பெரியார் சிலையை உடைப்போம் என தெரிவித்த எச்.ராஜாவை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை என்பது நாடறிந்தது என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை புல்டோடசர் மூலம் நேற்று அகற்றப்பட்டது. லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில், ''இன்று திரிபூராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை'' என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி,
திரிபுராவில் பங்களாதேஷில் இருந்து குடியேறிய வங்காளிகளுக்கு மத்தியில் துவேஷ உணர்வுகளை தூண்டிவிட்டு, அவர்களின் ஆதரவோடு குறுக்கு வழியில்தான் பாஜகவினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இப்போது வெற்றி மமதையில் அங்குள்ள லெனின் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். என்னைப் போன்றவர்களுக்கு சிலை வைப்பதிலேயோ, சிலை வழிபாட்டிலேயோ உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் சிலையை நம்பக் கூடியவர்கள், அதனை மதிக்கக்கூடியவர்களுடைய உணர்வுகளை மதிப்பதென்பது ஒரு ஜனநாயக சிந்தனையாகும்.
அந்த அடிப்படையில் லெனின் சிலையை தங்களது குறியீடாக, 25 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடும் விதமாக திரிபுராவில் கம்யூனிஸ்ட்டுகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் வைத்துள்ளனர். இன்று அவர்கள் தோல்வியை தழுவியிருக்கக் கூடிய சூழலில், வெற்றி பெற்றவர்கள் அந்த சிலையை சேதப்படுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை கண்டிக்கிறேன்.
அதேபோல் சம்பந்தமில்லாமல், இங்கு பெரியார் சிலையையும் உடைப்போம் என்று எச்.ராஜா கூறியிருப்பது மிக மிக கண்டிக்கத்தக்கது. எச். ராஜாவின் இந்த கருத்து அதிர்ச்சியை தருகிறது. பெரியார் ஊட்டிய இனமான உணர்வு காரணமாகத்தான், இன்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது குறிப்பிட்ட சிலருக்கு பிடிக்கவில்லை. அந்த கோபத்தில்தான் இப்போது பெரியார் சிலையை உடைப்போம் என்று சொல்கிறார்கள்.
பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை என்பது நாடறிந்தது. அப்படி நடக்குமேயானால் அதனால் நடக்கக்கூடிய தமிழின கொந்தளிப்புகளை யாராலும் அடக்க முடியாது என்பதும் தெரியும்.
கம்யூனிஸ்ட்டுகளையும், தமிழின பற்றாளர்களையும், திராவிட இயக்க உணர்வாளர்களையும்,சிறுபான்மையினரையும் சம்மந்தமில்லாமல் தீண்டும் விதத்தில் பேசுவதை அவர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.அவரது இதுபோன்ற பல கருத்துகளை தமிழக பாஜக வினர் ஏற்பதில்லை என்பதையும் அறிய முடிகிறது.
கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு,? லெனினுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்கிறார்கள். நம்முடைய காந்திய கொள்கைகளைத்தான் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் விரும்பிகிறார்கள். நம்முடைய மகாத்மா காந்திக்கு அங்கெல்லாம் மிகப்பெரிய மரியாதை தருகிறார்கள். அந்த நாடுகளில், காந்திக்கும் நம்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்,? காந்திய கொள்கைகளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? என்று யாரும் கேட்கவில்லை.
உலகலாவிய சிந்தனைகளை ஊட்டியவர்களுக்கு யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தமிழ் கொள்கைதான் பொருந்தும். எச்.ராஜாவின் கருத்து தவறானது.சட்ட - ஒழுங்கையும்,பொது அமைதியையும்,கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கெடுக்கக்கூடாது.
வெறியை ஊட்டக்கூடிய வகையில் அவர் தொடர்ந்து பேசி வருவதை இனியும் பொருத்துக்கொள்ளக் கூடாது. தமிழக அரசு அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஏனென்றால் தொடர்ந்து மதவெறியை, இனவெறியை, தமிழின விரோத கருத்துக்களை, திராவிட இயக்கத்தோடு மோதும் சிந்தனைகளை அவர் பரப்பி வருகிறார்.
இது தமிழ்நாட்டினுடைய அமைதிக்கும், ஒற்றுமைக்கும் உகந்ததாக தெரியவில்லை. தமிழக மக்கள் இவர்களைப்போன்றவர்களை அடையாளம் கண்டு புறந்தள்ள வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம். இவ்வாறு கூறினார்.