ரஜினியின் ஆன்மிக அரசியல், கமலின் மக்கள் நீதி மய்யம் வரிசையில் இப்பொழுது ராமநாதபுரத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரையின் பின்புலத்தில் துவங்கியுள்ளது புதிதாய் ஓர் கட்சி. அதுவும் "தமிழக எழுச்சிக் கழகம்" என்ற பெயரில்.
சனிக்கிழமையன்று ராமநாதபுரம் அரண்மனை வாசலில் மாலை வேளையில் சுமார் மூன்றாயிரத்திற்கும் அதிகமான மகளிரைக் கொண்டு கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மகளிர் தினத்தை தாமதமாகக் கொண்டாடியது "தமிழக மக்கள் நல சங்கம்" எனும் அமைப்பு. ஆடல், பாடல் மற்றும் நாடகங்கள் என களைக் கட்டிய அந்த மேடையில், அமைப்பின் மாநிலத் துணைத்தலைவி அமுதா சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர், "தமிழக எழுச்சிக் கழகம்" புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்து வைத்து, "கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயம் இவைகள் இலவசமாக மக்களிடம் சேர அரசிடமே இருக்கவேண்டுமென்பதையும், நேர்மையும், ஒற்றுமையுமே எங்களது நோக்கம்." என கட்சியின் கொடிக்கும், நிறத்திற்கும் விளக்கமளித்தனர் அவர்கள்.
இந்நிலையில், " இந்த கட்சியினை இயக்குவது ராமநாதபுர மாவட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருக்கும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரையே" என்றத் தகவல் வெளிப்பட்டது. இதற்கு வலுச்சேர்க்கும் விதமாக கட்சியின் மாநிலப் பொறுப்பிலுள்ள அமுதா சுரேஷ் தன்னுடைய முகநூல் பக்கத்தில், " எங்களது கொள்கைகளை பார்த்து உணர்ந்து வந்தவர்கள். இருந்தாலும் எங்களை இயக்குவது நேர்மையான உயர் அதிகாரிகள் . விரைவில் அவர்கள் தங்கள் மதிப்பான பதவியை துறந்து களத்தில் வரப்போகிறார்கள். இதன் மூலம் இந்த தமிழ் நாட்டின் வளர்ச்சியை காணப் போகும் நாள் வெகு தூரம் இல்லை." எனப் பதிவிட அரசியல் வட்டாரத்திலும், காவல்துறை வட்டாரத்திலும் அரசியல் சூடு பரவியுள்ளது.
இது குறித்து ஏ.டி.எஸ்.பி.வெள்ளைத்துரையிடம் பேசினோம். " நான் அரசு அதிகாரி என்றாலும் யாருக்காகவும் நான் வேலை செய்யக்கூடாது என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் என்னுடைய வாக்கை நான் யாருக்கு செலுத்த வேண்டுமென எனக்குத் தெரியும். நல்ல இளைஞர்கள் கொண்ட பட்டாளம் அது.! கட்சி ஆரம்பிக்கின்றேன் உங்களுடைய உதவி வேண்டுமென வந்தார்கள். நல்லது யார் செய்தாலும் நல்லது தானே..? என்ற அடிப்படையில் நேர்மையாக இருந்த அவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் செய்தேன். 30 வகையான குறிப்புக்களை அவர்களுக்கு நான் கொடுத்தேன். அதைப் பின்பற்றி கட்சி ஆரம்பித்திருக்கின்றார்கள். அதே வேளையில் நல்லவர்கள் இயங்கும் கட்சிக்கு நானும் வரலாமோ.? என்ற எண்ணமும் இருக்கின்றது." என்றார் அவர்.