Skip to main content

உண்மை சுடுவதால் மோடி தடுமாறுகிறார்: பாஜகவுக்கு ஜோதிமணி பதிலடி

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
rahul-modi


கடந்த 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீதும், பாஜக அரசு மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துப் பேசிய மோடி, அதிகாரப் பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர் என குறிப்பிட்டார். பாஜகவினர், ராகுலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்கின்றனர். 
 

 

 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி:-
 

பாஜகவினரின் பதில் அவர்களின் அறியாமையையும், அகம்பாவத்தையும்தான் காட்டுகிறது. ராகுல்காந்தி கேட்ட உண்மைகள் அவர்களுக்கு சுடுகிறது. ராகுல்காந்தி கேட்ட 10 கேள்விகளும் அனைத்து இந்தியர்களின் மனதிலும் இருக்கிறது. இந்த 10 கேள்விகளில் ஒரு கேள்விக்குக்கூட பிரதமரால் பதில் சொல்ல முடியவில்லை. உண்மை சுடுகிறது என்பதால், ராகுல் காந்தியை எதிர்கொள்ள முடியாமல், அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், பாஜக தடுமாறி பதற்றப்பட்டு என்னசெய்வதென்று தெரியாமல், ராகுல் காந்தி குழந்தைத்தனமாக பேசுகிறார். சின்னப்பிள்ளைத்தனமாக பேசுகிறார் என்று சொல்கிறார்கள்.

மக்கள்தான் பாஜகவைப் பார்த்து சிரிக்கிறார்கள். ராகுலின் 10 கேள்விகளில் எந்தக் கேள்வி சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது?. தொடர்ந்து மக்கள் மீது வெறுப்பை விதைத்து, பிரிவிணையை விதைத்து, எல்லா மதமும், எல்லா இனமும் ஒற்றுமையாக வாழும் இந்தியா என்ற இமேஜை கெடுத்து ஒரு வெறுப்பின் அரசியலை நடத்துகின்றனர்.

 

 


இந்த சூழலில் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் வெறுப்புக்கு எதிராக அன்பைத் தவிர வேறு எதனை முன்னிருத்த முடியும். அரசியலில் அதிகாரம் மட்டுமே நோக்கமல்ல என்று 2014 தேர்தலின்போதே ராகுல் சொன்னார். இரண்டு கட்சிகளுக்கிடையேயான போட்டி அல்ல, இரண்டு தனி மனிதர்களுக்கிடையேயான போட்டி அல்ல, இரண்டு சித்தாங்களுகிடையேயான போட்டி. ஒரு சித்தாந்தம் ஒரு தேசத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. வெறுப்பு, அதிகாரம், அகம்பாவம் என்ற சித்தாந்தத்துக்கு எதிராக அன்பு, சேவை, பொறுப்பு என்பதை மட்டுமே நிறுத்த முடியும். 
 

இந்தியா முழுவதும் நடந்த 10 இடைத்தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. மக்கள் எதிர்பார்ப்பு என்ன?. எப்படியாவது பாஜக அரசை வீழ்த்தி, மக்களுக்கான அரசை அமைக்க வேண்டும். அதற்கு ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  
 

பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்று மோடி குற்றம் சாட்டுகிறார். பிரதமர் பதவிக்கு ஆசையில்லாமல்தான் குஜராத்தில் இருந்து மோடி வந்தாரா? குஜராத்திலேயே இருக்க வேண்டியதுதானே? பிரதமர் யார் என்று மக்கள் தீர்மானிப்பார்கள். அதிகாரம், ஆடம்பரம், மமதை அவர்களின் கண்ணை மறைத்துள்ளது. 
 

ராகுல்காந்தி பேசும்போது மோடியை பார்த்து சொல்கிறார், என்னை தாக்கி பேசுகிறீர்கள். ஆனால், உங்கள் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அன்புதான் இருக்கிறது. அன்பை செலுத்தி, உங்கள் மனதில் உள்ள வெறுப்பை எடுப்பதாக சொல்லிதான் மோடியை கட்டி அணைக்கிறார். அதுவெறுமனே கட்டிப்பிடிப்பது அல்ல. ஒரு சித்தாந்தத்தை விளக்குகிறார். இதனைவிட எப்படி விளக்க முடியும். 

சாதாரண டீ கடையில் இருந்து உலக அளவில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை வரை ராகுல் காந்தியின் பேச்சு சென்றடந்துள்ளது. மக்கள் மத்தியில் ராகுலின் பேச்சு சென்றடைந்திருக்கிறது என்ற புரிதல் கூட இல்லாத, தொலைதூரத்தில்தான் பாஜகவும், பிரதமரும் இருக்கிறார்கள். அதற்காக பாஜக மீது பரிதாபப்பட வேண்டியதுதான். 
 

 

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டதா காங்கிரஸ்?
 

நிச்சயமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது. அதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தினால் மட்டுமே இந்திய தேசத்தை காப்பாற்ற முடியும். ஒரு தேசம் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருக்கிறபோது, கட்சிகள் தன்னுடைய வேறுபாடுகளை களைந்து, விட்டுக்கொடுத்து பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும், அப்போதுதான் இங்கு மக்களுக்கான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்கிற புரிதல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வந்துள்ளது. அந்த அடிப்படையில் காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க பெரிய கட்சி என்பதால் எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய இடத்தில் உள்ளது. அதனை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மிகப்பொறுப்புடன் திறம்பட செய்வார். 



 

சார்ந்த செய்திகள்