"பா.ஜ.க. தலைமைக்கு 500 கோடி, இங்கும் 300 கோடி கொடுத்து சரிக்கட்டியாச்சி. அதனால் அண்ணன் வீட்டுல ரெய்டுங்கிற பேச்சிக்கே இடமில்லை" என காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு திரிந்த முன்னாள் அமைச்சர் காமராஜின் பினாமிகளும், ஆதரவாளர்களும் இப்போது கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதான ரெய்டு வரிசையில் ஏழாவதாக சிக்கியிருக்கிறார் மாஜி உணவு மந்திரியும் திருவாரூர் அ.தி.மு.க. மா.செ.வுமான ஆர்.காமராஜ். தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 58.44 கோடி மதிப்பிற்கு சொத்து சேர்த்திருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து இவர் மீதும் இவரது மகன்களான இனியவன், இன்பன், மற்றும் அவரது கல்லூரி நண்பர்களான சந்திரகாசன், உதயக்குமார், லாரி காண்ட்ராக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீதும் 7-ஆம் தேதி முறைப்படி வழக்கைப் பதிவு செய்துவிட்டு மறுநாள் அதிகாலையே ரெய்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
திருவாரூர் மாவட்டத்தில் 38 இடங்களிலும், சென்னையில் 6 இடங்களிலும், கோவையில் 1 இடத்திலும், திருச்சியில் 3 இடத்திலும், தஞ்சாவூரில் 4 இடத்திலும் என மொத்தம் 52 இடங்களில் 8-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர்.
மன்னார்குடியில் உள்ள அவர் வீட்டில் அதிகாலை 5.40 மணிக்கு துவங்கிய சோதனை, மாலை 7 மணிவரை தொடர்ந்தது. முன்னாள் அமைச்சர் காமராஜை ஒரு அறையிலும், அவரது மூத்த மகனை ஒரு அறையிலும், அவரது மனைவி லதா மகேஷ்வரியை ஒரு அறையிலும் வைத்து நீண்ட நேரம் துருவித் துருவி முதலில் விசாரணை செய்தனர். மூன்று பேரின் பதில்களும் ஒத்துப் போகவில்லையாம்.
குறிப்பாக, தஞ்சாவூரில் சுமார் ரூ.800 கோடியில் கட்டப்பட்டுவரும் மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனை குறித்த கேள்விக்கு, மூன்று பேரிடமிருந்தும் முரணான பதில்கள் வந்துள்ளன. அதேபோல அவர் வீட்டிற்குப் பின்புறம் வசிக்கும், அவரது மனைவி லதா மகேஸ்வரியின் தங்கை ஆண்டாள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தி, அதே கேள்வியை கேட்டுள்ளனர்.
மேலும், சில தகவல்களைப் போட்டு வாங்குவதற்காக, நீங்க ஓ.பி.எஸ். ஆதரவாளரா? எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரா? என்று அதிகாரிகள் ஆண்டாளிடம் கேட்க, “எங்க அக்கா வீட்டுக்காரர் காமராஜ் எங்க இருக்காரோ அங்கதான் இருப்போம்” என்று அவர் கூறியிருக்கிறார். ஆனாலும் விடாப்பிடியாக “ஓ.பி.எஸ்.ஸை காமராஜின் மகன்கள் உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவாங்க தானே?” என குதர்க்கமான கேள்வியையும் அதிகாரிகள் கேட்க, “அது அப்போ, இப்ப இல்லங்க” என கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட சுவாரஸ்யங்களும் ரெய்டின் போது நடந்திருக்கிறது.
மன்னார்குடி அருகே ஸ்தோத்ரியம் கிராமத்தைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டபட்டவர்தான் காமராஜ். 2001 ராஜ்யசபா எம்.பி.யாகும்வரை மன்னார்குடி சைக்கிள் கடை ஒன்றுதான் அவரது அலுவலகம். இப்போது?
மன்னார்குடியில் இருக்கும் பிரமுகர்கள் சிலரிடம் மேலும் நாம் விசாரித்தபோது, “விவசாயம் உட்பட எந்தவிதத் தொழிலும் இல்லாமல் இருபது ஆண்டுகளில் அவருக்கு இவ்வளவு கோடி சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? மன்னார்குடியில் மட்டும் 30 வீடுகள் உள்ளன. திருச்சியில் ஸ்கூல், ஆந்திராவில் சொத்து, நன்னிலத்தில் வீடு, மலேசியாவில் ஒரு நிறுவனத்தில் முதலீடு, மன்னார்குடியில் இருந்து சென்னையில் செட்டில் ஆன சேட் ஒருவர் மூலம், சென்னையில் மூலதனம், அசோக்குமார் என்பவரின் கிளினிக், சந்தப்பேட்டையில் ஒரு லட்சம் சதுர அடியில் இடம், அதோடு சுமார் 500 ஏக்கருக்கு மேல் விளைநிலம், இது தவிர முன்னாள் சேர்மன் ஒருவரது பெயரில் பேருந்துகள், தற்போது ரூ. 800 கோடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என குவித்து வைத்துள்ளார்” என்கிறார்கள் அழுத்தமாக.
