வேறு எந்த மாநிலத்திலும் இப்படியெல்லாம் பேசிவிட்டு வெளியில் நடமாடிவிட முடியாது.
ஆம், கேரளாவில் இருக்கிற தமிழர்களோ, வேறு எந்தக் கட்சியோ முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமாக பேசிவிட முடியாது.
கர்நாடகத்தில் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை நியாயப்படுத்தி பேசிவிட்டு அங்குள்ள தமிழர்களோ, தேசியக் கட்சிகளோ வாழ்ந்துவிட முடியாது.
ஆந்திராவிலும் நிலைமை இப்படித்தான். பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து அங்கும் யாரும் நியாயம் பேசிவிட முடியாது.
தமிழ்நாட்டில்தான் கண்ட கண்ட ஆட்களும் கண்ட கண்ட கருத்துக்களை மீடியாக்களில் தெரிவித்துவிட்டு சுதந்திரமாக நடமாட முடிகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த முடியாத ஒரு பிரதமர் நமக்கு கிடைத்திருக்கிறார். ஒரே இரவில் ஒரே அறிவிப்பில் இந்தியா முழுவதும் மக்களை தெருக்களில் நிற்கவைத்த மோடி, இப்போது ஒரு மாநிலத் தேர்தலுக்காக இன்னொரு மாநிலத்தை பாலைவனமாக்கத் துணிந்திருக்கிறார்.
அவருடைய இயலாமையை நியாயப்படுத்தவும் ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கிறது. அந்தக் கூட்டத்தின் பேச்சுக்களை கேட்டும் சூடு சொரணையற்ற ஒரு கூட்டம் அவர்களை நடமாடவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை திறப்பதை உறுதிப்படுத்த ஒரு அமைப்பு அதாவது ஸ்கீமை அமைக்கவேண்டும் என்று தீர்ப்பில் கூறியிருக்கிறது. பொதுவாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்றுதான் கோரப்பட்டு வந்திருக்கிறது. அந்தக் கோரிக்கையைத்தான் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது. அந்தத் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தை குறித்து மத்திய அரசுக்கு ஆறுவாரங்களாக சந்தேகம் வராமல், கெடு முடிந்த நாளில் சந்தேகம் வருகிறது.
அதாவது, மேலும் தாமதப்படுத்த இதை ஒரு காரணமாக மத்திய மோடி அரசு கண்டுபிடித்து வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் அந்த வார்த்தைக்கு விளக்கம் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், மேலும் மூன்று மாதங்கள் அவகாசமும் கேட்டிருக்கிறது. கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்த அவகாசம் என்றும் வெட்கமில்லாமல் கூறியிருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகத்தில் அசம்பாவிதம் ஏற்படும் என்று மத்திய அரசு கூறுகிறது என்றால், வாரியத்தை அமைக்காவிட்டாலும் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு சூடு சொரணை இருக்காது. தமிழர்கள் அனைவரும் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று மத்திய அரசு கருதுவதாகத்தானே அர்த்தம். இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டுமானால், தமிழர்கள் இளித்தவாயர்கள் என்ற நினைப்பில்தான் மத்திய அரசு செயல்படுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அந்த அளவுக்கு தமிழகத்தில் உள்ள அதிமுக அரசும் அதன் அடிமைகளும் மோடியின் அடிபணிந்து தமிழக மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆளும் அதிமுக அரசு பல சால்ஜாப்புகளை சொல்லி தனது கடமையை தட்டிக்கழித்தாலும், பாஜகவின் மாநிலத் தலைவர்கள் சிலரும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் அந்தக் கட்சியின் எடுபிடிகளும் கொஞ்சம்கூட பயமின்றி, மோடி அரசின் ஏமாற்று நாடகத்தை நியாயப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
“கர்நாடகத்தில் பாஜக வெற்றிபெற்றால் காவிரியில் தண்ணீர் வரும். எனவே, பாஜக வெற்றிக்காக தமிழர்கள் பிரார்த்தனை செய்யவேண்டும்” என்று எச்.ராஜா கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வருவதற்குள் காவிரிப் பிரச்சனையை முடித்துவிடுவோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனோ, எரிகிற இந்த பிரச்சனை குறித்து கருத்துத் தெரிவிக்கவே மறுத்திருக்கிறார்.
அதேசமயம், உணர்வுள்ள தமிழர்களின் போராட்டங்களையும் நீர்த்துப்போக செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தை முடங்கச் செய்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியவர்களை எடப்பாடி அரசு கைது செய்திருக்கிறது.
மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று கூறிவிட்டு, மத்திய அமைச்சரவை செயலாளர் மீதும், நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் மீதும் அவமதிப்பு வழக்குப்போட்டிருக்கிறது அதிமுக அரசு. மத்திய அரசையோ, நீர்வளத்துறை அமைச்சரையோ குற்றம்சாட்ட முடியாத அளவுக்கு, அடிமைச் சேவகம் செய்யும் அரசு தமிழகத்தில் இருந்தால், தமிழகத்தின் உரிமைகளை எப்படி பாதுகாக்க முடியும்?
ஆனால், தமிழர்களின் உரிமைகளை பறிக்க நினைத்தவர்கள், இந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்டதே இதுவரையான தமிழக வரலாறாக இருக்கிறது.