Skip to main content

8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்! 

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

டிசம்பர் 6-ஆம் தேதி அதிகாலை. தெலங்கானா மாநிலம், ஷம்ஷாபாத் அருகே சட்டன்பள்ளி மேம்பாலம். அதிகாலை 3.30 மணி என்பதால் பெரிய அளவில் போக்குவரத்தோ… ஆள் நடமாட்டமோ இல்லை. சில காவல்துறை ஜீப்புகளும், அதில் சில அதிகாரிகளும் வந்திறங்குகின்றனர். பின்னாலேயே நான்கு பேர் பீதியோடு, குழப்பமான முகங்களுடன் இறக்கப்படுகின்றனர். சில நிமிட இடைவெளிகளில்... இரவின் நிசப்தத்தைக் கிழிக்கின்றன தொடர் தோட்டா சப்தங்கள். தோட்டா கிளம்பிய துப்பாக்கியின் சூடு ஆறுவதற்குள், தெலங்கானாவை என்கவுன்ட்டர் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நவம்பர் 27-ஆம் தேதி வில்லனாகப் பார்க்கப்பட்ட தெலங்கானா காவல்துறை, டிசம்பர் 6-ஆம் தேதி நான்கைந்து தோட்டா செலவில் மக்கள் மனதில் பெரும் ஹீரோவாகி விட்டது.

 

incident



தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷம்ஷா பாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நவம்பர் 27-ஆம் தேதி தனது வேலை முடித்து திரும்பிய திஷாவின் இருசக்கர வாகனம் பழுதாகிப் போனது. அவரது இருசக்கர வாகனத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பஞ்சராக்கிய முகமது, ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன், சின்டகுன்டா சென்னகேசவலு நால்வரும், அவருக்கு உதவுவதாக முன்வந்தனர். இருந்தும் நம்பிக்கையின்றி தனது சகோதரிக்கு போன் செய்து விவரத்தைத் தெரிவித்தார் திஷா. இதற்கிடையில் திஷாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆக, பதற்றமடைந்து காவல்துறையைத் தொடர்புகொண்டது திஷாவின் குடும்பம். ஆனால், காவல் துறையோ உடனே தேடுதலைத் தொடங்காமல் திஷா யாருடனாவது ஓடியிருப்பாள் என்றும், அது தங்கள் எல்லைக்குள் வராதென்றும் தாமதப்படுத்தியபடியே இருந்தது. இரவு 10 மணியளவில் கொடுக்கப்பட்ட புகாருக்கு, அதிகாலை 3.30 மணியளவில்தான் வழக்குப் பதிவு செய்தது. மறுநாள் காலை திஷா போன் செய்த இடத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட தகவல்தான் திஷா குடும்பத்துக்குக் கிடைத்தது.
 

incident



தெலங்கானாவே கொந்தளித்துப் போனது. நாடெங்கும் "குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என குரல்கள் தன்னிச்சையாக எழுந்தன. விரைவாக குற்றவாளிகள் நால்வரும் கைதுசெய்யப்பட்டனர். அதேபோல, புகாரை தாமதமாகப் பதிவுசெய்த காவல்நிலையத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் ஜெயாபச்சன் உள்ளிட்ட உறுப்பினர்கள் திஷாவின் மரணத்தைக் குறிப்பிட்டுப் பேசும் அளவுக்கு விஷயம் போனது. திஷாவின் பெற்றோருக்கு தெலங்கானா முதல்வரின் மனைவியே நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
 

incident



டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் குற்றவாளிகள் நால்வரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு, குற்றத்தை எப்படி நிகழ்த்தினார்கள் என விசாரிக்க அழைத்துச்சென்றது, கமிஷனர் சஜ்ஜனார் தலைமையில் பத்து காவலர்கள் அடங்கிய குழு. குற்றவாளிகள் நால்வரும் காவல்துறையினர் இருவரின் துப்பாக்கிகளை பிடுங்கிக்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி தப்ப முயன்றதாகவும், அதனால் தவிர்க்க இயலாமல் குற்றவாளிகள் நால்வரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்ல நேர்ந்தது எனவும் காவல்துறை கூறியது.
 

incident



சஜ்ஜனார் ஏற்கனவே வாராங்கல்லில் கல்லூரி மாணவிகள் மூவர் முகத்தில் ஆசிட் வீசிய குற்றவாளிகள் மூவரை என்கவுன்ட்டரில் சுட்டுத் தள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி வெளியில் பரவ.. பரவ குற்றவாளிகள் கொல்லப்பட்டதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஹைதராபாத்தில் என்கவுன்ட்டரை மேற்கொண்ட போலீசாரை பொதுமக்கள் பூத்தூவி வரவேற்றதுடன் அவர்களுக்கு இனிப்புகளையும் ஊட்டினர். பட்டாசு வெடித்தும், மேளங்களை இசைத்தும் தங்கள் மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தினர். கமிஷனர் சஜ்ஜனார் படத்துக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. சமூக வலைத்தளங்களில் என்கவுன்ட்டருக்கு பெரும் ஆதரவு கிடைத்ததுடன், சர்வதேச கவனத்தையும் பெற்றது.
 

