கர்நாடகாவில் முற்போக்கு எழுத்தாளர்கள் அடுத்தடுத்து இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். 2015 ஆம் ஆண்டு தோழர் கோவிந்த பன்சாரே மற்றும் எம்.எம்.கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்டார்கள். 2017ஆம் ஆண்டு கவுரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளரை அவருடைய வீட்டு வாசலிலேயே சுட்டுப் படுகொலை செய்தனர்.
கர்நாடகாவிலும், மகாராஸ்டிராவிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற காரணமாக இருந்தவர்களை ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்புகள் குறிவைத்து கொலை செய்தன.
கவுரி லங்கேஷை கொலை செய்தவர்களை இந்தியாவின் அனைத்துத் தரப்பினரும் கண்டித்தனர். ஆனால், பிரதமர் மோடி இதுபற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கவுரி லங்கேஷ் கொலையாளிகள் 4 பேரை ஜூன் மாதம் 4 ஆம் தேதி கர்நாடகா போலீஸார் கைது செய்தனர்.
இந்தக் கைது நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், குற்றவாளிகள் கைது குறித்து பேட்டியளித்த ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலீக், கர்நாடகாவில் ஒரு நாய் செத்தாலும் மோடி கருத்துச் சொல்லனுமா என்று கேட்டார்.
அவருடைய கருத்து இந்தியா முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் குமாரசாமி கூறியிருக்கிறார்.
இது முதல்முறை அல்ல. மத்திய பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ பன்னாலால் சாக்யா, இந்துப் பெண்கள் இந்துக் கலாச்சாரத்தை காக்கும் குழந்தைகளை பெற வேண்டும், இல்லையென்றால் கருத்தரிக்காமலே இருந்துவிடலாம் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இவரே இன்னொரு இடத்தில், பெண்களுக்கு பாய்ஃபிரண்ட் இருக்கக்கூடாது. மேற்கத்திய கலாச்சாரத்தை நமது பெண்கள் கடைப்பிடிக்கக் கூடாது, அதனால்தான் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்று கூறினார். இது இளைஞர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி, சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் மோடியே சொன்னாலும் பாஜகவினர் கேட்பதாக இல்லை. அவர்கள் எப்படி கேட்பார்கள். மோடியே பல சமயம் சர்ச்சைக்குரிய பொய் தகவல்களை கூறிவிட்டு மாட்டிக் கொள்கிறவர்தானே.
தாஜ்மஹாலுக்கு ராம் மஹால் என்று பெயர் வைக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திரசிங் என்பவர் கருத்துத் தெரிவித்து கடுமையான எதிர்ப்பை சம்பாதித்தார். இவர்தான் முன்பு, அரசு அதிகாரிகளைக் காட்டிலும் பாலியல் தொழிலாளர்கள் அருமையாக வேலை செய்வார்கள் என்று பேசி அரசு ஊழியர்களின் வெறுப்பைத் தேடிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோலத்தான், எந்த விஷயத்திலும் பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது சாதாரணமாகிவிட்டது.