தஞ்சையைச் சேர்ந்த அந்த அ.தி.மு.க. பிரமுகரோ, "எங்க ஊரில் அவர் தன் சம்பந்தி பெயரில் 800 கோடி ரூபாயில் கட்டிய, ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் மிஷனின் திறப்பு விழா வருகிற 14-ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஏற்கனவே இங்கிருக்கும் ஒரு மல்டி லெவல் மருத்துவமனை நிர்வாகத்தினர், தி.மு.க. தலைமையிடம் முறையிட்டுள்ளனர். அதனால்தான் இந்த ரெய்டு” என்று தன் யூகத்தைச் சொன்னார்.
சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் தரப்போ, வருமானத்துக்கு அதிகமாக அவர் 58 கோடி ரூபாய் சேர்த்து வைத்ததற்கான ஆதாரத்தோடுதான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கான சப்போர்ட் டாக்குமெண்ட் ஏதாவது இருக்குமா? என்பதை அறியவே இந்த ரெய்டை நடத்தினோம். இந்த ரெய்டுத் தகவல், நாங்கள் போவதற்கு முன்பாகவே, அவருக்கு பாதுகாப்பாக இருந்த ஒரு போலீஸ் மூலம் தெரிந்துவிட்டது. அவரது வீட்டை முன்னதாகவே நோட்டமிட்ட போது, காமராஜ் வீட்டிலிருந்த லேப்டாப் ஒன்றை, அவர் வீட்டின் பின்புறமாக எடுத்துச் சென்று காமராஜின் மனைவி, தன் சகோதரியான ஆண்டாள் வீட்டில் வைத்ததை நாங்கள் பார்த்துவிட்டோம். நாங்கள் கவனித்ததை அந்த வீட்டு பெண் ஒருவர் பார்த்துவிட்டு, அந்த லேப்டாப்பை, கம்மாளத் தெருவில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் கொண்டுபோய் வைத்துவிட்டார். அதையும் கவனித்துவிட்ட நாங்கள், அதைக் கைப்பற்றிவிட்டோம். காமராஜ் அதன் பாஸ் வேர்டைக் கொடுக்க மறுத்துவிட்டார். அதில் தான் பல ஆவணங்கள் இருக்கலாம் என நம்புகிறோம். தற்போது அந்த லேப்டாப்பைக் கைப்பற்றும் முயற்சியில் காமராஜ் தரப்பு இறங்கி யிருக்கிறது” என்கிறார்கள் புன்னகையோடு.
இதுகுறித்து லோக்கல் தி.மு.க.வினரிடம் கேட்டபோது, "காமராஜுக்கு மிக நெருக்கமான, இடதுகை, வலதுகை போன்றவர்களைத் தொடவில்லை. அவர்கள்தான் ஆட்களைத் திரட்டிவந்து வாசலில் கோஷமிட்டபடி நிற்கிறார்கள். மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் தினகர், முன்னாள் வைஸ்சேர்மன் வரலட்சுமி, நெடுவாக்கோட்டை ஆர்.எஸ். கலைவாணன். ஜவுளிக்கடை அதிபர் ஒருவர், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் ராம.குணசேகரன், கலியபெருமாள் என அவரது பெரும் பினாமிகள் பலரும் இப்போது தப்பியிருக்கிறார்கள்'' என்று ஒரு பட்டியலையே ஒப்பிக்கிறார்கள்.
மாஜி காமராஜோ "ரெய்டில் ஒரு ஆவணமும் சிக்கவில்லை. எனது மகன்கள் கடனுதவி பெற்றுதான், மருத்துவமனையைக் கட்டுகிறார்கள். நான் ஊழல் செய்ததாகக் கூறும் தொகையை விட அதிக அளவில் கடனில் இருக்கிறேன். இதை சட்டரீதியாகச் சந்திப்பேன்” என்றார் காட்டமாக.
“அடேங்கப்பா... இது உலக மகா நடிப்புடா சாமி” என்கிறார்கள் திருவாரூர்- மன்னார்குடி வாசிகள்.