நாட்டையே அதிரவைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி பண மோசடிக்குக் காரணமான நீரவ் மோடி மீது ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது வருமான வரித்துறை. மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி ரூ.12,600 கோடி பண மோசடி செய்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்துள்ள புகார்களின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
![Nirav](http://image.nakkheeran.in/cdn/farfuture/LxKK0diSVo6H9maeEWuQD9X_uaCl6rnZTaoBg_5FKs0/1533347630/sites/default/files/inline-images/Niraa.jpg)
இந்த விவகாரத்தில் அவர்மீது ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நீரவ் மோடியிடம் இருந்து கடிதம் வந்தது. அதில், தனது சொத்துக்களைப் பறிமுதல் செய்வதால் தொழில் முடக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. அதற்காக ரூ.2000 கோடி மதிப்பிலான நகைகள், ரூ.200 கோடி மதிப்பிலான வங்கி சேமிப்பு மற்றும் ரூ.50 மதிப்புள்ள அசையா சொத்துகளைத் தருவதாக எழுதியிருந்ததாக கூறப்பட்டது.
ஆனால், அதே நாளில் வருமான வரித்துறை அளித்த பரிந்துரையின் பேரில் குடிவரவு பணியகம் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மேகுல் சோக்ஸி மீது ப்ளூ கார்னர் நோட்டீஸை வழங்கியுள்ளது. மேலும், நீரவ் மோடிக்குச் சொந்தமான நான்கு சொத்துகளை முடக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி நடைபெற்ற கிளையில் பணிபுரிந்த மூத்த ஆடிட்டர் எம்.கே.சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
ப்ளூ கார்னர் நோட்டீஸ் என்றால்..
ஒரு குற்றம்சாட்டப்பட்டவர் வெளிநாட்டிற்கு தப்பியோடிய பின்னர் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது, அவர்பற்றிய சமகாலத் தகவல்களை கிரிமினல் விசாரணைக்காக கைப்பற்றுவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
ஐ.பி.எல். ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லலித் மோடி மீது இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அவர் இப்போது வரை வெளிநாடுகளில் சுதந்திரமாக காலத்தை கழித்து வருகிறார். தற்போது அவர்மீது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க அரசு பரிந்துரை செய்துவருவதாக சொல்லப்படுகிறது.