தனியார் வசமிருந்த மதுபானக் கடைகளை ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடையாக மாற்றினார். தற்போது சுமார் 4000 டாஸ்மாக் மதுபானக் கடையுடன் கூடிய பார் செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டாஸ்மாக் பார் ஏலம் விடப்பட்டு வந்தது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வந்தது.
இந்நிலையில், கடந்த 2021 முதல் டாஸ்மாக் பார் ஏலம் விடப்படவில்லை. இத்துறையின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கரூர் குரூப் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து பார்களையும் தன்வசம் கொண்டுவர முயற்சி செய்தார். இதற்கு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் டாஸ்மாக் பார்களில் கரூர் டீம் மெகா வசூலை நடத்தியது. பணம் கொடுத்தால் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்ற நிலைக்கு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர். மாமூலை வழங்காத பார் உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர்.
இதை எதிர்த்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பார் உரிமையாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தபோதும், அப்போதைய இத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, சுப்ரீம் கோர்ட் வரை வழக்கை கொண்டுசென்றார். இச்சூழலில், போலீஸ், கலால் துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளை சரிக்கட்டி, சுமார் 4 ஆயிரம் பார்கள் கள்ளத் தனமாக செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் பார் இல்லையென்றால் மது பிரியர்கள் பொது இடங்களிலேயே மது அருந்தும் நிலை வந்துவிடக் கூடாதென்பதற்காக, இந்த கள்ள விற்பனையை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டும் காணாமலிருக்கிறார்கள்.
தற்போது, செந்தில்பாலாஜி சிறைக்கு சென்றதால் இத்துறையின் பொறுப்பு அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கப்பட்டது. இவர் வந்தபிறகு, பார் உரிமையாளர்களிடமிருந்து எந்த பணமும் பெறக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். எனவே பார் உரிமையாளர்கள் நிம்மதியடைந்தனர்.
இப்படியான நிலையில், மது விற்பனை அதிகமாக நடக்கும் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், தீபாவளி பரிசாக அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் பணம் தர வேண்டும் என்று, டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வாய்ஸ் மெசேஜில் பேசும் டாஸ்மாக் பார் சங்க நிர்வாகி ஒருவர், “நமது பார் உரிமையாளர்களுக்கு காலை வணக்கம். குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் பகுதிகளுக்கு முருகனும், சரவணனும் சேர்ந்து வருவார்கள். அவர்களிடம் நாம் கூறியபடி கொடுத்துவிட வேண்டுகிறோம். இன்று இரவுக்குள் நாம் செலுத்திவிட வேண்டியுள்ளது. இன்று இரவு கொடுத்தால்தான் அவர்கள் செலுத்த வேண்டிய இடத்திற்கு நாளை செலுத்த முடியும். ஆகவே காலதாமதப் படுத்தாமலும், வருபவரை காக்க வைக்காமலும் உடனடியாகக் கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது நமது நன்மைக்கே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இந்த வாய்ஸ் மெசேஜ் டாஸ்மாக் பார் உரிமையாளர்களை கலங்கடித்துள்ளது. நன்கு விற்பனையாகும் டாஸ்மாக் பார்களில் ஒரு லட்சம் வீதமும், மற்ற டாஸ்மாக் பார்களில் 50 ஆயிரம் ரூபாய் வீதமும் செலுத்தும்படி வாய்மொழி உத்தரவாகத் தெரிவித்துள்ளதாக பார் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர். செந்தில் பாலாஜியிடமிருந்து தப்பித்தோம் என்று நினைத்த நிலையில், மீண்டும் இதுபோன்ற மெகா வசூலால் பார் தொழில் நடத்துவதே மிகுந்த சிரமமாக உள்ளதாக, நம்மிடம் பெயர் கூறமுடியாத ஒரு உரிமையாளர் தெரிவித்தார்.
தீபாவளிக்கு முந்தைய நாள் இந்த வாய்ஸ் மெசேஜ் அனைத்து பார் உரிமையாளர்களுக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் இந்த மெகா வசூல் பற்றி ஒரு பதிவும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் சுமார் 4200 டாஸ்மாக் பார்களில், ரூ.50,000 வீதம் 21 கோடி ரூபாய் வசூல் செய்து அமைச்சருக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் தலைமை நிர்வாகியான ராமதுரை முருகனிடம் பேசினோம் அவரோ, அப்படியெல்லாம் எந்த வசூலும் நடக்கவில்லை என்று தொடர்பைத் துண்டித்தார்.
இதுதொடர்பாக டாஸ்மாக் இயக்குநரை தொடர்பு கொண்டபோது தொடர்பை எடுக்கவில்லை. அமைச்சர் முத்துசாமியை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் தொடர்பை எடுக்கவில்லை. இம்முறை டாஸ்மாக் விற்பனைக்கு எந்த டார்கெட்டும் நிர்ணயிக்கவில்லையென்று அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் அனுமதியில்லாமல் டாஸ்மாக் பார்கள் நடைபெற்று வரும் சூழலில், முறையாக ஏலம் விடப்பட வேண்டுமென்று பார் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.