பெரியார் சிலை விவகாரத்தில் விளக்கத்தை ஏற்றுதான் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
முகநூலில் அட்மின் கருத்து பதிவிட்டதற்கு எச்.ராஜாவின் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? எச்.ராஜா இணையத்தில் கருத்து பதிவது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதை மட்டும் தான் மாநில பாஜக கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
திருப்பத்தூரில் பெரியார் சிலையை உடைத்தவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளேன். ஆனால் திருவல்லிக்கேணியில் எங்கள் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசுகின்றனர். வேண்டுமேன்றே தமிழகத்தை ஒரு கொதிகலனாக வைத்திருப்பது எப்படி சரியாக இருக்கமுடியும். நான் நடவடிக்கை எடுத்தது போல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அவர்கள் கட்சியினரை நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள். எந்த சிலையையும் சேதப்படுத்துவது பாஜகவின் கொள்கை கிடையாது. இதனை பிரதமர் மோடியே தெரிவித்துவிட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.