இந்தியா முழுவதும் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. சில மாநிலங்களில் அதனுடைய கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்து வருகிறது. இருந்தாலும் அனைத்து மாநிலங்களிலும் தாமரையை மலர செய்ய வேண்டும் என்பதை பாஜக தலைமை அஜெண்டாவாக வைத்து வேகமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சில மாநிலங்களில் உள்ள ஆட்சியை தனக்கே உரிய வழிகளில் 'மாற்றி' புதியதொரு வரலாற்றை படைத்து வருகிறது பாஜக. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தில் தனது 'பலத்தை' சோதித்து பார்த்து அதில் வெற்றியும் கண்டது. அதையும் தாண்டி வட கிழக்கு மாநிலம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சி அமைத்து வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு மட்டும் பாஜக உறுப்பினர்கள் செல்லாத நிலை தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
தற்போது, அதற்கான வாய்ப்பை உருவாக்கவும் பாஜக முயன்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதிமுக உறுப்பினர்கள் சில பேரை இழுக்கும் வல்லமையை பாஜக பெற்றிருந்தாலும், கிட்டதட்ட 115-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள அதிமுகவில், குறைந்தது 40 சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்தால் தான் அவர்களின் பதவி கட்சிதாவல் சட்டத்தின்படி பறிபோகாது. பாஜகவால் அவ்வளவு எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களை இழுக்க முடியாது என்பதே தற்போதைய கள சூழ்நிலையாக உள்ளது. எனவே, இப்போது அவர்களின் பார்வை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பக்கம் திரும்பியுள்ளது.
அதன்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 3 சட்டமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் வளைத்தால் சட்டமன்றத்தில் தாமரையை மலர வைக்கலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 3ல் 1 பங்கு உறுப்பினர்கள் அணி மாறினால் அவர்களின் பதவி பறிபோகாது என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆயுதமாக கொண்டு மத்திய பாஜக, தமிழக காங்கிரஸில் ஆடுபுலி ஆட்டத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.