நாடக கலைஞர்களையும், மேடை நாடகங்களையும் ஊக்குவிக்கும் முயற்சியாக சென்னையில் முதல் முறையாக பிரம்மாண்ட நாடகத் திருவிழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் கேரள சமாஜம் இணைந்து நடத்தும் இந்த நாடகத் திருவிழாவில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 500 நாடக கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். நேற்று தொடங்கிய இந்த நாடகத் திருவிழா வரும் 6 ஆம் தேதி வரை, 5 நாட்கள்கள் நடைபெற உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கேரள சமாஜம் அரங்கில் நடைபெறும் இந்த நாடகத் திருவிழாவில் 5 மொழிகளில், 32 நாடகங்கள் அரங்கேற உள்ளது. தென்னிந்தியா முழுவதிலும் உள்ள பல முன்னணி நாடக கலைஞர்கள் பங்கேற்கும் இந்த நாடகத் திருவிழா தமிழகத்தின் பிரம்மாண்டமான நாடகத் திருவிழாவாக கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதன் தொடக்கவிழா மிகச்சிறப்பான முறையில் நேற்று நடைபெற்றது. கடந்த சில வாரங்களாகவே திரை நட்சத்திரங்கள், நாடக கலைஞர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் என இந்நிகழ்ச்சியின் சிறப்புக்களையும், நாடகங்களின் தாக்கங்களையும் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களில் எடுத்து கூறி வருகிறார்கள். அந்த வகையில் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்த நாடக விழா தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் நாசர், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.