மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக அமைச்சர் சண்முகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் அ.தி.மு.க.வில் மீண்டும் உள்கட்சி மோதலை வெடிக்க வைத்திருக்கிறது. "எடப்பாடியின் டபுள் கேம் விளையாட்டில் சண்முகம் அதிர்ந்துபோயிருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க.வினர்.
ஒரே நாடு ஒரே தேர்தல்' என்கிற கொள்கையை அமல்படுத்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நாடாளுமன்ற வளாகத்தில் 19-ந்தேதி நடத்தினார் பிரதமர் மோடி. இதில் கலந்து கொள்வதற்காக 40-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கூட்டத்தை காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஸ்ட்ரிய சமிதி உள்பட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஐக்கிய ஜனதா தளம், தேசிய வாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, அகாலி தளம், பி.டி.பி., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் உள்பட 15-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க. தலைமைக்கும் அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தையும், ராஜ்யசபா எம்.பி. வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனையும் அனுப்பி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், அவர்கள் இருவரையும் கூட்டத்திற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது பிரதமர் அலுவலகம். இதனால் அவர்கள் மனம் நொந்தனர். மத்திய அரசின் இந்த அணுகுமுறை அ.தி.மு.க.வை மட்டுமல்ல பல்வேறு அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சியடையவே செய்தது.
தேசிய அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவரும் அரசியல் விமர்சகருமான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தேவசகாயம், நாடாளுமன்றத் தேர்தல் இப்போதுதான் முடிந்திருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகாலம் மோடியின் ஆட்சி நீடிக்கும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முழக்கத்துக்கு என்ன அவசியம் வந்தது? இதே முழக்கத்தை 3 ஆண்டுகளாக சொல்லி வருகிறார் மோடி. ஜனநாயகத்திற்கு இது உகந்ததல்ல. இதில் மறைமுகமாக மிகப்பெரிய சதி இருப்பதாக சந்தேகம் வருகிறது. அதாவது, நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே தேர்தல் நடப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.
சில மாதங்களில் ஒரு மாநிலத்தில் அரசியல் சூதாட்டம் நடந்து ஆட்சி கவிழ்ந்தால் அந்த மாநிலத்துக்கு தேர்தல் நடத்தித்தானே ஆக வேண்டும்? ஆனால், நடத்த மாட்டார்கள். மாறாக, நாடாளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் வருகிறதோ அப்போது அந்த மாநிலத்துக்கும் சேர்த்து தேர்தல் நடத்துவார்கள். அது வரை கவர்னர் ஆட்சியை அந்த மாநிலத்தில் அமல் படுத்துவார்கள். ஆக, பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை சூழ்ச்சி செய்து கவிழ்த்து கவர்னர் ஆட்சியை நிலைநிறுத்துவது தான் பா.ஜ.க.வின் நோக்கம். அதற்காகத்தான் இதனை பேசுபொருளாக மாற்றுகிறார்கள். அதேசமயம், தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு மோசடியான தேர்தலை நடத்தி வெற்றி பெற்றிருப்பவர் மோடி. அதை திசைத் திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை கையிலெடுத்திருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகத்திற்கு அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியது கண்டிக்கப்பட வேண்டிய விசயம். சண்முகம் என்பவர் தனி மனிதர் அல்ல. அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர். அவரை அவமதிப்பது தமிழகத்தையே அவமதிப்பதாகும். சட்டத்துறை என்கிற முக்கியமான துறையை வைத்திருப்பவர். தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ளுமளவுக்கு அந்த ஆலோசனை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் டெல்லிக்கு அடிமைகளாக இருப்பதால்தான் தமிழகம் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டே வருகிறது'' என்கிறார் ஆவேசமாக நம்மிடம்.