incident



சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு குற்றவாளிகளில் ஒருவரான சென்னகேசவலுவின் கர்ப்பிணி மனைவி ரேணுகா, "இதுபோன்ற பாலியல் குற்றவாளிகள் எத்தனையோ பேர் சிறையிலிருக்கிறார்கள். அவர்களையும் சுட்டுக்கொல்லும் வரை அவரது உடலை வாங்கமாட்டேன்'' என தன் ஆட்சேபத்தைத் தெரிவித்தார். மாறாக, திஷாவின் தந்தையோ, “என் மகளுக்கு 8 நாட்களுக்குள் நீதி கிடைத்துவிட்டது'' என தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்க, தாயார்... "இனி என் மகளின் ஆத்மா சாந்தி அடையும்'' என தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கு நடிக- நடிகையர்களிடமிருந்து என்கவுன்ட்டருக்கு வாழ்த்துச் செய்திகள் வந்தன. தமிழகத்திலும் நடிகை நயன்தாரா என்கவுன்ட்டரை வரவேற்றார். நடிகர் சித்தார்த் மட்டும், காவல்துறை சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். டெல்லியில் பாலியல் கொடூரத்திற்குள்ளாகி பலியான நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டும் இதுவரை அது நிறைவேற்றப்படாததால் விரக்தியில் இருந்த நிர்பயாவின் தாய், ஹைதராபாத் என்கவுன்ட்டரை வரவேற்றார்.

மெதுவாக பாராட்டுகள் அதிகரித்த அதேசமயம், குற்றவாளிகள் சட்டபூர்வமற்ற முறையில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பும் விமர்சனங்களும் கிளம்பத் தொடங்கின. அதில் ஒரு தரப்பு, "கொல்லப்பட்டவர்கள் நால்வரும் சமூக, அரசியல் பின்னணி இல்லாதவர்கள். அதனால் எளிதாக என்கவுன்ட்டர் செய்துவிட்டனர். சமூக, அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கும் இதே என்கவுன்ட்டர் தண்டனை வழங்கப்படுமா?' என கேள்வியெழுப்பியது. மற்றொரு தரப்போ, "பின்னணி இருக்கிறது அல்லது பின்னணி இல்லையென்பது பொருட்டில்லை. காவல்துறையே தண்டனையையும் வழங்குமெனில் நீதிமன்றம் எதற்கு இருக்கிறது' என கேள்வியெழுப்பியது.

டெல்லியையே சில்லிட வைத்த நிர்பயா கொலை வழக்கினை விசாரித்த முன்னாள் கமிஷரான நீரஜ்குமார், "அந்த சமயத்தில் எங்களுக்கு நிறைய அழுத்தம் இருந்தது. இருந்தும் நாங்கள் என்கவுன்ட்டரைத் தேர்ந்தெடுக்கவில்லை. சட்டத்தை மதித்து அதன்படி நடந்தோம்'' என்றிருக்கிறார்.

பாலியல் கொடூரத்தை எப்படி நிகழ்த்தினோம் என்பதை நடித்துக் காட்டுவதற்காகத்தான் அதிகாலையில் குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் சென்றிருந்தால், அதனை வீடியோவாக பதிவு செய்திருப்பார்கள். என் கவுன்ட்டருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு மற்றும் சிறப்பு புலனாய்வு விசாரணையில் அந்த வீடியோ சமர்ப்பிக்கப் படும்போது மேலும் பல உண்மைகள் தெரியவரும் என்கிறார்கள். ஹைதராபாத் விவகாரம் சூடு கிளப்பிக் கொண்டிருந்த அதேசமயம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி ஒரு பெண் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே திடுக்கிடவைத்தது.


உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மிதாலி (பெயர் மாற்றப் பட்டுள்ளது) 2018 டிசம்பரில் ஐந்து நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மிரட்டலையும் மீறி நீதிமன்றப்படியேறினார் மிதாலி. வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மிதாலி வரும்போது, ஐவரும் வழிமறித்து கத்தியால் தாக்கியதோடு பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்திவிட்டு தப்பியோடினர்.

90 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மிதாலி, ஹைதராபாத் குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட அதே தினத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மரணத்துக்கு முன், "குற்றவாளிகளை விடக்கூடாது. அவர்களைத் தூக்கில் போடவேண்டும். அதுதான் எனது கடைசி ஆசை' என கூறிவிட்டு இறந்தார். பலியான பெண்ணின் தந்தை "எனக்கு இழப்பீடு வேண்டாம். ஹைதராபாத் கொடூரர்களைப் போல இந்த ஐந்து பேரையும் ஓட விட்டுச் சுட்டுத் தள்ளுங்கள்' என கலங்கிய கண்களுடன் கொந்தளித்தது பலரையும் திகைக்க வைத்தது.


