Skip to main content

"ஒரு பெண் விரும்பவில்லை என்றால் அவளை தொடக்கூடாது என்ற..." - மனநல மருத்துவர் ஷாலினி!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

தெலங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு கால்நடை மருத்துவர் ஒருவரை இளைஞர்கள் நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அவர்கள் அனைவரும் தற்போது கொல்லப்பட்ட நிலையில், இது தொடர்பாக நம்முடையகேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பிரபல மனநல மருத்துவர் ஷாலினி. நம்முடைய கேள்விகளுக்கு அழரின் பதிலிகள் வருமாறு, 


சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

ரொம்ப வருத்தமான ஒரு நிகழ்வு. நிர்பயா படுகொலைக்கு பிறகு இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக நிதி வசூல் கூட செய்தார்கள். ஆனால் என்ன நடக்கிறது, சட்ட திட்டங்கள் இருந்தும் எதுவுமே பலனளிக்கவில்லை. இது மாதிரியான தொடர் உயிர்பலிகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. ஆண்களை பொறுத்தவரையில், நீ பெண் தானே என்ற மனநிலையில் தொடர்ந்து இருக்கிறார்கள். இந்த மனநிலையில் ஆண்கள் இருக்கும் வரையில் இந்த சூழலை மாற்றுவது கடினம். பெண் ஒருவர் இந்த மாதிரி பெண்கனை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சிறையில் இருக்கும் நூறு நபர்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்டபோது, அவர்கள் இந்த பலாத்காரத்துக்கு இதே போன்றதொரு ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை தெரிவித்துள்ளார்கள். தாங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு பெண்கள் ஒரு காரணம் என்ற கோணத்தில் அவர்களுடைய பதில் இருப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. அவர்களுடைய வாழ்வுக்கு அவர்கள் வளர்ந்த சூழல், குடும்ப சூழ்நிலை, அவர்களின் கல்வி என பல காரணங்கள் அவற்றை நிர்ணயம் செய்கிறது. 


ஆனால் அது எதனையும் உணராமல் மற்றொருவரின் மீது பழிபோடுவது மிகவும் கொடூரமான மனநிலையின் வெளிப்பாடு ஆகும்.  ஆனால், நாங்கள் ஆண்கள், இந்த சமூகமோ அல்லது பெண்களோ எங்களை மதிக்கவில்லை என்றும், தங்களுக்கான மரியாதை அவர்கல் தரவில்லை என்றும் சிறைச்சாலைகளில் இருந்த குற்றவாளிகள் கூறியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய வருகிறது. ரேப்பிஸ்ட்டுகள் இந்த மாதிரி பேசுவது ஒருபுறம் என்றால், அதை தடுத்து எதிர்குரல் கொடுக்க வேண்டியவர்களும் பெண்களுக்கு அறிவுரை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மாதிரி நேரத்தில் காண்டம் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றோ அல்லது பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்வதோ அபத்தமான ஒன்றாகத்தான் இருக்கும்.  இன்னும் எவ்வளவு காட்டு மிராண்டி கூட்டமாக அவர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள். ஒரு பெண் விரும்பவில்லை என்றால் அவளை தொடக்கூடாது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் தானாக அவனிடம் வர வேண்டும் என்று நினைக்கும் இவர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது? இந்த மனநிலையில்தான் பெருபாலான ஆண்கள் இருக்கிறார்கள். ஆண்களுக்கு நாம் எந்த மாதிரியான படிப்பினையும் சொல்லிதரவில்லை. அவர்களின் மனமாற்றத்திற்கு நாம் எதுவும் செய்யவில்லை என்று நம்முடைய கூட்டு தோல்விதான். 

தனியாக பலாத்காரங்கள் நடைபெற்று வந்த நிலையில் கூட்டு பலாத்காரம் அதாவது ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் இந்த மாதிரியான சம்பவங்களில் ஈடுபடுவது எந்த மாதிரியான மனநிலையின் வெளிப்பாடு?

இது மிகப்பெரிய வக்கிரத்தின் உச்சம் என்றுதான் பார்க்க வேண்டும். இந்த மாதிரியான ஆட்கள் தனியாக பெண்களிடம் பேச கூட மாட்டார்கள். அதற்கு அவர்களிடம் தைரியம் இருக்காது. ஆனால், நண்பர்களுடன் கூட்டாக இருக்கும்போது அவர்களுக்கு இந்த மாதிரியான செயல்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒன்னா கஞ்சா அடித்தோம், குடித்தோம் அதே போல இதையும் செய்வோம் என்ற மனநிலையில்தான் இவர்களின் எண்ணம் இருக்கிறது. அதில் இருந்து அவர்களை வெளிக்கொண்டு வருவதே இந்த சம்பவத்தில் நாம் கற்க வேண்டிய ஒன்று. அவர்களுக்கு முறையான கல்வியும், அவர்களை கண்காணிப்பதுமே இதனை படிப்படியாக குறைப்பதற்கான வழிமுறைகள் ஆகும். இத்தகைய மாற்றத்தினை நோக்கி நாம் செல்வது இந்தமாதிரியான நேரத்தில் மிக மிக்கியமான அவசியமான ஒன்று.