கடலூர் மாவட்டத்தில் நிறுவ உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், உர விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாதாந்திர கூட்டம் ஆட்சியரக வளாக கூட்ட அரங்கில் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் கூட்ட தொடக்கத்தில் கூட்ட அரங்கம் முன்பாக கடலூர் மாவட்டத்தில் நிறுவ உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், உர விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அது தொடர்பான கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய விவசாயிகள் 2016-17 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு, சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள நிலுவைத்தொகை, ஆரூரான் சர்க்கரை ஆலை பகுதியிலிருந்து அம்பிகா சர்க்கரை ஆலைக்கு அரவை மாற்றிய கரும்புகளுக்கான தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.