அதே உன்னாவ் பகுதியில்தான் 2017-ல் எம்.எல்.ஏ. செங்கார் குல்தீப் மற்றும் அவரது சகோதரர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் கொடுத்தார் மற்றொரு பெண். இந்த வழக்கைப் பதிவுசெய்வதற்கே, பாதிக்கப்பட்ட பெண் உ.பி. முதல்வர் யோகி வீட்டின் முன் தீக்குளிப்பு நடவடிக்கையில் இறங்கவேண்டியிருந்தது. இதன்பிறகும், காவல்துறை விசாரணை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையைத் துன்புறுத்த, அவர் மரணமடைந்தார்.

2019, ஜூலை மாதம் அவரும் அவரது உறவினர்களும் வந்த வாகனம் மற்றொரு கனரக வாகனம் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இருவர் இறந்துபோக, அந்தப் பெண் டெல்லி எய்ம்ஸில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். விபத்துக்கு சில தினங்கள் முன்தான், தனது உயிருக்கு ஆபத்திருக்கிறது என இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார் அந்தப் பெண்.

அதிகபட்ச பாலியல் வல்லுறவுகள், பாலியல்ரீதியாகத் தாக்கப்பட்ட வழக்குகள் பதிவாகி இந்தியாவின் பாலியல் வன்புணர்வுத் தலைநகராக உன்னாவ் பெயர்பெற்றிருக்கிறது. இவ்வருடம் நவம்பர் மாதம் வரைக்கும் மட்டும் 86 வல்லுறவு வழக்குகளும், 185 பாலியல் காரணங்களுக்காக தாக்கப்பட்ட வழக்குகளும் இம்மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

உன்னாவில் மிதாலி கொளுத்தப்பட்ட அதே இடத்தில், ஹிந்துபுர் கிராமத்தைச் சேர்ந்த மற் றொரு பெண்ணை டிசம்பர் 7 ஆம் தேதி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்க முயற்சி நடந்திருக்கிறது. அவர் காவல்நிலையத்தில் புகார்கொடுக்க முயன்றபோது, "அதுதான் ரேப் நடக்கலையே… ரேப் நடந்தபிறகு வா. புகாரைப் பதிவு செய்கிறோம்' என திருப்பியனுப்பியிருக்கிறது காவல்துறை.

பொற்கால ஆட்சிக்கு உதாரணமாக ராம ராஜ்யத்தைக் குறிப்பிடும் பா.ஜ.க.வின் முன்னுதா ரண முதல்வர் ஆதித்யநாத் ஆட்சிசெய்யும் உ.பி. ராமராஜ்யமாய் இல்லாமல் காமராஜ்யமாய் இருப்பதுதான் முரண்! உ.பி. அமைச்சர் ரன்வேந்திர பிரதாப்போ, "ராமரே வந்தாலும் சமூகத்தில் குற்றங்கள் நடப்பதைத் தடுக்க முடியாது'' என சப்பைக் கட்டு கட்டுகிறார்.

"தமிழகத்தில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்டவர் கள் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வீடியோவும் எடுத்தனர். இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது' என பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் கொந்தளிக்கின்றனர். காளியப்பன்கவுண்டன்புதூரைச் சேர்ந்த முதுகலை வரலாறு படிக்கும் கீதாவும், சைகாலஜி படிக்கும் சிந்துவும், "ஒரு பெண்ணைச் சீரழிச்சுக் கொன்னதுக்கே, என்கவுன்ட்டர் பண்ண தெலங்கானா போலீஸைப் பார்த்துப் பிரமிச்சுப் போயிட்டோம். 300-க்கும் மேற்பட்ட பெண்களைப் பாழாக்கினவங்க பல மாசமா சிறைக்குள்ள நிம்மதியா இருக்காங்க'' என கொதிக்கிறார்கள்.

தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில், ஜி.எஸ். மணி, பிரதீப்குமார் எனும் இரு வழக்கறி ஞர்களும், எம்.எல்.ஷர்மா எனும் வழக்கறிஞரும் இரு தனித்தனி பொதுநல வழக்கொன்றை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர். அதேசமயம் தெலங்கானா உயர்நீதிமன்றமும் கொல்லப்பட்ட நால்வரின் போஸ்ட்மார்ட்டத்தை வீடியோ எடுத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. நிகழ்ச்சியின் தீவிரம் கருதி தேசிய மனித உரிமைகள் ஆணையமும் என்கவுன்ட்டர் நடந்த இடத்துக்கே வந்து ஆய்வுசெய்துள்ளது. அதேபோல உன்னாவ் மிதாலி வழக்கில் அலட்சியமாக இருந்த 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இந்தியா முழுமையும் பெண்கள் பாலியல் வல்லுறவு, கொலை தொடர்பான வழக்குகள் நடைபெறுவது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தியா செல்லும் தம் நாட்டுப் பெண்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. பாரத மாதாவோ, சர்வதேச பார்வைகளின் அழுத்தம் தாங்காது தலைகுனிந்து நிற்கிறாள்.


-க.சுப்பிரமணியன்.

 

 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.