ஆண்டுக்கு ரெண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று ஆரவாரமாக பேசி ஆட்சிக்கு வந்த மோடி, தான் விரித்த பொய் வலையில் தானே சிக்கிக்கொண்டார். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தனது பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்துவதற்காக, 2011 ஆம் ஆண்டிலிருந்தே பொய்ப் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சிகளில் ஆறு நாளைக்கு ஆறு பிரதமர் என்று கேலி பேசுகிறார் பாஜக தலைவர் அமித் ஷா. ஆனால், பாஜகவுக்காக ஒரு பிரதமர் வேட்பாளரை பில்டப் செய்வதற்கு 3 ஆண்டுகளும் 30 ஆயிரம் கோடி ரூபாய் பிரச்சார செலவும் ஆனதை வசதியாக மறந்துவிட்டார்.
இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமருக்கென்று உடை வடிவமைப்பாளரும், அலங்கார நிபுணரும் மோடியின் ஆட்சியில்தான் நியமிக்கப்பட்டார்கள். இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களையே உபயோகிக்க வேண்டும், மேக் இன் இந்தியா, கதர் மற்றும் கைத்தறி வளர்ச்சி என்று மேடயில் முழங்கிய மோடி, 10 லட்சம் ரூபாய்க்கு தங்க இழைகளால் நெய்யப்பட்ட கோட் சூட்டை அணிந்து காட்சி அளித்தார்.
வளர்ச்சி, வளர்ச்சி என்று மோடி பேசியதெல்லாம் இந்த வளர்ச்சியைத்தானா என்று சாமானியர்களே கேட்கும் நிலை உருவானது. எதற்கெடுத்தாலும் ஏழைத்தாயின் மகன் என்றும், ரயில் நிலையத்தில் டீ விற்றவன் என்றும் அழுது புலம்பும் மோடி, அம்பானி, அதானி, வேதாந்தா உள்ளிட்ட இந்தியாவின் வளங்களைக் கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு சேவகம் செய்ததைத் தாண்டி எதுவுமே செய்யவில்லை என்ற உண்மை நாட்டு மக்களுக்கு தெரிந்துவிட்டது.
மோடி ஒரு மோசடிப் பேச்சாளர் என்பது அம்பலமான பிறகு, இந்திய மக்கள் விழித்துக்கொண்ட பிறகு கடைசிக்கட்ட ஏமாற்று முயற்சிகளை பாஜகவும் மோடியும் அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களை வெளியிடாமல் மறைத்து வந்த மோடி அரசின் பித்தலாட்டத்தை அந்த புள்ளியியல் துறையில் இருக்கும் அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2011-2012 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்திய ஒன்றியத்தின் வேலையில்லா திண்டாட்டம் 2.2 சதவீதமாக இருந்தது. ஆனால், அது இப்போது நகர்ப்புறங்களில் 7.8 சதவீதமாகம், கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது என்று தேசிய புள்ளியியல் கமிஷன் அறிக்கை தெரிவிக்கிறது. தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் புள்ளிவிவர அறிக்கையை வெளியிடாமல் பதுக்கி வைத்ததின் மூலம் நம்பகத்தன்மையை அரசு இழந்திருக்கிறது என்று தொழில்துறை பொருளாதார நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடையிலேயே ஏராளமான வேலைவாய்ப்பின்மையை நாங்கள் அறிந்தோம். மோடியின் பணமதிப்பிழப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தோம் என்கிறார் ஆஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக பேராசிரியர் அமித் பஸோல்.
பணமதிப்பிழப்புக்கு பிறகு வேலையின்மை அதிகரிக்கும், தொழிலாளர் பங்கேற்பு விகிதாச்சாரம் குறையும் என்று நாங்கள் ஏற்கெனவே கூறியதை இந்த புள்ளிவிவரம் உறுதிசெய்கிறது என்றார் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ். வேலையின்மை அதிகரிக்கும்போது தொழிலாளர் பங்கேற்பு விகிதாச்சாரம் குறைந்தால் கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனாமித்ரா ராய் சவுதரி கூறினார்.
தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் புள்ளிவிவரத்தின்படி 15 வயது முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் மத்தியில்தான் வேலையின்மை அதிகரித்திருக்கிறது என்று வேலை தேடும் இளைஞர் அமைப்பின் நிறுவனரான அனுபம் தெரிவித்தார். பணமதிப்பிழப்புக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கோபத்தை நாங்கள் பார்த்தோம் என்கிறார் அவர். உண்மை நிலைமை இப்படி இருக்க மத்திய அரசு முழுப்பூசணிக்காயை பிடி சோற்றுக்குள் மறைக்கும் முயற்சியை பட்ஜெட் மூலம் மறைக்க பார்க்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக நிதியமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையிலேயே கூறியிருக்கிறார்.
“பணமதிப்பிழப்புக்கு முன்னர் மாதத்தில் 20 நாட்கள் வேலை செய்தோம். ஆனால், இப்போது 10 நாட்கள் வேலை கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது” என்று பியூஷ் கோயலுக்கு கிராமப்புற மக்கள் பதில் அளிக்கிறார்கள்.