த பாம். இதில் 8 முதல் 16 கேமரா உண்டு. குண்டு விழுந்தது முதல் வெடித்ததும் என்ன நடக்கிறது, எத்தனைபேர் இறந்தார்கள் என ரெக்கார்டு பண்ணி அனுப்பும் தொழில்நுட்பத்தைக் கொண்டது. ஆனால் அந்தப் புகைப்படங்களைப் பெற நமது விமானத்தில் இந்த ஐட்பத இருந்தாலோ, ஜீரோ விஸிபிளிட்டி ரெக்கார்டு சாதனங்கள் தேவை. அது இல்லாததால் ஆதாரங்களும் இன்று நம்மிடம் இல்லை.

இந்தியா, பாகிஸ்தான் மேல பாம் போட்டவரைக்கும் அமெரிக்காவுக்கு பிரச்சனை இல்லை. ஆனா பாகிஸ்தான் திரும்ப இந்தியா மேல பாம் போட்டதும் அமெரிக்கா சீரியஸாயிடுச்சு. பாகிஸ்தான்ல அதிக முதலீடு செய்திருக்கிற நாடுகளான அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் இந்தப் போர்ச்சூழலை கவலையுடன் பார்த்தன.

பாகிஸ்தான் ஆதரவு எடுக்கிற சீனாகூட இந்தப் போர்ச்சூழலை விரும்பலை.. சீனாவும் பாகிஸ்தான்ல நிறைய முதலீடு செய்திருக்கு. மூன்று நாடுகளும், அபிநந்தனை விடுவிக்கச் சொல்லி பாகிஸ்தானுக்கு ஆலோசனை தந்தன.

மூன்று பெரிய நாடுகளும் நெருக்கும் நிலையில், நிலவரத்தை ஆலோசித்துவிட்டு பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் இருக்கிற ட்ரம்ப்கிட்ட அபிநந்தனை விடுவிக்க தயார்னு தகவல் சொல்றார். இப்படித்தான் அபிநந்தனின் விடுதலை உறுதியானது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்துல, நல்லெண்ண அடிப்படையில அமைதிக்கான முன்வைப்பா அபிநந்தனை விடுவிக்கப் போவதாக அறிவிக்கிறார் இம்ரான்.

போர் மூலம் தனது அரசியல் பலத்தை தேர்தல் களத்தில் பெருக்கிக் கொள்ள நினைத்தார் மோடி. இம்ரானோ, நெருக்கடியான சூழலை "நல்லெண்ண முயற்சி' போல காட்டி தனது அரசியல் பலத்தை பெருக்க முயற்சித்திருக்கிறார்..

Next Story

அபிநந்தனுக்கு ராஜஸ்தான் மாநிலம் சூரத்கார் விமானப்படை தளத்தில் பணி!

Published on 14/05/2019 | Edited on 14/05/2019


காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ஸ்-இ-முகமது  தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில்  சுமார் 40 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை வீரர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானங்களை எடுத்து சென்று  பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் பாலக்கோட்  பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 170-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இத்தாலி பத்திரிகையாளரும் தீவிரவாதிகள் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார். ஆனால் இதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த விமானப்படை தாக்குதலில் இந்திய விமானம் அத்துமீறி நுழைந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதில் அபிநந்தன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரை உடனடியாக பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

 

abhinandan

 

இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் இந்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கையால் அபிநந்தன் 60 மணி நேரத்தில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம். பின்னர் இந்திய ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் ஓய்வில் இருந்த அபிநந்தன் தற்போது ராஜஸ்தான் சூரத்கார் விமானப்படை தளத்தில் பணிப்புரிய ஆணையை வழங்கியது இந்திய விமானப்படை. ஏற்கெனவே காஷ்மீரில் பணியாற்றிய அபிநந்தன் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ராஜஸ்தானில் பணியாற்ற ஆணையை வழங்கியுள்ளது. விங் அபிநந்தனின் தந்தை இதே விமானப்படைத்தளத்தில் பணிபுரிந்ததும், விங் அபிநந்தன் அங்கு தனது படிப்பை தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மே -11 ஆம் தேதி பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.